பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பயங்கரவாதிகள் சுமார் 6 வெவ்வேறு இடங்களில் நடத்திய தாக்குதலில் இதுவரை 153 பேர் கொல்லப்பட்டனர். பிரான்ஸ் அதிபர் ஹாலந்தே பிரான்ஸில் அவசர நிலை பிரகடனம் செய்துள்ளார்.
வடக்கு பாரீஸில் உள்ள செயின்ட்-டெனிஸ் கால்பந்து மைதனாத்தில் பிரான்ஸ் – ஜெர்மன் அணிகளுக்கு இடையேயான நட்பு ரீதியான கால்பந்து போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது மைதானத்துக்கு வெளியே இரண்டு இடங்களில் குண்டு வெடித்ததாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து பயங்கரவாதிகள் 6 பேர் ஏ.கே 47 துப்பாக்கியுடன் பார்வையாளர்களை நோக்கிச் சுட்டனர்.
கால்பந்து நிகழ்ச்சியைக் காண மைதானத்தில் அதிபர் ஹாலந்தேவும் இருந்தார். அவர் பாதுகாப்பாக வெளியேறினார்.
இதேபோல் பாரீஸில் உள்ள பட்லாக்கன் திரையரங்கிலும் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அங்கிருந்த பொதுமக்களில் சிலரை பிணைக் கைதிகளாக பிடித்து வைத்தனர். பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பிணைக் கைதிகள் மீட்கப்பட்டனர்.
பாரீஸ் தாக்குதலுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒபாமா செய்தியாளர்களி சந்திப்பின்போது, “பயங்கரவாதிகள் மீண்டும் ஒருமுறை அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இத்தாக்குதல் பிரான்ஸ் மீதானது மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித குலத்தின் மீதான தாக்குதல். இத்தருணத்தில் நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ஹாலந்தே மிகவும் பரபரப்பாக இருப்பார் என்பதால் இப்போதைக்கு நான் அவருடன் தொலைபேசியில் பேசுவதில்லை என முடிவெடுத்துள்ளேன். இருப்பினும், பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து நீதியை நிலைநாட்ட அமெரிக்கா அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருக்கிறது” என்றார்.
பாரீஸில் நடந்துள்ள பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “பிரான்ஸ் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறேன். பிரான்ஸுக்கு இந்தியா துணை நிற்கும். தாக்குதலில் சிக்கியவர்கள் குடும்பங்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பிரான்ஸ், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் தான் இணைந்து ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக் ஆகிய நாடுகளில் தங்கள் நாட்டுப் படைகளை ஐ.நாவின் மூலம் நிறுத்தி அங்கு தீவிரவாதிகளுக்கு எதிரான போர் என்று அந்நாட்டு மக்களை கொன்று குவித்து ‘அமைதி’யை நிலைநாட்டி வருகின்றன. இதை எதிர்த்து பயங்கரவாதிகள் தற்போது பிரான்ஸ் நாட்டில் பெரிய அளவிலான தாக்குதலைச் செய்துள்ளனர்.