ivan-vera-madhiri-movie-review

எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணனின் இரண்டாவது படம் விக்ரம் நடித்திருக்கும் இவன் வேற மாதிரி. முதல் படத்தில் எடுத்த பெயரை தொலைத்து விடாமல் கச்சிதமான கமர்ஷியல் கதையின் மூலம் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார் இயக்குனர்.

விஸ்காம் முடித்த வித்தியாசமான இளைஞர் விக்ரம் பிரபு. டிசைனராக வேலைக்குப் போன அன்றே முதலாளியின் டிசைன் ஐடியா சுமாராகத் தானிருக்கிறது என்று சொல்லிவிட உடனே முதலாளி ‘நீ கிளம்புப்பா’ என்று சொல்லிவிட அதற்கு அசராமல்’என் ஒருநாள் சம்பளத்தைக் கொடு’ என்று கேஷூவலாக சொல்லி கிளம்பி வரும் துணிச்சலுள்ள இளைஞர்.அவருக்கு நாலு அல்லது ஐந்து நண்பர்கள். நண்பர்கள் இல்லாமல் ஹீரோவா ? ஆனால் அளவாய் கதைக்குத் தேவைப்படும் இடத்தில் மட்டும் வந்து, நட்பு டயலாக் பேசி  இம்சிக்காமல் நம்மை ஆறுதல் படுத்தும் நண்பர்கள்.

சென்னை சட்டக் கல்லூரியில் இரண்டு சாதி மாணவர் பிரிவினர்களுக்கிடையேயான சண்டையில் ஒரு மாணவனை ஒரு கும்பல் கல்லூரி வளாகத்துக் குள்ளேயே ஒரு பத்துப் பேர் சுற்றி நின்று உருட்டுக் கட்டை போன்றவற்றால் ரத்த விளாராக அடித்து வாசல் கதவினருகே அவன் கீழே மயக்கமாகி விழுந்த பின்பும் கோபம் அடங்காமல் அடித்து உதைத்ததை வாசல் கதவுக்கு வெளியே போலீஸ் மற்றும் டி.வி.சானல்கள் லைவ்வாக படமெடுத்தபடி மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிஜ சம்பவத்தை மையக்கருவாகக் கொண்ட கதை.

அந்த நிஜ சம்பவத்தின் பின்னால் தலித் மற்றும் ஆதிக்க சாதியினருக்கிடையேயான சாதீய மோதல் இருந்தது. சரவணன் தனது கதைக் களத்துக்காக அதை வேற மாதிரி மாற்றியிருக்கிறார். நாட்டின் சட்ட அமைச்சரான ஒரு அரசியல்வாதி தனது சுயநலத்திற்காக ஜெயிலில் இருக்கும் தனக்காக பல கொலைகள் மற்றும் ரவுடித்தனங்கள் செய்த தன் தம்பியை பரோலில் எடுத்து சட்டக் கல்லூரியில் கலவரத்தை ஏற்படுத்த அழைத்து வருகிறார். அவன் தான் இது போன்று ஆட்களைக் கொண்டு மாணவர்களைத் தாக்குபவன். தாக்குதலுக்கு ஆளான மாணவன் பின் மருத்துவமனையில் இறந்து போகிறான். தமிழ் நாடே இந்த வீடியோ காட்சியைக் கண்டு அதிர்ந்து நிற்கும் வேளையில் ஹீரோ விக்ரம் இந்த சமூகப் பிரச்சனைக்கு இளைய தலைமுறையான தன்னால் என்ன தீர்வு கொடுக்க முடியும் என்று யோசிக்கிறார். சைலன்ட்டாக அந்த ரவுடித் தம்பியை ஃபாலோ செய்து கண்காணித்து அவன் தனியாக இருக்கும் வேளையில் முகமூடி அணிந்து அவனைப் பிடித்து கடத்தி வந்து தனியான ஒரிடத்தில் அடைத்து வைத்துவிடுகிறார். பரோல் நாட்கள் முடிந்து மீண்டும் சிறைக்கு திரும்பவேண்டிய தம்பி காணாமல் போய்விட அதை அமைச்சர் நைசாக மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு விஷயத்தை விக்ரம் பிரபு போட்டுக் கொடுக்க அமைச்சரின் அரசியல் வாழ்க்கையே ஆடிப் போகிறது. யார் செய்தது என்று தெரியாமல் அமைச்சரும் , ரவுடித் தம்பியும் குழம்பி என்ன செய்கிறார்கள்? விக்ரம் பிரபுவை கண்டுபிடித்தார்களா ? யார் யாரை எப்படிப் பழி வாங்கினார்கள் என்பதே த்ரில் குறையாத மீதிக்கதை.

