இப்படியான ஒரு செய்தியை நேற்றும் இன்றும் பீகாரில் இருக்கும் பி.ஜே.பி பத்திரிக்கைகளும், ஊடகங்களும் ‘திட்டமிட்ட சதி’ என்று அலறிக்கொண்டிருக்கின்றன. பி.ஜே.பி.யின் தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக அப்படி என்னதான் சதி நடந்துவிட்டது ?
பீகாருக்கு பிரச்சாரத்துக்காக பாட்னா வந்த அமித்ஷா அங்கிருந்த அரசு கெஸ்ட் ஹவுஸில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். நள்ளிரவு சுமார் 11.30 மணியளவில் அமித் ஷா, பீகார் பி.ஜே.பி தலைவர் புபேந்திரா யாதவ், செயலாளர் நாகேந்திரா மற்றும் பொதுச் செயலாளர் சௌதான் சிங் ஆகியோருடன் சில செக்யூரிட்டி கார்டுகளும் சேர்ந்து கெஸ்ட் ஹவுஸின் தரைத் தளத்திலிருந்து முதல் மாடிக்குச் செல்ல லிப்டில் ஏறியிருக்கிறார்கள்.
அந்த லிப்ட் சரியாக தரைத்தளத்துக்கும் முதல் மாடிக்கும் நடுவே திடீரென்று நின்றுவிட்டது. நடு இரவு ஆகையால் கெஸ்ட் ஹவுஸில் லிப்ட் ஆட்களும், ஊழியர்களும் இல்லை. செக்யூரிட்டிகளும் லிப்ட் உள்ளே சேர்ந்து மாட்டிக் கொண்டதால் அவர்களால் வெளியில் வர இயலவில்லை. அவர்களது செல்போன்களும் லிப்டுக்குள் டவர் கிடைக்காததால் வேலை செய்யவில்லை. எனவே உதவிக்கு யாரும் வராத நிலையில் சுமார் 40 நிமிடங்கள் லிப்ட் உள்ளேயே சிறைப்பட்டிருக்கிறார்கள். பின்னர் தற்செயலாக வந்த அவரது இஸட் பிரிவு பாதுகாவலர்கள் லிப்ட் கதவைப் பிளந்து அவர்களனைவரையும் மீட்டிருக்கின்றனர்.
இவ்வளவு தான் நடந்தது. என்றாலும் இதை வைத்து இது திட்டமிட்ட சதி என்று பி.ஜே.பி தரப்பில் பீகார் பி.ஜே.பி தலைவர் தாகூர் தரப்பில் பேட்டி தர பீகார் சூடு பிடித்தது. பீகார் அரசின் முதன்மை செக்ரட்டரி சிஷிர் சின்ஹா கெஸ்ட் ஹவுஸூக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தியதில் ‘அதிகப் பளு’ தான் லிப்ட் நின்றதற்கான காரணம் எனத் தெரியவந்தது. அதாவது லிப்டில் ஏறக்கூடிய 340 கிலோ எடைக்கும் அதிகமானோர் லிப்டில் ஏறியதால் அது வழியில் நின்றிருக்கிறது. உடனே லாலு பிரசாத் யாதவ் “இவ்வளவு குண்டான அமித் ஷா போன்றவர்கள் எல்லாம் பாட்னாவில் லிப்டில் ஏறியிருக்கக்கூடாது. ஏனென்றால் பீகார் லிப்டுகள் இவ்வளவு குண்டானவர்கள் செல்வதற்கு ஏற்றவையல்ல” என்று கிண்டல் தொனிக்க ட்வீட் செய்தார்.
பி.ஜே.பி தலைவர் பாண்டே கூறுகையில் “நிதிஷ்குமாரின் தலைமையிலான பீகார் அரசு செயலிழந்து இருப்பதையே இந்நிகழ்ச்சி காட்டுகிறது. இதற்குப் பின்னாலிருக்கும் சதியை கண்டுபிடிக்க விசாரணைக் கமிஷன் வைக்கவேண்டும்” என்று கோரிக்கை விடுத்திருக்கிறார்.
லிப்ட்ல ‘ஒவர் வெய்ட்’ ஏறினா லிப்ட் நின்னுபோகும்ன்றது எல்லாருக்கும் தெரிஞ்சது தானே ! இதை விசாரணைக் கமிஷன் வச்சுத் தான் தெரிஞ்சுக்கணும் போல..