’ஒரு அப்பாவாக ஸ்ருதியின் நடிப்பை என்னால் ரசிக்க முடியவில்லை. ஆரம்பத்தில் நான் என் இளையமகள் அக்ஷராதான் நடிகையாக ஆவார். ஸ்ருதி கேமராவுக்குப் பின்னால் இருந்துகொண்டு படங்களை இயக்குவார் என்றுதான் யூகித்திருந்தேன்’’ மிக சமீபத்தில் ஒரு ஆங்கில தினசரிக்கு கமல் இவ்வாறு பேட்டி அளித்திருந்தார்.
இந்தப்பேட்டியை படித்த பிறகு ஏற்பட்ட மனமாற்றத்தாலோ என்னவோ, விரைவில் இயக்குனராகும் ஆசையில், ஸ்ருதிஹாசன் இப்போது ஒரு திரைப்படத்துக்கான கதையை எழுதிக்கொண்டிருக்கிறார்.
கடைசியாக தெலுங்கில் ஸ்ருதி நடிப்பில் வெளியான ’கப்பார் சிங்’ கலெக்ஷனில் பெரும் கிங் ஆக மாறிய நிலையிலும், புதிய படங்கள் எதிலும் கமிட் ஆகாமல் சைலண்டாகவே இருக்கிறார். தமிழிலும் ‘மூனு’ பட ரிலீஸுக்குப்பின் படங்கள் எதையும் ஒப்புக்கொள்ளாமல் கம்முனுதான் கிடக்கிறார்.
சமீபத்தில் மும்பையில் செட்டிலாகி, ஒரு இசை ஆல்பம் தயாரிக்கும் வேலையில் மும்முரமாக ஈடுபட்டு வந்த ஸ்ருதி, இரவில் அடிக்கடி தூக்கம் வராமல் தவிக்க நேரிடுகிறது என்கிறார். அந்த மாதிரி சமயங்களை வீணடிக்காமல் இசையமைக்கும் வேலைகளில் ஈடுபட்டுவந்த ஸ்ருதி ,இப்போது அதோடு கதை எழுதும் வேலையையும் சேர்த்துக்கொண்டார்.
‘’இசையமைக்கும், பாடும் ஆர்வத்தோடு ஒப்பிடும்போது நடிப்பு எனக்கு ரெண்டாம் பட்சம்தான். இப்போது நாலைந்து படங்களில் நடித்துமுடித்த அனுபவத்தால், திரைப்படத்துறையின் அத்தனை தொழில்நுட்பமும் எனக்கு அத்துபடியாகிவிட்டது. இவ்வளவு நாட்களும் வெறும் இசையமைப்பு தொடர்பாக மட்டுமே செலவழித்து வந்த, தூக்கம் தொலையும் இரவுகளை, இனி ஸ்கிரிப்ட் எழுதவும் பயன்படுத்தப்போகிறேன். யார் கண்டது அப்பா ஆரம்ப காலத்தில் நினைத்ததுபோல் நான் விரைவில் கேமராவுக்கு பின்னால் இருந்து படங்களை இயக்க ஆரம்பித்தாலும் ஆரம்பிக்கலாம்’’ என்கிறார் ஸ்ருதி.
அப்படி ஸ்ருதி இயக்குனராகும் பட்சத்தில் ’ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகள் இயக்குனராவதை கேட்ட தந்தை’யாக கமல் பரவசப்படுவார் என்பதில் ஐயமில்லை.