யார் செஞ்சாங்கன்னு அடையாளம் தெரியாம செஞ்சா ரவுடிகளை சாதாரண மக்களும் மிரள வைக்கலாம் என்கிற பாண்டி நாட்டு பட ஐடியா இங்கேயும் ஒர்க்அவுட் ஆகிறது.ஐடியாவை அழகான காதல் கதையுடன் இணைத்து சரவணன் எழுதியிருக்கும் திரைக்கதை மற்றும் வசனங்கள் தான் படத்துக்கு பெரும் பலம். படம் முழுவதும் அடுத்து என்ன நடக்கும் என்கிற எதிர்பார்ப்பை உருவாக்கும் திரைக்கதை. படம் முழுவதும் ரசிக்கக்கூடிய வசனங்களும் உண்டு.  உதா. நம்பிக்கைத் துரோகம்கறது வீட்லருந்து ஆரம்பிக்குது.

ஹீரோயினின் தங்கை, அம்மா, அப்புறம் சட்ட அமைச்சரின் ரௌடித் தம்பியாக வரும் வில்லன் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு பலம். நடிகர்களிடம் நடிப்பு வாங்கியிருப்பதிலும் சரவணனுக்கு வெற்றியே. ஒரு சமூகப் பிரச்சனைக்காக விக்ரமை களமிறங்க வைக்கும் அந்த ஆரம்ப கட்ட காட்சிகள் கொஞ்சம் செயற்கையாக இருந்தாலும் பிற்பாதிப் படத்தை பாதித்துவிடவில்லை.

கும்கி விக்ரம் பிரபு ஒரு நடுத்தர வர்க்கத்து நகரத்து இளைஞனாக நன்றாகவே தோற்றமளிக்கிறார். ஒரு கமர்ஷியல் ஹீரோவுக்கு தேவைப்படும் நடிப்பு இருக்கிறது. நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தினால் அப்பா பிரபுவை விட நல்ல உயரங்களுக்குப் போகலாம்.

புதுமுகம் சுரபி குழந்தைத்தனம் நிரம்பிய கல்லூரிப் பெண்ணாக வந்து ஜமாய்க்கிறார். இவருக்கும் விக்ரம் பிரபுவுக்குமிடையே காதல் வரும் பகுதி இளமை, இனிமை. கணேஷ் வெங்கட்ராம் மிடுக்கான இளம் போலீஸ் அதிகாரியாக கச்சிதமாக நடித்திருக்கிறார்.

சத்யாவின் இசையில் ‘லவ்வுல விழுந்துட்டேன்’ம்  ‘என்னை மறந்தேன்’ம் பரவாயில்லை. பாடல்களும் இசையும் படத்தின் போக்கிற்கு உதவி செய்திருக்கின்றன. சக்தியின் ஒளிப்பதிவும் அப்படியே. மொத்தத்தில் இவன் வேற மாதிரி, இனிப்பான பாலுக்குள் கலந்திருக்கும் மருந்து மாதிரி ஒரு மெஸஜ் கலந்திருக்கும் கமர்ஷியல் ஆக்ஷன் த்ரில்லராயிருந்தாலும் நல்ல மாதிரி படம் தான். பாருங்க.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.