பாகம் – 6. ரஜினி போட்ட கண்டிஷன்

sjidhaya-kamal

“மறுநாள் சுறுசுறுப்பாய் வந்த சிவாஜி, மேக்கப் போட்டுக் கொள்ளத் துவங்கினார். வழக்கம் போல என்னை அழைத்து ‘ டயலாக் சொல்லு’ என்றார். நானும் அன்றைய டயலாக்கை வாசித்தேன். முதல் நாள் சிவாஜி வீட்டிற்கு கொடுத்தனுப்பப்பட்ட டயலாக் வேறு. எனவே சிவாஜி முகத்தில் ஏதேனும் தடுமாற்றம் தோன்றுகிறதா என என்னை விட ஜாவர் உன்னிப்பாகக் கவனித்தார்.

“ ஆனால் சிவாஜி முகத்தில் எவ்வித மாற்றமும் இல்லை. வசனத்தை ஒருமுறை கேட்டுவிட்டு, ‘ஓ.கே.’ என்று கூறி எங்களை அனுப்பி விட்டார். மீண்டும் ‘ஷாட்’ டின் போது

மற்றொரு முறை வசனத்தை கேட்டு விட்டு அட்சரம் பிசகாமல் அதை டெலிவரி செய்து ’ஷாட்டை’ ஒரே டேக்கில் ஓ.கே. செய்தார் சிவாஜி. மற்ற எல்லாருக்கும் சாதாரண நிகழ்வு அது. எனக்கும், ஜாவருக்கும் மட்டும் மிக பதட்டமாக அமைந்தது.

“சிவாஜி மீதான மதிப்பும் மரியாதையும் எனக்கும், ஜாவருக்கும் மேலும் உயர்ந்தது. அபூர்வ திறமை படைத்த கலைஞர் அவர்” என்று முடித்தார் முக்தா வீ.சீனிவாசன்.

“சிவாஜியை வைத்து ‘கவரிமான்’, ‘ரிஷிமூலம்’, ‘வெற்றிக்கு ஒருவன்’- ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் எஸ்.பி.முத்துராமனும், முக்தா சீனிவாசன் கூறியதை அப்படியே வழிமொழிந்தார்.

உதாரணத்திற்கு அவர் ஒரு சம்பவத்தையும் நினைவு கூர்ந்தார்.

”சிவாஜியை வைத்து நான் இயக்கிய முதல் படம் ‘கவரிமான்’. அதில் ஜேசுதாஸ் பாடிய பாடல் ஒன்று ‘சரிகரி… பதநி’ என்கிற ரீதியில் நெடிய ஆலாபனை கொண்டதாய் இருந்தது. சிவாஜிக்கு க்ளோசப் காட்சிகள் வேறு இடம் பெற வேண்டும். அந்த பாடல் காட்சிக்கான படப்பிடிப்பு நடப்பதற்கு முதல் நாள், நான் ஜேசுதாஸ் பாடிய கேஸட்டுடன், சிவாஜி வீட்டிற்குப் போனேன்.

”சிவாஜி ‘என்ன முத்து’ என்று கேட்க, நான் கேஸட்டை கொடுத்து விஷயத்தைச் சொன்னேன். ‘மனப்பாடம் பண்ணிட்டா கொஞ்சம் ஈஸியா இருக்கும்’ என்கிற ரீதியில் இழுத்தேன். ‘அட இதுக்குப் போயா இவ்வளவு தூரம் வந்தே?’, என்றவர், சிரித்தபடி கேஸட்டை வாங்கிக் கொண்டார்.

“மறுநாள் அந்த காட்சி படமான போது, நான் பிரமித்துப் போனேன். சிவாஜி அந்த ஆலாபனையை சரியாக உச்சரித்தாரா, இல்லையா என்பது தெரியாது. ஆனால் அதை யாரும் பொருட்படுத்தாத விதத்தில், அந்தப் பாடலின் ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப அவர் காட்டிய முக அசைவுகள், கண் மற்றும் புருவ அசைவுகள். அவரே அந்தப் பாடலைப் பாடியது போன்ற எஃபெக்டைக் கொடுத்தன. பிரமித்துப் போனேன்.

”அதே போல் முக்கியமான் காட்சிகளின்போது, வசனத்தைக் கேட்டுக் கொள்ளும் சிவாஜி, ஒரு சில நிமிடங்கள் ஓரமாய் போய் விடுவார். பின்னர் என்னை அழைத்து, அந்த வசனத்தை மூன்று விதமாய் டெலிவரி செய்து காட்டி, ‘எது வேணும்?’ என்று கேட்டார். அந்தளவு அபூர்வமான, அற்புதமான நடிகர் அவர். ஏ.வி.எம். குறித்து ஒரு டாக்குமென்டரி எடுத்தபோது, சிவாஜியை ஏ.வி.எம்.மிற்கு வரவழைத்திருந்தோம்.

