’விமர்சனம்’- அலெக்ஸ்பாண்டியன் ’வெரி பேட் பேட் பேட் பாய்’

alex-pandian-movie-review

’படம் ரிலீஸாகி, தியேட்டர்கள்ல இருந்து டிஸ்க் கன்னெக்‌ஷனையெல்லாம் கூட  டிஸ் கன்னெக்ட்டே பண்ணிட்டாங்க. இன்னும் விமர்சனம் எழுதாம என்ன பண்ணிக்கிட்டுருக்கீங்க’ என்று அக்கரையோடும்,வக்கணையோடும் கேள்விகள் எழுப்பிக்கொண்டிருந்த கோடானுகோடி கோமான்களே, சீமான்களே, சீமாட்டிகளே,

அலெக்ஸ் பாண்டியனின் உருட்டுக் கட்டை அடிகளுள் ஒன்று திரைதாண்டி என்னைத்தாக்கியதில் படுகாயமுற்று, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, சற்று முன்னரே வீடு திரும்பியதால், ஏற்பட்ட தாமதத்திற்கு வருந்துகிறேன். விமர்சனம் படிக்க தாமதமானதால் ஏற்பட்ட உங்கள் மனக்காயங்களுக்கு இதோ மருந்துகிறேன்.

 ஒருத்தர் நடித்த படத்தை இன்னொருத்தர் பாக்குறதில்லை என்று உள்வீட்டு சபதம் எதையும் எடுத்திருப்பார்கள் போல் தெரிகிறது, அண்ணன் சூர்யா சில மாதங்களுக்கு முன்பு ‘மாற்றான்’ என்ற பெயரில் நடித்து தோற்றான்’ ஆனாரே அதே போலி மருந்துக் கதைதான்.

அநியாயத்துக்கு மெலிந்து காணப்படும் சோமன் மிலிந்த், சுமன் ஆகியோர் தமிழ்நாட்டுக்குள் போலி மருந்து சப்ளை பண்ண ஆசைப்படுகிறார்கள். மழைக்குக்கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்காத, நல்லவரான தமிழக சி.எம். விசு, அதற்கான ஃபைலில் கையெழுத்துப்போட மறுக்கிறார். அவர் ஒரு கைநாட்டு, அதனால்தான் கையெழுத்துப்போட மறுக்கிறார் என்கிற சாதாரண உண்மையைக்கூட புரிந்துகொள்ளாத முட்டாள்களான வில்லன்கள், அவரது மகள் அனுஷ்காவை, ஹீரோ கார்த்தியை வைத்து, கடத்திவிடுகிறார்கள்.
முதலில் காசுக்காக கடத்தலில் ஈடுபடும் கார்த்தி,அடுத்து அனுஷ்காவின் ஃபேஸுக்காக அவரை லவ் பண்ண ஆரம்பிக்கிறார்.நடு நடுவே டைம் பாஸுக்காக சந்தானத்தின் மூன்று தங்கைகளையும், சந்தானத்தையும் ஓட்டு ஒட்டென்று ஓட்டுகிறார்.

இந்தக்கதையில லாஜிக்ன்னு ஏதாவது இருக்கா பாஸ்?’ என்று கேட்டால் இயக்குனர் சுராஜும், தயாரிப்பாளர் ஞானவேலும் நம்மையும், அனுஷ்கா மாதிரியே. கார்த்தியை வைத்து கடத்துவார்கள் என்பதால் அது குறித்து அமைதிகாப்போம்.

டிக்‌ஷ்னரியில் இனிமே ‘ஓவர் கான்ஃபிடன்ஸ்’ என்று வருகிற இடத்தில் பேசாமல் கார்த்தியின் பெயரை ரீ-ப்ளேஸ் செய்துவிடலாம்.அனுஷ்காவை படத்தில் ஒரு ரிச் கேர்ள் அளவுக்கே பயன் ‘படுத்தி’ இருக்கிறார்கள்.கார்த்தியின் வெள்ளைச் சட்டையை மட்டும் போட்டுக்கொண்டு அவர் கிளாமர் காட்ட முயலும் காட்சியில், பேசாம நாம கொஞ்ச நேரத்துக்கு கிழவராக மாறிவிடலாமா? என்று பம்மவேண்டிய அளவுக்கு பஞ்சம்.
தங்கைகளையும், அம்மாவையும் கார்த்தியிடமிருந்து காப்பாற்ற சந்தானம் அடிக்கும்,.. சூ,.. ஸாரி,.. கூத்து முழுக்க சாக்கடை நாற்றம். தம்பி பாத்து.
’சிலம்பாட்டம்’ படத்தின் மூலம் இயக்குனராக புரமோஷன் ஆகி,தயாரிப்பாளர்களை மோஷன் போகவைத்துவிட்டுத் திரும்பிய சரவணன், ஒரு சின்ன கேப்புக்கு அப்புறம் மீண்டும் ஒளிப்பதிவியிருக்கிறார்.

இசை டி.எஸ்.பி. என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் தேவிஸ்ரீபிரசாத்.’ வெரி வெறி’ பேட் பாய்’ உட்பட்ட அவரது அத்தனை பாடல்களுமே இசைக்கலவரம் நடத்தி, நம் காதுகளின் நிலவரத்தையே மாற்றுகின்றன.தனது இசைப்பணியை தொடர்ந்து ஆந்திரமக்களுக்கே அளித்து சீறும் சிறப்புமாய் வாழ சீற்றத்துடன் கேட்டுக்கொள்கிறோம்.

’கைவசம் நிறைய துட்டு இருக்கு. தாராளமா செலவு பண்ணுங்க’என்று தயாரிப்பாளர் ‘க்ரீன்’ சிக்னல் காட்டியிருப்பாரோ என்னவோ,காட்டுக்குள் அடிக்கடி’தன் தலையைக் காட்டிக்கொண்டிருக்கிறார்’ ஆர்ட் டைரக்டர் எம்.பிரபாகரன்.

தீப்பெட்டியை ஒருபக்கம் உரசினாத்தான் தீப்பிடிக்கும். ஆனா இந்த அலெக்ஸ்பாண்டியனை எந்தப்பக்கம் உரசினாலும் தீப்பிடிக்கும் என்று ஒரு பஞ்ச் டயலாக்கை படத்தில் வைத்திருக்கிறார்கள்.ஆனா இந்தப்படத்தைப் பாக்குறவங்களுக்கு முத ஃபைட்லருந்தே உடம்பெல்லாம் எரிச்சல்ல தீப்பிடிக்கும். தப்பித்தவறி இதுவரைக்கும் பாக்காதவங்க, அந்தக்காசை எடுத்துக்கிட்டு, பக்கத்தில இருக்க நாயர்கடைக்குப் போங்க. அந்தக்காசுல வாங்கிக் குடிக்கிற ‘டீ புடிக்கும்’