’அடுத்த ரஜினி , இளையராஜா யாருன்னு தெரிஞ்சிக்க ஆர்வமா இருக்கீங்களா?’

தவறான நபர்களுடன் கூட்டணி வைக்க நேரும்பொழுது,பாக்கு கடிப்பதாக நினைத்து நாக்கு கடித்து, வாக்கு தவறி கோக்குமாக்காக பேச நேருவது இயல்பு.

சந்தானத்தின் சுனாமி தாக்குதலில் இருந்த காமெடி நடிகர்கள் அனைவரும் சந்துபொந்துகளில் தஞ்சம் புகுந்துகொண்டிருக்க, ‘’நாங்கல்லாம் சுனாமியிலயே நீச்சல் அடிக்கிறவங்கடா’’ என்றபடி ஒரே நேரத்தில் 5 படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறாராம் கருணாஸ்.

‘ரகளைபுரம்’ சந்தமாமா’ என்ற பெயர்களில் ஏற்கனவே சொந்த நிறுவனங்களில் ஆரம்பிக்கப்பட்ட படங்கள் தயாராகி, விநியோகஸ்தர்களும், தியேட்டர் உரிமையாளர்களும் கியூவில் நின்றுகொண்டிருக்க, லேட்டஸ்டாக ‘மச்சான்’ என்ற படத்தில் இயக்குனர் சக்தி சிதம்பரத்துடன் கூட்டணி அமைத்திருக்கிறார்.

இந்தக்கூட்டணியின் பாட்டணி சரியில்லையோ என்னவோ, கேட்பவர்கள் விலா நொறுங்கிப்போகும் அளவுக்கு சில ஸ்டேட்மெண்டல்களை உதிர்க்க ஆரம்பித்திருக்கிறார் கருணாஸ்.

இந்தப்படத்தின் புரமோஷனுக்காக இரு தினங்களுக்கு முன்பு சக்தி சிதம்பரத்தின் அலுவலகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த கருணாஸ்’ ’’நான் இப்ப தொடர்ந்து 5 படங்கள்ல ஹீரோவா நடிச்சிட்டு வர்றேன். இந்த 5 படங்களுக்குமே ஸ்ரீகாந்த் தேவா தான் மியூசிக். ஒரு காலத்துல ரஜினி, இளையராஜா கூட்டணி எப்படி ஹாட்டா இருந்துச்சோ, அதுமாதிரியான கூட்டணி இது. இந்தப்படங்கள் வரிசையா ரிலீஸான உடனே ஜனங்க என்னை ரஜினியாவும், ஸ்ரீகாந்த் தேவாவை இளையராஜாவாவும் பாக்கப்போறதை நீங்க இருந்து பாக்கத்தான் போறீங்க’’ என்றார்.

டீ சாப்பிட்டபடி அதைக்கேட்டுக்கொண்டிருந்த நிருபர்கள் முகத்தில் ஈ ஆடவில்லை.

நமக்கோ கரகாட்டக்காரன் கவுண்டமணி டயலாக் தான் நினைவுக்கு வந்தது, ’’டேய் உண்மையைச் சொல்றா அவனைப் பாத்தா தில்லானா மோகனாம்பாள் சிவாஜி மாதிரியும், அவளப் பாத்தா பத்மினி மாதிரியும் தெரியுது சொல்றதுக்கு எவ்வளவுடா காசு குடுத்தாங்க?’’