பிரியாணியில்லை பிரிஞ்சி சாதம்

biriyani-movie-review

வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் கார்த்தி குடும்பத்தின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீனின் தயாரிப்பில் வந்திருக்கிறது இந்தப் பிரியாணி.ஆங்கிலத்தில் பல பார்ட்கள் வந்துவிட்ட ‘ஹேங்கோவர்'(Hangover) என்கிற ஆங்கிலப் படம் கொஞ்சம் , கமல்ஹாசனின் ‘இந்திரன் சந்திரன்’ கொஞ்சம், மிச்சம் வெங்கட் பிரபுவின் காமெடி ஸ்கிரிப்ட் கொஞ்சம் என்று கலந்து செய்த காமெடித் த்ரில்லர் கலவைதான் இந்தப் பிரியாணி.

கார்த்தி ஒரு ட்ராக்டர் கம்பெனியில் சேல்ஸ் மேனேஜர். அதன் புதிய கிளையை ஆம்பூரில் திறக்க அவருடைய பால்ய காலத்திலிருந்து நண்பனான ப்ரேம்ஜியுடன் செல்கிறார். அந்தக் கிளையை திறக்க வருகை தருபவர் பிரபல தொழிலதிபர் நாசர். நாசரை அவரது பினாமித் தொழில் கல்குவாரிகள் சம்பந்தமாக சி.பி.ஐயின் ஆபிசர் கைது செய்ய அங்கே வருகிறார்.

வந்த இடத்தில் நாசருக்கு கார்த்தியின் சுறுசுறுப்பு பிடித்துப் போய்விட அவரை தனது மாப்பிள்ளையாகவே ஆக்கும் எண்ணம் கொள்கிறார். இந்தக் கட்டத்தில் நாசர் திடீரென்று கொலையாகிறார். அவர் கொலையான ஹோட்டல் அறைக்கு கார்த்தியின் பிரியாணி சாப்பிடும் ஆசையும் ஒரு அழகான பெண்ணும் அழைத்துச் செல்ல, சந்தர்ப்ப சூழ்நிலைகள் கார்த்தியையும் ப்ரேம்ஜியையும் கொலைகாரர்கள் என கைகாட்ட போலீஸ் அவர்களைத் துரத்த அவர்கள் எப்படித் தப்பித்தார்கள், கொலையைச் செய்தது யார் என்று கடைசிக் காட்சியில் முடிச்சை அவிழ்க்கிறார்கள்.

ஓ. மறந்தே போய்விட்டது. படத்தின் இரண்டாவது சீனிலிருந்து வரும் ஹன்ஸிகா மோத்வானி கார்த்தியை காதலிக்கிறார். சண்டை போடுகிறார். காதலிக்கிறார். டி.வி தொகுப்பாளினியாக வரும் அவர் பிற்பாதியில் கொலைகாரர்களை கண்டுபிடிக்க கார்த்திக்குக்கு உதவுகிறார். அவர் போல கார்த்திக்கு நான்கு நண்பர்களும் இடுக்கண் வருங்கால் உதவுவதுக்கென்றே படத்தில் வருகிறார்கள். நட்பை பெருமைப்படுத்தும் டயலாக்குகள் பேசுகிறார்கள். உதவுகிறார்கள்.

படத்தின் முதல் பாதியில் முக்கால் வாசி நேரம் கார்த்திக் அண்ட் நண்பர்கள் குடிக்கிறார்கள். கும்மாளம் அடிக்கிறார்கள். அழகா ன பெண்களை ப்ரேம்ஜி ஜொள்ளு விட அவர்களை கரெக்ட் பண்ணித் தருகிறேன் என்று சொல்லி அசால்ட்டாக தானே கரெக்ட் பண்ணிக்கொள்கிறார் கார்த்தி. இந்தக் கொடுமையான நட்புக்கு சிறுவயதிலிருந்து ப்ளாஷ் பேக்குகள் வேறு. என்ன ரசனை உங்களுக்கு வெங்கட் பிரபு சார் ?

படத்தின் மூலத்திரைப்படமான ஹேங்கோவரை நீங்கள் பார்த்திராத பட்சத்தில் கதையும் அதன் திருப்பங்களும் படத்தில் உங்களை ஒன்றவைக்கும் சாத்தியமிருக்கிறது. ஆனால் படத்தில் உயிரோட்டமாக தோன்றுபவர்கள் கார்த்தி, கார்த்தியின் அக்கா மற்றும் நாசர் மட்டுமே. மற்றவர்களிடம் சரியாக நடிப்பு வாங்கவில்லை வெங்கட் பிரபு. அத்துடன் மற்ற பாத்திரங்கள் எல்லாமே உயிர்ப்பின்றி தட்டையாக வருகிறார்கள். காமெடி படம் என்றால் ரசிகர்கள் இதைப் பற்றி அலட்டிக் கொள்ளமாட்டார்கள் என்று வெங்கட் பிரபு நினைத்துவிட்டார் போலும். த்ரில்லர் கதையில் ஏகப்பட்ட லாஜிக் குளறுபடிகள் வேறு.

இசை யுவன் ஷங்கர் ராஜா. பாடல்களை சிரத்தை எடுத்து முயன்றிருந்தாலும் பாடல்கள் எதிர்பார்த்த அளவு இல்லாததால் படத்துக்கு தொய்வு ஏற்பட்டுவிடுகிறது. பிண்ணணி இசையும் சுமார் ரகமே. ப்ரேம்ஜியின் காமெடி எதிர்பார்த்த அளவு எடுபடாதது ஒரு பெரிய மைனஸ். படத்தில் வெங்கட் பிரபுவின் காமெடி இழையோடும் ஸ்கிரிப்ட் மட்டுமே வெங்கட் பிரபுவின் பலமாக இருக்கிறது. அதில் கூட ப்ரேம்ஜிக்குப் பதில் சந்தானம் இருந்திருந்தால் படத்திற்கு நிச்சயம் வலு சேர்ந்திருக்கும். சக்தி சரவணனின் ஒளிப்பதிவு கொஞ்சம் ஆறுதல்.

குறும்பட இயக்குனர்களின் இயக்கத்தில் வந்த அட்டகத்தி, ந.கொ.ப.காணோம், சூது கவ்வும் போன்ற வித்தியாசமான காமெடிப் படங்களின் தாக்கத்திற்குப் பின் பார்க்கும் போது வெங்கட் பிரபுவின் காமெடி த்ரில்லர் மேட்டர் குறைவானதாக இருப்பதால் பிரியாணி ஆறிய ‘சுமாரான’ பிரிஞ்சி சாதமாக ஆகிவிட்டது.