’’சந்திரமவுலி’யின் தமிழ் ரிலீஸ் என்னை ரொம்பவே சங்கடப்படுத்துகிறது’’ – ராஜமவுலி

‘நான் ஈ’ பெற்ற மாபெரும் வெற்றி மற்றும் பாராட்டுக்களால் இப்போது வானத்தில் மிதந்துகொண்டிருக்கிறேன். தயவு செய்து எனது அடுத்த படம் என்ன என்பது குறித்து கேள்வி கேட்டு என்னை தரைக்கு இறக்காதீர்கள்’’

சக சினிமாக்காரர்கள், மற்றும் பத்திரிகையாளர்களுக்கு கடந்த இரு வாரங்களாய் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டிருக்கும் ஒரே பதில் இதுதான்.

ஆந்திராவாலாக்கள் எப்படி என்று தெரியவில்லை. ஆனால் நம் கோடம்பாக்கத்து ஆசாமிகள் ஒரு மனிதனை அவ்வளவு நிம்மதியாய் ஆகாயத்தில் பறக்க விட்டுவிடுவார்களா?

கடந்த ஒரு வாரம் முன்பு கோடம்பாக்கம் ஏரியாவில் பறந்துகொண்டிருந்த ராஜமவுலிக்கு, சுவர் முழுக்க தனது முகத்தை க்ளோசப் ஆகக்கொண்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருப்பது கண்டு மாபெரும் அதிர்ச்சி. ஒரு ‘ஈ’ சைஸில் கூட நமது படம் கொண்ட டிஸைனை ஓ.கே. பண்ணவில்லையே அப்புறம் எப்படி?’ என்று இறங்கிப்பார்த்தபோதுதான், தான் 2005-ல் இயக்கி மறந்துபோன ‘சத்ரபதி’ சந்திரமவுலியாக மாறி தமிழ் பேசப்போகிறார் என்பது தெரிந்திருக்கிறது.

வாரந்தோறும் சினிமா, புதுப்புது டெக்னாலஜிகள் வழியாக கண்ணடித்துக்கொண்டிருக்கையில் 7 வருடங்களுக்கு முன்பு வந்த படம், தனது இமேஜை கண்டிப்பாக காவு கேட்கும் என்பதைப் புரிந்துகொண்ட ராஜமவுலி, தமிழில் படத்தை டப் செய்துகொண்டிருக்கும் தயாரிப்பாளர் சதீஷைத்தொடர்புகொண்டு, ‘’ சந்திரமவுலி’ காரு தமிழ் பேசாமல் வாயை அடைக்க என்ன பண்ணவேண்டும் என்று கேட்டாராம். அதற்கு சதீஷோ, ‘சந்திரமவுலியின் 100 நாள் கலெக்‌ஷனை எதிர்பார்த்திருக்கிறார்.

இந்த டீலிங் நமக்கு ஒத்துவராது என்று ஒதுங்கிக்கொண்ட ராஜமவுலி, கடந்த இரு தினங்களாக, தனது ஃபேஸ்புக், மற்றும் இணையதளங்களின் வழியாக, தனது கடுமையான அதிருப்தியை ஓப்பனாக எழுத ஆரம்பித்திருப்பதுடன், தனது பெயரை ஒத்திருக்கும் சந்திரமவுலி’ என்கிற டைட்டில், மற்றும் அப்பட விளம்பரங்களில் தனது ஸ்டில்களைப் பயன்படுத்துவது மிகுந்த வேதனையளிக்கிறது’ என்கிறார்.

அடுத்த கட்டமாக ‘ஊட்டிக்குப்போகாதீங்க’ பாணியில் ‘சந்திரமவுலியை’ பாக்காதீங்க என்று ராஜமவுலி களம் இறங்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

படம்: ‘சத்ரபதி’ படப்பிடிப்பில் அதன் ஹீரோ பிரபாஸுடன் ஜாலி மூடில் தாடி சந்திர ஸாரி ராஜமவுலி