தமிழ்ச் சினிமாவில் கடந்த சில ஆண்டுகளில் மட்டும் நிறைய புதுமுக இசையமைப்பாளர்கள் அறிமுகமாகியிருக்கிறார்கள். அவற்றில் பெண் இசையமைப்பாளர்கள் யாரும் இல்லை. பெண் இயக்குனர்கள் தமிழில் உருவாகியுள்ள அளவுக்கு மற்ற சினிமாத் துறைகளில் பெண்களின் வரவு இல்லைதான்.
ஏ.ஆர்.ரஹ்மானின் தங்கை ஏ.ஆர்.ரெஹானா சில படங்களுக்கு இசையமைத்தார். இப்போது புதிதாக ஒரு பெண் இசையமைப்பாளர் வர இருக்கிறார். அவர்தான் ஸ்ரீவித்யா. கடந்த 12 வருடங்களாக சினிமாவில் தனியாகவும், குழுவிலுமாக சுமார் 3000 பாடல்களை பாடியிருக்கிறார். எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர்களின் சினிமா இசையை ஆராய்ச்சி செய்து சென்னை பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார்.
பத்தாண்டுகளாக ட்ராக் பாடியும், பின்னணிக் குரல் கொடுத்தும் வந்துள்ளார். பின்னணிக் குரல் கொடுக்கும் போது பின்னணி இசையில்லாமலும் பின் பின்னணி இசையோடும் பார்த்த அனுபவம் தான் இசையமைப்பாளாராக முக்கிய தூண்டுகோலாக அமைந்தது என்கிறார். பின்னணி இசைக்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பேன் என்கிறார்.
இவர் முதன் முதலாக இசையமைக்கும் படம் ‘என்ன பிடிச்சிருக்கா’. இப்படத்தில் விவேகாவின் கவிதை வரிகளில் ஐந்து பாடல்களுக்கு இசைமைத்திருக்கிறார். ‘ஸ்ரீவித்யாவின் இசையை பிடிச்சிருக்கு’ என்று ரசிகர்கள் சொல்லவேண்டும் என்று வாழ்த்துகிறோம்.