’சூரியனைப்பார்த்து ஓடி வந்த ரஜினி’- திரையுலகம் கண்ட திருப்பங்கள்

sjidhaya-thrai-thiruppam-8

“செட் சரியில்லை என்று கோபித்துக் கொண்ட சிவாஜி, என் அண்ணனின் விளக்கத்தால் சமாதானமாகி, மறுநாள் ஷூட்டிங்கிற்கு வரவும் சம்மதித்து விட்டார். ஆனால், நான் ஏற்கெனவே முடிவெடுத்தபடி ஷூட்டிங்கை எனது உதவி இயக்குநர் ஏ.எஸ் பிரகாசம் பார்த்துக் கொள்வார்’ என்று எண்ணிக் கொண்டு, வீட்டு வாசலில் அமர்ந்து ஹிந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன்.

“காலை ஏழு மணி இருக்கும். சிவாஜியின் கார் வந்து எனது வீட்டு முன் நின்றது.காரிலிருந்தபடி சிவாஜி, ‘சீனு இங்கே வா’ என்றார்.நான் எழுந்து போனேன். ‘எட்டு மணிக்கு ஷூட்டிங் வச்சுக்கிட்டு, இங்கே என்ன பேப்பர் படிச்சுக்கிட்டிருக்கே நீ?’ என்று கேட்டார் மிக உரிமையாக.

“நான் மெதுவாக ‘பிரகாசம் அங்கே ரெடியா இருக்கார்’ என்றேன். அவரோ ‘அதெல்லாம் எனக்குத் தெரியாது.நான் ஸ்டூடியோவிற்குப் போய் மேக்கப் போட்டு, ரெடியாக ஒரு மணி நேரம் ஆகும். அதுக்குள்ளே நீ குளிச்சு ரெடியாகி, ஸ்டூடியோ வந்து சேர்றே…’ என்று உரிமையாக உத்தரவிட்டபடியே, புறப்பட்டு போய் விட்டார்.

அவரது அந்த உரிமை கலந்த அன்பிற்கு கட்டுப்பட்டு, நானும் உடனே புறப்பட்டு போனேன்.

“அன்றைய நிலையில் எனது வீடு தேடி வந்து என்னை அழைக்க வேண்டிய அவசியம் சிவாஜிக்கு நிச்சயம் கிடையாது. ஆனாலும், ஓர் இயக்குநருக்கு மரியாதை கொடுத்து, அவர் என்னைத் தேடி வந்தார்” என்றார் முக்தா வீ.சீனிவாசன்.

அப்போதெல்லாம் இயக்குநர்களுக்கு மட்டுமில்லை. உதவி இயக்குநர்களுக்கு கூட போதிய மரியாதை இருந்திருக்கிறது. ‘அந்த நாள்’ பட்த்தில் முக்தா சீனிவாசன் உதவி இயக்குநர்தான். ஆனால், ஒரு டிஸ்கஷனின்போது, அவரது கருத்துக் கூட எல்லோராலும் ஏற்கப்பட்டுள்ளது.

“வீணை எஸ். பாலச்சந்த்ர் இயக்கத்தில் ‘அந்த நாள்’ படம் உருவானது. தேசத் துரோகம் குறித்த அந்த திரில்லர் படம், பாடலே இல்லாத படமாக உருவானது.

ஆனால் படம் முடிந்த பிறகு, விநியோகஸ்தர்கள் பாடல் இல்லாத படமா என்று தயங்கினார்கள். பட்த்திற்கு 10 பாட்டு, 20 பாட்டு என்று இடம் பெற்று வந்த காலம் அது. எனவே அவர்களின் தயக்கத்திற்கு காரணம் இருந்தது.தயாரிப்பாளர், ஹீரோ எல்லாம் அந்த தயக்கத்தை ஏற்றார்கள் இயக்குநரிடம் ‘ஒரு பாடலாவது வைக்கலாமா?’ என்று விவாதித்தார்கள். இதில் இயக்குநர் எஸ்.பாலச்சந்தரும் கொஞ்சம் சஞ்சலப்பட்டுப் போனார்.sj-idhaya-polladhavan

“ஆனால், நான் இயக்குநரிடம் பிடிவாதமாக கருத்து தெரிவித்தேன். ’ பாடல் வைப்பது என்று முடிவெடுத்தால், ஒரு பாடல் வேண்டாம்; படம் முழுக்க வழக்கம் போல் பாடல்களை வைத்து விடலாம். இல்லையேல், ஒரே முடிவாய் பாடல் இல்லாத படமாகவே வெளியிடலாம். அதுவே, நம் படத்திற்கு பெரிய விளம்பரமாக அமையும் என்று வாதிட்டேன்.