”அவரிடம் ‘பழைய வீரபாண்டிய கட்டபொம்மன் பட்த்தின் வசனத்தை ஒருமுறை நீங்கள் பேசிக் காட்டினால், பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்மாக இருக்கும்’ என்று கூறிவிட்டு, உண்மையிலேயே அவருக்கு முழு வசனமும் ஞாபகம் இருக்குமோ, இருக்காதோ என்ற ஐயத்தில் ‘முழு டயலாக்கும் ஞாபகமிருந்தா பேசுங்க… இல்லைன்னா’ என்று இழுத்தேன்.

”அவரோ, ‘என்ன முத்து, என்னை டெஸ்ட் பண்றியா?’ என்று கேட்டு விட்டு, மளமளவென அந்த டயலாக்கை அதே ஏற்ற இறக்கங்களுடன் மூச்சு விடாமல் பேசிக் காட்டி, எங்களை மூச்சைடைக்க வைத்து விட்டார். நடிப்பிற்கென்றே தன்னை அர்ப்பணித்து விட்ட அற்புத கலைஞர் அவர். அந்த வரிசையில்தான் தற்போது கமல்ஹாசனும் இருக்கிறார்.

”நான் ஆறாவது அசிஸ்டெண்ட்டாக பணியாற்றிய ‘களத்தூர் கண்ணம்மா’வில் கமல், சிறுவனாக அறிமுகமானார். அப்போதே கமலிடம் அந்த சினிமா வெறியைப் பார்க்க முடிந்தது. ‘ஷாட்’ முடிந்ததும், அவருடன் நடித்த சிறுவர்கள் எல்லாரும் மரங்களில் ஏறி விளையாடப் போய் விடுவார்கள். ஆனால் கமல் மட்டும் ஏ.வி.எம்.மில் உள்ள ‘ப்ரிவியூ’ தியேட்டருக்கு ஓடி விடுவார்.

அங்கே அவருக்கு படம் பார்க்க அனுமதி இருக்காது. ஆனால் அங்கிருந்த ஆபரேட்டரை தனது குறும்பு மற்றும் மழலையால் மயக்கி வைத்திருந்தார். அந்த ஆபரேட்டர் கமலை இடுப்பில் சுமந்து கொண்டிருப்பார். கமல் ஓட்டை வழியே படம் பார்த்து கொண்டிருப்பார். ‘ஷாட்’டுக்கு கமல் தேவைப்பட்டால், நாங்கள் கமலைத் தேடி ஓடுவது அந்த தியேட்டருக்குத்தான்.

”அப்படி சின்ன வயது முதலே கமல் சினிமாவிற்கென தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ‘எனக்குள் ஒருவன் பட்த்தில் இரு வேடங்களில் கம்ல் நடிக்கிறார் என்பது மட்டுமே நாங்கள் முடிவு செய்தது. திடீரென்று கண்களை இழுத்து ஒட்டிக் கொண்டு நேபாளி மாதிரி வந்து நின்றது, கமலின் சொந்த ஐடியா. தன்னை வருத்திக் கொண்டு நடிப்பது கமலுக்கு சர்வ சகஜம்.

”அதே ‘எனக்குள் ஒருவன்’ படத்தில், கேபிள் கார் சண்டை காட்சி ஒன்று உண்டு. இமயமலை பள்ளத்தாக்கில் இரண்டு கேமிராக்களை வைத்து படம் பிடித்தோம். மிக உயரமான இட்த்தில் எடுக்கப்படும் ‘ரிஸ்க்’கான காட்சி அது. வில்லனாக நடித்த சத்யராஜ் ‘இங்கிருந்து பார்க்கும் போதே தலை சுத்துதெ சார்’ என்று மிரண்டார். ரிஸ்க் வேண்டாமென முடிவெடுத்து ‘டூப்’ போட்டு காட்சிகளை எடுக்க முடிவெடுத்தோம்.

”என்னுடைய வற்புறுத்தலால் அதற்கு கமல் ஒப்புக் கொண்டார். ஒரு கேமிராவை லாங் ஷாட்டிலும், மற்றொரு கேமிராவை க்ளோஸப்பிலும் இயக்கும்படி கேட்டுக் கொண்டார். ‘பிற்பாடு டூப் முகம் தெரிஞ்சா கூட நாம ‘கட்’ பண்ணிக்கலாம்’ என்றார். அதே போல கேமிராக்களை ஏற்பாடு பண்ணி விட்டு, அந்தரத்தில் நடக்கும் சண்டையை படம் பிடிக்க ஆரம்பித்தோம். க்ளோஸப்பில் படமெடுக்கும் கேமிராவில் பார்த்தபோதுதான், டூப்பிற்கு பதிலாக கமல்ஹாசனே அந்த உயரமான கேபிளில் சறுக்கிக் கொண்டு வருவது தெரிந்தது.

