நடிகர் கார்த்திக்கின் மகனாக இருந்தாலும் அமைதியாக புன்னகையோடு பேசுகிறார் கௌதம் கார்த்திக். மணிரத்னத்தின் ‘கடல்’ படம் மூலம் அறிமுகமாகியவர். படம் சொதப்பியதால் பெரிய இடங்களுக்கு உடனே பறந்துவிட முடியாவிட்டாலும் தற்போது ‘என்னமே ஏதோ’, ‘வை ராஜா வை’ போன்ற படங்களில் பிஸியாக இருக்கிறார். மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறார். அவரைச் சந்தித்தபோது
நடிகராவேன் என்று நீங்கள் நினைத்துண்டா?
எல்லோரையும் போல எனக்கு சினிமா ஆர்வம் உண்டு. ஆனால் சினிமாவில் நடிக்கவேண்டும் என்று நினைத்ததே இல்லை. அப்பாவும் என்னை நடிகனாக்கிப் பார்க்கவேண்டும் என்று நினைத்ததேயில்லை. ஒருநாள் கூட அவரிடம் சினிமா சம்பந்தமாகப் பேசியதில்லை. சிறுவயதிலேயே படிக்க பெங்களூர் சென்றுவிட்டேன். விடுமுறைகளில்தான் சென்னைக்கே வருவேன். ‘சினிமா ரிஸ்க்கான ஏரியா. நிறைய சமாளிக்கத் தெரியவேண்டும்’ ன்னு அப்பா சொல்லுவார். இன்று ரிஸ்க் எடுக்கலாம் என்று நானே வந்துவிட்டேன். தாத்தாவும், அப்பாவும் சினிமாவில் சாதனையாளர்கள். அந்த வழியில் இப்போது நானும் வந்து நிற்கிறேன். இன்னும் நிறையத் தூரம் போகவேண்டியிருக்கிறது.
பிரபுவுடன் தற்போது நடித்துவருகிறீர்களே..
‘என்னமோ ஏதோ’ படத்தில் பிரப சாருடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தகப்பன் போல பக்கத்தில் அமர்ந்து அவ்வளவு விஷயங்கள் கற்றுக்கொடுத்தார். ‘நடிகனுக்கு உடம்பும், மனசும் ரொம்ப முக்கியம். மனசு சொல்லுவதை உடல் கேட்கிற மாதிரி மனதை வைத்துக் கொள்ளவேண்டும்’ என்று ஒரு வழிகாட்டி போல அறிவுறுத்தினார்.
சினிமாவில் வாரிசுரிமை என்பது தற்போது உடைந்திருக்கிறது. இந்தச் சூழலில் வெற்றியை தக்கவைத்துக்கொள்ள என்ன செய்வீர்கள்.?
தாத்தா (முத்துராமன்) காலம் வேறு. அப்போது ஹீரோக்கள் எது சொன்னாலும் எடுபடும். மக்களுக்கு வேறு பொழுதுபோக்கு கிடையாது. அப்பா காலத்தில் ஹீரோவாக நிலைக்க நிறைய போராட்டம் இருந்தது. ஹீரோக்கள் 100 படங்களெல்லாம் நடித்திருக்கிறார்கள். பெயரைக் காப்பாற்ற திறமை மட்டுமே அப்போது முக்கியமாக இருந்தது. இப்போதோ ஒவ்வொரு நாளும் பலப்பரிட்சைதான். எந்த சென்ட்டிமென்ட்டுகளுக்கும் இப்போது இடமில்லை. நிறைய ஏற்ற இறக்கங்களோடுதான் பயணிக்கவேண்டியிருக்கும். அது நிச்சயம்.
நீங்கள் அப்பா மாதிரியா.. அம்மா மாதிரியா.. உங்கள் தம்பி எப்படி?
அப்பா ரொம்ப ஜாலியான டைப். நான் அப்பா மாதிரி தான். எந்தக் கோபமும் கொஞ்ச நேரத்துக்கு மேல் மூளையில் தங்காது. அப்பாவின் மேனரிசங்கள் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன். படப்பிடிப்பு தவிர வேறு எங்கும் என்னைப் பார்க்க முடியாது. நானுண்டு என் வேலையுண்டு என்றிருப்பேன். எல்லோரையும் போல எனக்கு என் அப்பாதான் முதல் ஹீரோ. என் தம்பி ‘காய்ன் கார்த்திக்’ நல்ல திறமைசாலி. அவனுக்கு நான் நிறைய பணம் சேர்த்துக் கொடுப்பேன். ஒருநாள் அவனும் நடிக்க வரலாம். வந்தால் நிச்சயம் என்னைவிட நல்ல உயரங்களுக்குப் போவான்.
அக்னி நட்சத்திரம் – 2 வில் நீங்களும் விக்ரம் பிரபுவும் நடிக்கப் போகிறீர்களா?
அது வதந்திதான். அக்னி நட்சத்திரம் ஒரு க்ளாசிக் டைப்பான படம். அதை ரீமேக்கோ, இரண்டாம் பாகமோ செய்தால் சரியாக வருமா? தெரியவில்லை. டைட்டானிக்கை ரீமேக் செய்தால் பார்க்கமுடியுமா?
அப்பா நடித்த எந்தப் படத்தையாவது ரீமேக் செய்து நடிக்க ஆசையிருக்கிறதா?
அப்பா நடித்த ‘உள்ளத்தை அள்ளித்தா’ படத்தை ரீமேக் செய்து நடிக்க ஆசை. அப்பாவுடன் சேர்ந்து நடிக்க பயமாக இருக்கிறது. ஒருநாள் அப்பாவிடம் கேட்டுப்பார்க்க வேண்டும். எனக்காக எதையும் செய்வார்.