நல்லா சிரிச்சு விழுந்துக்கோ குமாரு !

Theeya-Velai-Seyyanum-Kumaru-review

மக்களின் ஏகோபித்த ஆதரவால் செம ஹிட்டாகி ஓடிக்கொண்டிருக்கும் தீயா வேலை செய்யனும் குமாரு படத்திற்கு விமர்சனம் எழுதுவதில் பெரிய எதிர்பார்ப்பு உங்களுக்கு இல்லையென்றாலும் பத்திரிக்கையாளன் தன் கடமையைச் செய்யவேண்டுமே ! என்ன செய்வது ?ஆகவே சட்டம் தன் கடமையை (கடனுக்கு)ச் செய்வது போல இதோ விமர்சனம்.

இப்போதிருக்கிற நெருக்கடி நிறைந்த வாழ்க்கையில் மக்களால் தங்கள் வாழ்வில் தங்களுக்கு நிகழும் பிரச்சனைகளுக்கு யார் காரணம் என்று அறியும் தன்மை மரத்துப் போயே விட்டதால் துன்பத்துக்கு பழகிக் கொள்ள முயற்சிக்கிறார்கள். 10க்கு எட்டு அறையில் பத்துப்பேர் வாழ்ந்து குடும்பம் நடத்தும் கஷ்டத்துக்கிடையிலும் ஞாயிற்றுக்கிழமை சாயங்காலங்களில் பீச்சுக்குப் போய் ஆசுவாசப்படுத்திக் கொள்ள முடிகிறது அவர்களால்.

இப்படி நெருக்கடி உலகில் வாழும் பெரும்பாலான மக்கள் தங்கள் கனவுகளைத் தேடி வரும் இடமாக சினிமா ஆகிப் போனது. அவர்களுக்காகவே உருவான தீ.வே.செ.குமாரு. படத்தின் நோக்கம் நகைச்சுவை. படத்தின் தலைப்பிலேயே ரசிகனுக்கு மிகத் தெளிவாக இவ்விஷயம் விளக்கப்பட்டுவிடுவதால் தியேட்டருக்குள் வரும் ரசிகன் எந்தவித யதார்த்த லாஜிக்குகளையும் எதிர்பார்க்காமலிருக்க தயாராகி வருகிறான். சுந்தர் சியின் பழைய படங்கள் பெரும்பாலும் இந்தவித லாஜிக் இல்லாத காமெடிப்படங்களே.

சித்தார்த்தின் குடும்பத்தினர் பாரம்பரியமாகவே காதல் திருமணம் செய்தே வந்திருப்பவர்கள். சித்தார்த் மட்டும் இது போன்ற காதல்களை சரியாக ஒர்க் அவுட் பண்ணத் தெரியாத அப்பாவி. எனவே அவனுக்கு பெண் எதுவும் செட்டாகவில்லை. அவன் வேலை செய்யும் ஐ.டி. கம்பெனியில் புதிதாக வேலைக்குச் சேரும் ஹன்ஸிகா மோத்வானியைப் பார்த்ததும் அழகில் மயங்கி விடுகிறார். அதுவே காதல் என்று அர்த்தப்படுத்தப்படுகிறது (கண்டதும் காதல்? இதன் பெயர் க்ரஷ் இல்லையா?). கனவில் டூயட் பாடி முடிக்கிறார்.

அடுத்து நனவுலகில் பார்த்தால் அந்த ஆபிஸே ஹன்ஸிகாவின் பின் ஜொள்ளுகிறது. படத்தைப் பார்க்கும் 15 வயது முதல் 25 வயதுக்கிடைப்பட்ட வாலிபர்கள் ஹன்ஸிகாவுக்காக மட்டுமே  இந்தப் படத்தை 4 முறை மறுபடியும் பார்ப்பார்கள். ஹன்ஸிகாவும் அதற்கேற்றார் போல வருஷம் 16ல் வரும் குஷ்பூ போலவே அல்வாத் துண்டாக படம் முழுவதும் காட்டப்படுகிறார், கன்னம் குழி விழ சிரிக்கிறார் ( குஷ்பூ மேடம் தான் படத்தோட காஸ்ட்யூம் டிசைனராம். படத்துக்கா இல்லை ஹன்ஸிகாவுக்கு மட்டுமா மேடம் ? ஹன்ஸிகா அடுத்த குஷ்பூவாக ரவுண்ட் வர வாய்ப்பு பிரகாசமாய் தெரிகிறது. வருங்காலத்தில் கட்சி கொள்கை பரப்ப அதிமுகவினர் இப்போதே அவரை புக் செய்துவிடுவது நல்லது).

இப்போது ஆபீஸில் ஸ்மார்ட்டான ஜானி ஆப்ரஹாம் போல என்ட்ரி ஆகிறார் கணபதி வெங்கட்ராம். அவரைக் கண்டு ஆபிஸ் பெண்கள் பாதிப்பேர் ஜொள்ளு விடுகிறார்கள். சித்தார்த் காதில் புகை விடுகிறார். அந்த அழகான வாலிபர் அழகான வாலிபி ஹன்ஸிகாவுடன் நெருங்கி சகஜமாய்ப் பழக இப்போது தன் காதலை கைப்பற்றியே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கும் சித்தார்த் நாடிச் செல்வது ஒரு ஐடியா டாக்டர் மோக்கியாவை(நோக்கியா – கனெக்டிங் பீப்பிள் போல மோக்கியா) நோக்கி. அந்த டாக்டர் தான் சந்தானம்.

