இந்தச்செய்தியில் காமெடி, உள்குத்து, வெளிக்குத்து என்று எதுவும் இல்லை. செய்தி சம்பந்தப்பட்ட முத்தரப்பினரையும் தீரவிசாரித்து, ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காக தெருமுனையில் டீ குடித்து, பிறகு வெகு நிதானமாகவே எழுதப்பட்டது.
ஆஸ்கார் பிலிம்ஸ் தயாரிப்பில் விக்ரம் இருவேடங்களில் வில்லன்களை அடிக்கும் ‘ஐ’ படத்தில் ஒரு பிரதான வேடத்தில் நம்ம பவர்ஸ்டார் சீனுவாசனும் நடிக்கிறார்.
இன்றைய தந்தியின் தலைப்புச்செய்தியாக வந்திருக்கவேண்டியது, எப்படி இவ்வளவு பெரிய வரலாற்றுப்பிழை நடந்து மிஸ் ஆனது என்று தெரியவில்லை. உள்ளே ஒரு குட்டி அல்லது பொட்டிச்செய்தியாகக்கூட காணவில்லை.
குற்றம் நடந்தது எப்படி? பவர்ஸ்டார் ‘ஐ’க்குள் வந்தது இப்படி;
எவ்வளவு சீரியசான சப்ஜெக்டாக இருந்தாலும், அதில் குறிப்பிட்ட அளவு காமெடியை புகுத்திவிடும் ஷங்கர், ‘ஐ’ யிலும் அது தொடரவேண்டி விரும்பி, தனது உதவியாளர்கள் அத்தனை பேரையும் தனித்தனியாக சந்தானத்துக்கு காமெடி எழுதிக்காட்டச்சொன்னாராம். அதில் ஒரு உதவியாளர் சந்தானத்துடன் காமெடி காம்பினேஷனாக பவர்ஸ்டாரை கலாய்த்து எழுதியிருந்ததை ரசித்து ‘உடனே கமிட் பண்ணுய்யா பவர் ஸ்டாரை’ என்றாராம்.
மேற்படி தகவலை இயக்குனர் ஷங்கர் தரப்பும், தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் ரவிச்சந்திரனும் உறுதிப்படுத்திய நிலையில் கைவசம் இரண்டே கேள்விகளுடன் , இன்று மதியம் சரியாய், மட்டன் பிரியாணியும், சிக்கன் செட்டிநாடும் ஆர்டர் செய்திருந்த சமயம் பார்த்து, அவரது அலுவலகத்துள் நுழைந்தோம்.
‘’பாஸ் உங்கள ரொம்ப டிஸ்டர்ப் பண்ண விரும்பலை. ஜஸ்ட் ரெண்டே கேள்விதான். கேக்கலாமா?’’
’வந்தது வந்துட்டீங்க கேளுங்க’
’முதல் கேள்வி. நீங்களே ஒரு ஸோலோ ஸ்டார். அப்புறம் ஏன் கூட்டத்துல கும்மியடிக்கிறீங்க?’’
‘ அது ஒரு மெகா பட்ஜெட் படம். என் ரசிகர்களைத்தாண்டி என்னைக்கொண்டு சேர்க்கிற படம். எனக்கு கோடி ரசிகர்கள் இருந்தாலும் லேடி ரசிகர்கள் கம்மி. அதையும் இந்தப்படத்தின் மூலமா புடிச்சிடலாமுன்னு ஒரு வெறி இருக்கு. பட் இதுதான் லாஸ்ட். இதுக்கடுத்து ஒன்லி என்னோட ஸோலோ ஃபீஸ்ட்தான்.’’
‘’அப்புறம் ரெண்டாவது கேள்வி. ஒண்ணும் தப்பா எடுத்துக்க மாட்டீங்களே?’’
‘’சேச்சே என்கிட்ட ரிப்போர்ட்டர்களுக்கு புடிச்ச ப்ளஸ் பாயிண்டே என்கிட்ட என்ன கேட்டாலும் கோவிச்சிக்க மாட்டேன்ங்குறதுதான்.
‘’அப்ப என்ன கேட்டாலும் தப்பா எடுத்துக்க மாட்டீங்க? உங்களுக்கு வாங்கி வச்சிருக்க மட்டன் பிரியாணி, சிக்கன் செட்டிநாடு ரெண்டையும் நான் எடுத்துக்கிட்டேன். பை பாஸ்.