சேட்டை பத்திரிக்கையாளர்களைப் போட்ட ஆ(ய்)ட்டை

SettaiMovieStill3

இடையில் ‘சென்னையில் ஒரு நாள், ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ போன்ற ஒரு சில  படங்களுக்கு விமர்சனம் எழுதாமல் போனதற்கு ‘பரதேசி’ பாலா மேல் சத்தியமாக எந்த உள்நோக்கமும் இல்லை. அதனால் சமூகத்துக்கு எவ்வித தீங்கும் நேர்ந்து விடப்போவதில்லை என்பதை அறியாதவர்களா நாம்?

எனவே என்னையும் சக பத்திரிகையாளர்களயும் வெரைட்டியாக வேட்டையாடிய ‘சேட்டை’ பட சமாச்சாரத்துக்கு வருவோம்.
இந்தியில் ‘டெல்லி பெல்லி’ என்ற பெயரில் ரிலீஸாகி, கடும் விம்ர்சனத்துக்கு ஆளானாலும்,  கல்லாக்கட்டிய படத்தை அதன் ஆபாசக்காட்சிகள், கருத்துக்களில் கொஞ்சம் கத்தரித்து தமிழுக்கு கருத்தரிக்கிறார்கள்.

 தனஞ்செயனின் தலைமையில் யூடிவி மோஷன் பிக்சர்ஸ் இதுவரை போட்ட சாணிகளிலேயே இது கொஞ்சம் மணம் தூக்கலான சாணி என்று மூக்கைப்பிடித்தபடி சொல்லவேண்டிய படம் ‘சேட்டை’.
ஆர்யா, ப்ரேம்ஜி, சந்தானம், நாசர், ஹன்ஷிகா ஆகியோர் ஒரு ஆய் பாட்டிலைக்கையில் வைத்துக்கொண்டு நாயாய், பேயாய் அலைந்த கதை என்று சுருக்கமாக இதைச்சொல்லலாம்.

ஆர்யா, ப்ரேம்ஜி, சந்தானம் ஆகிய மூவரும் பத்திரிக்கையாளர்களாம்.முதல் இருவரும் நல்ல ஆர்டிக்கிள் எழுதி நாலு காசு பார்க்கலாம் என்று நினைக்க, சந்தானம் கிசுகிசு எழுதி நடுப்பக்கத்தில் கிளாமர் ஸ்டில் போடக்கூடிய நடுப்பக்க நக்கியாக நடமாடுகிறார். நாகராஜ் என்பதன் சுருக்கமே நக்கி.

இந்த நடுப்பக்க நக்கி ஒரு முறை சிக்கலான சிக்கன் ஒன்றை நக்கிவிட, அது லூஸ்மோஷன் ஆகி, அவரும் கதை இலாகாவும் டோட்டலாக டாய்லெட்டுக்குள் போய்விடுகிறார்கள்.
அப்புறம் என்ன படம் முழுக்க ஒரே ஆய் நாத்தம் தான். படத்தில் யாராவது ஒருத்தர் மற்றொருவரைப்பார்த்து ‘ஹாய்’ என்று சொன்னால் கூட அது நமக்கு ஆய் என்று கேட்கிற அளவுக்கு நாறுகிறது என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.
 
ஆர்யாவுக்கும் ஹன்ஷிகாவுக்கும் சில டூயட்களை வைப்பதற்காகவே வேலை மெனக்கெட்டு சில காதல் காட்சிகளை வைத்திருக்கிறார் இயக்குனர் கண்ணன்.

பத்திரிகையாளர்கள் மீது கோபம் இருக்கவேண்டியது நியாயம்தான். ஆனால் அதற்காக அவர்களை இவ்வளவு கேணக்கிறுக்கன்களாக சித்தரித்திருக்கவேண்டாம். அதுவும் ஆசிரியராக வரும் சித்ரா லட்சுமணன் கேரக்டர் செம டுபாக்கூர்.
 
ப்ரேம்ஜி பெயர்க்குப் பொருத்தமாய் கணமான ப்ரேம் கொண்ட கண்ணாடி அணிந்து வருகிறார். சந்தானத்தின் கக்கூஸ் காமெடிகள்,,,, படம் முடிந்து திரும்பும்போது காதை டெட்டால் ஊற்றிக்கழுவ வேண்டும்போல.

ஒளிப்பதிவு பி.ஜி. முத்தையா. இசை எஸ்.எஸ். தமன்.
 
இதற்குப் பிறகு, இனியும் படம் எடுப்பார்கள் எனும் பட்சத்தில் யூடிவி தன் நிறுவனத்தின் பெயரை பேசாமல் லூஸ்மோஷன் பிக்‌ஷர்ஸ் என்று மாற்றிக்கொள்ளலாம். அலுவலகத்திலும் ஒரே ஒரு அறையை மட்டும் விட்டுவிட்டு மற்றவை அனைத்தையும் டாய்லெட்டாக மாற்றிவிடலாம்.  ஆய்ஹிந்த்.