இன்றைய தினத்தில் நடுத்தர வகுப்பு மக்களின் சத்ரு தனியார் பள்ளிகள். மூன்று ரூபாய் மதிப்புள்ள மேக்சி சைஸ் போட்டோவுக்கு நூறு ரூபாய் கேட்டால் கூட, காரணம் கேட்காமல் கொடுத்தனுப்ப வேண்டிய அவல நிலை.

அரசுப்பள்ளிகளில் பிள்ளைகளைப் படிக்கவைப்பது கவுரவக்குறைச்சல் என்ற பொதுவான மனநிலை ஒன்று தோன்றிவிட்ட நிலையில், தனி ஒரு ஆசிரியன்

மனது வைத்தால் எதையும் சாதிக்கலாம் என்ற சத்தான கருத்துடன் ‘சாட்டை’யை கையிலெடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் அன்பழகன்.

தமிழ்சினிமா, சமீபகாலமாக கண்டு வரும் மாற்றங்களில் முக்கியமானது, சில இயக்குனர்களே தயாரிப்பாளர்களாகவும் மாறியிருப்பது. தயாரிப்பாளர்களை விட, நல்ல இயக்குனரை, நல்ல கதையை கண்டெடுப்பது இயக்குனர்களுக்கு சுலபமானது என்பதால், இந்த இயக்குன தயாரிப்பாளர்கள் மூலம் விரைவில் தமிழ்சினிமாவில் சில நல்ல இயக்குனர்கள் அறிமுகமாவார்கள் என்று நம்புவோமாக நமஹ.

ஒரு சிறிய கிராமத்தின் அரசுப்பள்ளிக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டரோடு வருகிறார் சின்சியர் ஆசியரான சமுத்திரக்கனி. பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜூனியர் பாலையா நல்லவர் என்றாலும் அவரைத் தன் கைக்குள் போட்டுக்கொண்டு, மாணவர்களின் பெற்றோர்களுக்கே வட்டிக்கு விடுவது, சில அள்ளக்கை ஆசிரியர்களை வைத்துக்கொண்டு பள்ளியை பாழாக்குவது என்று அட்டகாசம் செய்து வருகிறார் உதவி தலைமை ஆசிரியரான தம்பி ராமையா.

‘ஏணியை கூரையை நோக்கிப்போடாதே. வானத்தை நோக்கிப்போடு’. ‘ மாணவர்கள் பெற்றோரை நம்புறாங்க. ஆனா பெற்றோர்கள்தான் மாணவர்களை நம்புறதில்லை.’ போன்ற கொஞ்சம் பணிவான பஞ்ச் டயலாக்குகளோடு சமுத்திரக்கனி மாணவர்களை தன் வழிக்குக் கொண்டுவர முயல, அதைப்பொறுக்க மாட்டாத தம்பி ராமையா, வெம்பி வில்லனாக மாறி சமுத்திரக்கனியை தீர்த்துக்கட்ட முயல்வதும் என்று போகிறது ‘சாட்டை’

ஒரு அரசுப்பள்ளியை திருத்துவதை மட்டுமே மொத்தக்கதையாக எடுத்தால் ஒரு டாகுமெண்டரி ஃபீல் வந்துவிடுமோ என பயந்தோ என்னவோ, அவ்வப்போது ஒரு மாணவனுக்கும் ஒரு மாணவிக்கும் நடுவில் காதல்,மோதல், கடைசியில் இருவரும் பிரிந்து போதல் என்று கிளைக்கதை ஒன்றும் வைத்திருக்கிறார்கள்.

பேசாமல் கோடம்பாக்கத்திலிருந்து உடனே பேக்-அப் பண்ணி, ஏதாவது ஒரு அரசுப்பள்ளிக்கு ஆசிரியர் வேலைக்கு அனுப்பி விடலாமா என்று நினைக்க தூண்டுகிற அளவுக்கு, அப்படிப்பொருந்திப் போகிறார் சமுத்திரக்கனி.

ஆரம்ப காட்சிகளில் சற்றே எரிச்சலை ஏற்படுத்தினாலும், இப்படிப்பட்ட ஒரு குணச்சித்திர நடிகரை தமிழ்சினிமா கண்டு எவ்வளவு வருடங்களாகிவிட்டது என்று எண்ண வைத்துவிடுகிறார் தம்பி ராமையா.இனி நீங்க தம்பி இல்லை, குணச்சித்திர நடிகர்களுக்கெல்லாம் அண்ணன் ராமையா.

டி.இமானின் இசை, பாராட்டும்படியோ, வசை பாடும்படியோ இல்லாத மீடியமான இம்சை.

’ஜீவன்’ உள்ள ஒளிப்பதிவு.

சமுத்திரக்கனியை கதாநாயகியின் உறவினர்கள் தவறாகப் புரிந்துகொண்டு அடித்து உதைத்து, அது போலீஸ் ஷ்டேசன் வரை நீளுவது படு செயற்கையான, வலிந்து திணிக்கப்பட்ட காட்சி.

அதே போல், அரசுப்பள்ளிகளின் முக்கிய வில்லனான தனியார் பள்ளிகள் குறித்து எந்த விமர்சனமும் வைக்காமல், ஒரே ஒரு காட்சியில் மட்டும் ஊறுகாய் போல் தொட்டுக்கொண்டிருப்பது, இந்தப்படத்தின் உண்மையான நோக்கத்தை பெருமளவு சந்தேகம் கொள்ளவைக்கிறது.

ரெண்டு மணிநேர ஓட்டத்துக்கான கதை இல்லை, படத்தில் சொல்லப்பட்ட காதலும் பார்த்துப் புளித்தது, வரப்போகும் அவ்வளவு காட்சிகளும் சுலபமாய் யூகிக்க முடிந்தவை என்று ‘சாட்டை’யில் சில ஓட்டைகள் இருந்தாலும், இப்படி ஒரு சப்ஜெக்டை தேர்ந்தெடுத்ததற்காகவே இயக்குனர் அன்பழகனையும், தயாரிப்பாளர் பிரபு சாலமனை சால்வை போர்த்தி கவுரவிக்கலாம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.