“என் உறுதியான கருத்தை கேட்ட இயக்குநர், அவரது சஞ்சலத்திலிருந்து விடுபட்டார். ‘பாடல் வேண்டவே வேண்டாம். அதுவே புதுமையாகப் பேசப்படும்’ என்று எல்லோரிடமும் வாதிட்டு வெற்றி பெற்றார். அதனால் தான் இன்றும் கூட பாடல்கள் இல்லாத ‘முதல் படம் என்று தமிழ் சினிமா வரலாற்றில் ‘அந்த நாள்’ நிரந்தர இடத்தைப் பிடித்துள்ளது” என்றார் முக்தா சீனிவாசன்.

ரஜினியை வைத்து ‘சிவப்பு சூரியன்’ மற்றும் ‘பொல்லாதவன்’ ஆகிய படங்களை இயக்கியவர் முக்தா சீனிவாசன்.

“ரஜினி, லட்சுமி நடித்த ‘பொல்லாதவன்’ – படத்திற்கு, பெயர் சூட்டாமலே படபிடிப்பை நடத்திக் கொண்டிருந்தோம். ரஜினிதான் ஒரு நாள் ‘பொல்லாதவன்’ என்று டைட்டிலை முன்மொழிந்தார். ஹீரோவிற்கு ‘பொல்லாதவன்’ என்று டைட்டிலை வச்சா, நெகட்டிவாக போய் விடாதா என்ற தயக்கம் எனக்கு. ஆனால் ரஜினியோ, ‘சமூகத்தில் நல்லவர்கள் கூட தவறுகளை கண்டிக்கும்போது ‘நான் பொல்லாதவன் ஆயிடுவேன்’ – என்று கூறுவதில்லையா? எனவே பொல்லாதவன் என்பது கெட்ட அர்த்தத்தில் வராது’ என்று வாதிட்டார். அவரது வாதத்தை ஏற்று ‘பொல்லாதவன்’ என்றே அப்படத்திற்கு பெயர் சூட்டினோம்.

“ரஜினியும், சிவாஜி மாதிரி எனக்காக ஒருமுறை ஓடி வந்தது இன்றும் என் மனதில் பசுமையாக உள்ளது” – என்று கூறி அச்சம்பவத்தையும் விவரித்தார் முக்தா சீனிவாசன்.

“என் இயக்கத்தில் ‘சிவப்பு சூரியன்’ படத்தில் ரஜினி நடித்துக் கொண்டிருந்தார். டைட்டிலுக்கு ஏற்ற மாதிரி ஒரு நல்ல சிவப்பு சூரியன் பின்னணியில் ரஜினியை வைத்து, ஒரு ஷாட் தேவை என்று நான் விரும்பினேன். இதற்காக ஷூட்டிங் துவங்கிய நாள் முதலே வாய்ப்பு கிடைக்கும் நேரத்தில் எல்லாம், பெரிய அழகான சிவப்பு சூரியன் வருகிறதா என்பதை ஆர்வமாக கவனித்துக் கொண்டே இருந்தோம்.

ஆனால் படம், முடியும் தருவாயை எட்டியும், அந்த சிவப்பு சூரியன் கண்ணில் படவேயில்லை. சலித்துப்போய் அந்த ஷாட்டே தேவையில்லை என்று விட்டு விட்டோம்.

“போகப் போக அது பற்றி மறந்தும் விட்டேன். அப்போது பல்லாவரம் மலைப் பகுதியில் கடைசி கட்ட ஷூட்டிங் நடந்து கொண்டிருந்தது.ஒருநாள் மாலை, ஷூட்டிங் முடிந்து ’பேக்கப்’ சொல்லி, ரஜினி விடை பெற்று விட்டார்.

மற்ற டெக்னீஷியன்கள் சாமான்களை எல்லாம் மூட்டை கட்டிக் கொண்டிருந்தனர்.

“புறப்பட்டு போன ரஜினியின் கார், போன வேகத்தில் திரும்பி வந்தது. காரில் இருந்து இறங்கிய ரஜினி ’சிவப்பு சூரியன்’ என்று கத்தியபடி ‘ கேமிரா எங்கே. டைரக்டர் எங்கே’ என்று படபடத்தார். விறுவிறுவென சின்னதாக மேக்கப்பையும் ‘ டச்’ செய்து கொண்டு ஓரிரு நிமிடங்களில் ரெடியாகி விட்டார். அவரது வேகத்தைப் பார்த்து, மற்றவர்களும் சுறுசுறுப்படைய, நான் ஆசைப்பட்ட மாதிரியான ஒரு காட்சியை அன்று ஷூட் செய்ய முடிந்தது.