சந்தானம் சித்தார்த்தை ட்ரெய்ன் செய்து சித்தார்த்தை நடையுடை மாற்றி ட்ரிக்குகள் பல சொல்லித்தர அதைப் பின்பற்றி சித்தார்த்தும் ஹன்ஸிகாவை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்குகிறார். இதற்குப் பின்தான் தெரியவருகிறது சந்தானத்தின் தங்கை தான் ஹன்ஸிகா என்று. சந்தானம் இப்போது வில்லனாகி சித்தார்த் ஹன்ஸிகா காதலை பிரிக்கப் பார்க்கிறார்.  கடைசியில் அவர்கள் சேர்ந்தார்களா ? இல்லையா ? இதுதான் படம்.

கதை என்பது படத்தில் பெயருக்குத் தான். படத்தின் பெரும் பலம் வசனம். அது சந்தானம் பேசும் பஞ்ச் டயலாக்குகளானாலும் சரி. மற்றவர்களின் காமெடியானாலும் சரி. படத்தின் வசனம் எழுதியிருப்பவர் சூது கவ்வும் இயக்குனர் நலன் குமாரசாமி மற்றும் சீனி. வசனத்தில் தெரியும் ஆளுமையும், நகைச்சுவையுமே இப்படத்தின் வெற்றிக்கு முதல் முக்கிய காரணம்.

சேம்பிளுக்கு சில. இந்தக் காலப் பொண்ணுங்களை காமெடியா ஏமாத்த முடியாது. சீரியசாத்தான் ஏமாத்தனும்.  நாகூர் பிரியாணி உளுந்தூர்ப் பேட்டை நாய்க்குத்தான் கிடைக்கனும்னு இருந்தா அதை யாராலும் மாத்த முடியாது. லவ் பண்ற பொண்ணும் அப்படித்தான்.

அடுத்த ப்ளஸ் பாய்ண்ட் ஒளிப்பதிவு. கோபி அமர்நாத் படத்தின் முக்கிய கவர்ச்சிப் பொருளான ஹன்ஸிகாவை எவ்வளவு அழகாக பதிய முடியுமோ அவ்வளவு அழகாகப் பதிந்திருக்கிறார். இது போன்ற காதல் படங்களின் முக்கியத் தேவை ஹீரோ ஹீரோயினை காதலித்தானோ இல்லையோ ரசிகன் ஹீரோயினைக் கண்டதும் காதல் வயப்படவேண்டும்.(ரசிகை – ஹீரோவுக்கும் இதே லாஜிக் பொருந்தும்). கோபி அமர்நாத் இவ்வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார்.  இசை சத்யா என்பவர். ஹன்ஸிகாவை க்ளாமராகக் காட்ட நான்கு பாட்டுக்கள் போட்டிருக்கிறார். சந்தானம் ப்ளாஷ்பேக் காட்சியில் லொள்ளு சபாவின் பாணியில் பழைய படத்து பிண்ணணி இசையை பயன்படுத்தியிருப்பது பரவாயில்லை. மற்றபடி இசை சுமார் தான்.

 மொத்தத்தில் நல்ல திரைக்கதை, வசனம் மற்றும் சுந்தர் சியின் தேர்ந்த இயக்கம் எல்லாம் சேர்ந்து படத்தை மிகவும் ரசிக்கவைத்து விடுகின்றன.

படத்தின் முக்கிய நெருடல் படம் பெண்களை போகப் பொருளாகப் பார்ப்பது. சித்தார்த்தோ, வெங்கட்ராமோ யாராக இருந்தாலும் ஹன்ஸிகா அவர்கள் காதலை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது. அவளுக்கென்று சுயமான எண்ணங்களோ, கருத்துக்களோ, கேரக்டரோ இல்லை. அவர் ஒரு கொலுப் பொம்மையாகவே வருகிறார்.  போகிறார்.  பெண்களை வெறும் ட்ரிக் செய்து காதலிக்க வைத்துவிடலாம் என்று மூடத்தனமான ஐடியாவையும் படம் ரசிகனுக்கு கொடுக்கிறது (அவ்வையே காதல் என்றால் என்ன? கரெக்ட் பண்ணுவது என்றால் என்ன?). அதனால் இது உயிர்ப்பில்லாத யதார்த்தமில்லாத காதலை வைத்து காமெடி ‘பண்ணும்’ காமெடிப் படமாக ஆகிவிட்டது. அதிர்ஷ்டவசமாக (அல்லது துரதிர்ஷ்டவசமாக) இந்தக் காதல்களின் தட்டையான தன்மையை உணரும் நிலையில் நம் ஊர் ரசிகனும் இல்லை. விஜய் ஹீரோயினை மிரட்டி காதலைச் சொல்லி(?) அவளை காதலிக்க வைக்கும் வித்தையை ரசிப்பவர்களல்லவா இவர்கள்.

வில் ஸ்மித் நடித்த ‘தி ஹிட்ச்'(The Hitch) என்கிற ஆங்கிலப் படத்தில் அவர் சந்தானம் தீ.வே.செ.குமாருவில் காதலர்களைச் சேர்க்கச் செய்யும் இதே ஐடியா மணி வேலையைத் தான் செய்வார். அப்படத்தில் வில் ஸ்மித்தே ஒரு பெண்ணிடம் காதலில் விழுவார். அதைப் பற்றியானது அந்த நகைச்சுவைப் படம். கடைசிக் காட்சியில் அக்காதலை அவர் வெளிப்படுத்தும் இடத்தில் உயிர்ப்புள்ள, நிஜமான காதல் நம் நெஞ்சில் வந்து நிறைந்து கொள்ளும். ஹிட்ச்ல் தெரியும் உயிரோட்டம், அப்படம் காதலை மேன்மைப்படுத்தும் விதம் நம்ம ‘குமாரு’விடம் இல்லைதான்.