இலங்கையில் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்ற உயிரிழந்தோரின் எண்ணிக்கை 75 ஆயிரம் பேருக்கு மேலிருக்கும் என்று தமிழர்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. 2011 ஆம் ஆண்டு வெளியான ஐ.நா வின் அறிக்கையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 40 ஆயிரம் பேர் என்று மதிப்பிட்டுள்ளது. இந்தக் கணக்கீட்டை காணாமல் போனோர் தொடர்பாக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மேக்ஸ்வெல் பரணகம தவறு என்கிறார்.
இது தொடர்பாக உயர் நீதிமன்ற நீதிபதி மெக்ஸ்வெல் பரணகம கூறுகையில்,
“யுத்தம் நடந்த காலத்தில் நிகழ்ந்த மரணங்கள் தொடர்பாக எனது தலைமையிலான ஆணைக்குழு இதுவரை துல்லியமான எண்ணிக்கையைக் கண்டறியவில்லை. எனினும், ஐக்கிய நாடுகள் நிபுணர் குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது போன்று நிச்சயமாக 40 ஆயிரம் பேர் கொல்லப்படவில்லை. ஐ.நாவினஅ அந்த அறிக்கையில் கூட, உயிரிழந்தோரின் எண்ணிக்கை தொடர்பாக உறுதியாக கூறப்படவில்லை. 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று தான் கூறப்பட்டுள்ளது” எனக் கூறினார். இவ்வாறாக இருக்கிறது ஸ்ரீலங்காவின் விசாரணை ஆணைக்குழுவின் யோக்கியதை.
நாட்டின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணாமல் போனோர் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை தற்போது ரெடியாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படுவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவின் இரண்டாவது இடைக்கால அறிக்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் அளிக்கப்பட்டுள்ளது. அதில் நாலே நாலு பேர் தான் செத்தார்கள் என்று இருந்தாலும் இருக்கும்.