“போகிற வழியில் தற்செயலாய் சூரியனைப் பார்த்திருக்கிறார் ரஜினி. இந்த ஒரு ‘ஷாட்’ தானா படத்தை தூக்கி நிறுத்தப் போகிறது என்று நினைக்கவில்லை அவர் மாறாக, டைரக்டர் ஆசைப்பட்ட காட்சி என்று டைரக்டர் மீதுள்ள மரியாதையால், அப்படி பதறியடித்து அவர் ஓடி வந்தார்” என்று குறிப்பிட்டார் அவர்.
sj-idhaya-sivapusuriyan

ரஜினியுடன் இரு படங்கள்தான் பண்ணினார் முக்தா சீனிவாசன். ஆனால், சிவாஜியை வைத்து அதிகப் படங்கள் இயக்கிய டைரக்டர்கள் பட்டியலில், அவருக்கு முக்கிய இடம் உண்டு. இதனால் சிவாஜியின் திறமைகள் மீது மட்டற்ற மரியாதை வைத்துள்ளார் அவர். எவ்வளவு நீள டயலாக்காக இருந்தாலும், அதை இரண்டுமுறை கேட்டாலே, வார்த்தை மாறாமல் டெலிவரி செய்யும் சிவாஜியின் திறமை மீது மாபெரும் வியப்பு, முக்தா சீனிவாசனுக்கு இருந்தது. அவரே அதை விவரிக்கிறார்.

“நானும் ஜாவர் சீதாராமனும், ‘அந்த நாள்’ படத்திற்கு உதவி இயக்குநர்களாக பணியாற்றியபோது சிவாஜியின் இந்த திறமை குறித்து மிகமிக வியந்து போனோம்.

மேக்கப் போடும்போது, வசனத்தை வாசிக்கச் சொல்லி, ஒரு முறை கேட்பார். ஷாட் ரெடியானதும் ஒருமுறை கேட்பார். இரண்டே முறைதான். அடுத்த கணம் எவ்வளவு நீள வசனமானாலும், வார்த்தை மாறாமல் ஒரே டேக்கில் ஓ.கே. செய்து விடுவார் சிவாஜி.

“உண்மையில் அவரது அந்த திறமை, பலரால் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது.அப்போதுதான் ஜாவர் சீதாராமன் காதுக்கு அந்த செய்தி வந்து சேர்ந்தது.

‘தினசரி ஷூட்டிங் முடிந்து போகும்போது, அடுத்த நாளுக்குரிய டயலாக் பேப்பர்கள் சிவாஜியின் கார் டிரைவரிடம் கொடுத்து அனுப்பப்படுகிறது’ என்பதுதான் அந்த செய்தி. உடனே ஜாவருக்கு சந்தேகம் எழுந்தது.

“தினமும் இரவில் அவர் மனப்பாடம் செய்து விடுகிறார். இங்கே ஷூட்டிங்கிற்கு வந்ததும் ஒன்றும் தெரியாதது போல், இரண்டு முறை டயலாக்கை கேட்டு விட்டு, எல்லார் முன்னாலும் அசத்தி விடுகிறார் – என்ற ஐயம் எழுந்தது ஜாவருக்கு. எனக்கு அதில் நம்பிக்கையில்லை. சிவாஜிக்கென்று சில அபூர்வ திறமைகளை இறைவன் தந்திருப்பதாக நான் நம்பினேன்.
sj-idhaya-andha-naal
“இதனால் ‘சரி… எதையும் நம்ப வேண்டாம். ஒரு டெஸ்ட் வெச்சு பார்த்திடுவோம்’ என்றார் ஜாவர். அதன் மறுநாள் சிவாஜி நடிக்க வேண்டிய காட்சிகளுக்கான வசன தாள்கள், ஒதுக்கி விட்டு, வேறோரு நாளுக்கான வசன தாள்கள், கார் டிரைவரிடம் போய் சேர்கிற மாதிரியான ஒரு ஏற்பாட்டை செய்தார் ஜாவர்.

“மறுநாள் வழக்கம்போல் சுறுசுறுப்பாய் வந்து சேர்ந்தார் சிவாஜி”.[ தொடரும்]

– எஸ்.ஜே.இதயா