”காட்சி முடிந்ததும் ‘என்ன கமல் இது?” என்றேன். ‘நானே நடிக்கிறேன்னா நீங்க ஒத்துக்க மாட்டீங்க. அது தான் உங்களுக்குத் தெரியாமல் நைஸா மேலே போயிட்டேன்’ என்றார் சிரித்தபடி. இப்படி ரிஸ்க் எடுப்பது எல்லாம் கமலின் பிறவிக் குணம் என்று சொல்லலாம்.”

கமல்ஹாசனை இப்படி புகழும் எஸ்.பி.முத்துராமன், கமலுக்கு இணையாக ரஜினியையும் வைத்து ஏராளமான படங்கள் இயக்கியுள்ளார்.” ரஜினி, மக்கள் ரசிக்கிற மாதிரி படம் பண்ணும் விருப்பமுள்ளவர்; கமல், தான் ரசிக்கும் படங்களை மக்களும் ரசிக்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர். ‘ கமல் ஒரு விஞ்ஞானி; ரஜினி ஒரு மெய்ஞானி என்று நான் அவ்வபோது சொல்வதுண்டு.

“பக்தி, மரியாதை, பெருந்தன்மை போன்ற பண்புகளில் ரஜினி நம்மை வியக்க வைப்பார் “ என்று குறிப்பிட்ட எஸ்.பி.எம். அவர்கள் அதற்கு ஒரு உதாரண சம்பவமும் சொன்னார்.

“ ஏ.வி.எம். சார்பில் ‘முரட்டுக் காளை‘ எடுக்கப்பட்ட போது, அதில் வில்லனாக யாரைப் போடலாம் என்று விவாதித்து வந்தோம்.

எப்போதுமெ புதுமையான யோசனைகளை முன் வைக்கும் பஞ்சு அருணாசலம் ‘ஜெய்சங்கரை போடலாமே‘ என்றார். நல்ல சாய்ஸ் என்று தோன்றினாலும், சமீப காலம் வரை ஹீரோவாக நடித்து வந்த ஜெய்சங்கர் அதற்கு ஒத்துக் கொள்வாரா என்று சந்தேகம் எழுந்தது. ‘வில்லன் ரோல்’ என்று அவரை அணுகவே ரொம்ப யோசித்தேன்.

“அப்போது ஏ.வி.எம். சரவணன் அவர்கள், ‘எல்லோரும் அவர் பண்ணினா பெட்டர்னு ஃபீல் பண்றோம். அப்புறம் ஏன் தயங்கணும்? வரச் சொல்லி நேரடியா கேட்டுடுவோம். அவருக்கு விருப்பமிருந்தால் நடிக்கட்டும். இல்லைன்னா விட்டுடலாம்’ என்று கூறி, ஜெய்சங்கரை வரவழைத்துப் பேசினார். ‘உங்க எல்லோருக்கும் சரின்னு படும்போது. நான் ஏன் தயங்கணும்? நான் ரெடி என்று சம்மதித்து விட்டார் ஜெய்சங்கர்.

வில்லனாக இருந்து ஹீரோவான ரஜினி படத்தில், ஹீரோவாக இருந்து வில்லனாக மாறும் ஜெய்சங்கர் ‘புக்’ செய்யப்பட்டார்.ஜெய்சங்கர் வில்லனாக நடிக்கும் விஷயத்தை ரஜினியிடம் சொன்னோம். ‘அவர் ஓத்துக்கிட்டாரா?’ என்று ஆச்சர்யப்பட்ட ரஜினி, ஒரு நிமிடம் மெளனமாக இருந்து விட்டு, ‘அவர் வில்லனாக நடிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால் இரண்டு கண்டிஷன்ஸ்’ என்றார்.

நாங்கள் லேசான திடுக்கிடலோடு ரஜினியை நிமிர்ந்து பார்த்தோம்.”

[திருப்பங்கள் தொடரும்..]

திரையுலகம் கண்ட திருப்பங்கள் – எஸ்.ஜே.இதயா.

முந்தைய அத்தியாயங்களைப் படிக்க..

sjidhaya-kavariman sjidhaya-rajini

sjidhaya-jaisankar