sivappu-sathya-siva-news

ஈழப் போராட்டத்தை இங்கே மேடையில் வைத்து வாய்கிழிய பேசும் திருமா, ராமாதாஸ்மா ,டெசோகோ , வையகோ போன்றவர்கள் இங்கே அகதிகள் முகாமில் இருக்கும் சுமார் 50 ஆயிரம் ஈழத்தமிழர்களின் துயரமான வாழ்க்கையையும் அவர்கள் அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்குக்கூட மறுக்கப்பட்டு ஜெயில்வாழ்க்கை வாழ்வதையும் கண்டுகொள்வதேயில்லை. “முகாம்களில் நாங்கள் ஜெயில் வாழ்க்கை வாழ்கிறோம். தொப்புள்கொடி சொந்தங்கள் எங்களை

அரவணைக்கத் தவறிவிட்டன. எங்கள் மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட நாங்கள் ஆதரவற்றிருக்கிறோம். எங்களை ஆதரியுங்கள். இல்லை. விட்டுவிடுங்கள். எங்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள். அது கேவலமானது.” – என்று கூறுகிறார் முள்ளிவாய்க்காலில் காயங்களோடு தப்பிவந்து சேர்ந்த ஓர் அகதியின் வேண்டுகோள் இது. அகதியின் அந்த வேதனைக்குரலைத் தான் இங்கே பதிவு செய்திருக்கிறேன் என்கிறார் ‘சிவப்பு’ படத்தின் இயக்குனர் சத்யசிவா. ஏற்கனவே கழுகு படத்தை இயக்கிய இவருக்கு இது இரண்டாவது படம்.

படத்தின் தலைப்பே வன்முறை சம்பந்தப்பட்டதாகத் தோன்றுகிறதே?
நிராகரிக்கப்பட்ட ஒரு புன்னகைதான் உலகின் முதல் வன்முறைக்கு வித்திட்டிருக்கும். ஈழப்போரிலிருந்து தப்பித்து வந்தவர்கள் இங்கே பாண்டிச்சேரியில் அடைக்கலம் தேடுகிறார்கள். உறவுகள் கைகொடுக்காத நிலையில், இங்கேயும் வாழ்க்கை துன்பமாகவே தொடர்வதைக் கண்டு ஆஸ்திரேலியாவுக்குத் தப்பிச் செல்ல எண்ணுகிறார்கள். அவர்களை உள்ளூர் மீடியேட்டர்கள் ஏமாற்றுகிறார்கள். இதற்கிடையே இதில் பூவாக விரிந்து நிற்கும் காதல். அதற்குள் நுழைந்து நிற்கும் அரசியல். ராஜ்கிரண் இப்படத்தில் அருமையாக நடித்துள்ளார்.

ஈழப்போர், அகதிகள் முகாம்கள், அரவணைப்பு காதல் எல்லாம் தமிழ்ச் சினிமாவில் வந்திருந்தாலும் ஏனோதானோவென்று சொல்லப்பட்ட விஷயங்களே. உங்கள் படம் எப்படி வித்தியாசப்படும்?
அகதிகள் வாழ்க்கையென்பது தினம்தினம் வலிதான். அவர்களின் துயரவாழ்க்கையை வியாபாரமாக மாற்றுகிறதைக் கண்டு எனக்கு எழுந்த கோபம்தான் இந்தப் படம். அரசியல்வாதி ஒருவரின் மேடைப்பேச்சோ, சூடான விவாதங்களோ, எதுவாக இருந்தாலும் அதில் பத்துவார்த்தைகள் ஈழத்தைப் பற்றி இருக்கும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால்… என்றெல்லாம் பேச்சுக்கள் இருக்கும். ஆனால் அவை எதுவும் உண்மையில்லை என்பதுதான் இந்தக் கதையின் புள்ளி.

ஈழம் சம்பந்தமான என்னென்ன விஷயங்களைப் பற்றி படத்தில் பேசப்போகிறீர்கள்?
தமிழர்களின் இந்தத் தலைமுறை நிறையவே மாறிவிட்டிருக்கிறது. எங்கே தவறு நடக்கிறது ? யார் யார் தவறிழைக்கிறார்கள் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரிகிறது. ஆனால் கீழே இறங்கி வேலை செய்வதற்கும், உடன் நின்று உழைப்பதற்கும் அவர்களுக்கு நேரம் இல்லை. ‘பொழைக்கப் போன இடத்தில் அவங்களுக்கு தனிநாடு அதுஇதுன்னு ஏன் வேண்டாத வேலை?’ என்று பேசுபவர்களும் நிறைய இருக்கிறார்கள். சிங்களர்கள் ரொம்ப நல்லவர்கள் தமிழர்களும், விடுதலைப்புலிகளும்தான் மோசம்னு பேசுறவங்களையும் பார்த்திருக்கிறேன். அதனால் சில உண்மைகளை உரக்கப் பேசவேண்டும் எனத் தோன்றியது. அவற்றைப் பேசியிருக்கிறேன்.

ஈழப்போரின் சோகங்கள், வேதனைகள்தான் கதையென்றால் அதில் காதல் கதையும் இருக்கிறதே ! சரியாக வருமா ?
இயல்பான கதையோடு அதை மக்கள் விரும்பும் வண்ணம் சுவாராசியமாகவும் சொல்ல ஒரு இயல்பான காதல்கதையையும் சேர்த்து சொல்லியிருக்கிறேன் அவ்வளவுதான். ஒரு அகதிப்பெண்ணுக்கும் இங்கேயுள்ள பையனுக்கும் காதல். அதை இடம்மாற்றி வைத்திருக்கிறேன். ரூபா மஞ்சரியும், நவீன் சந்திராவும் கடற்கரையில் நிற்கும்போது கடலலையில் கால்வைக்கப் போகும் ரூபாவுக்கு முள்ளிவாய்க்கால் போரில் கடற்கரையில் பட்ட துன்பங்கள் வந்து மனதை அழுத்தும். இப்படி காதலை மெருகேற்றும் உணர்வுகளை படத்தில் சொல்லியிருக்கிறேன்.

ஈழத்தைப் பற்றி ஆயிரமாயிரம் கதைகள் சொல்லப்படமுடியும். அவற்றை யாரும் சொல்லிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருக்கின்றன இங்குள்ள அரசுகளும் அங்குள்ள அரசும். அவற்றைத் தாண்டி ஈழத்தைப் பற்றி தமிழர்களுக்கு நெற்றியில் அறைந்து நிஜம் சொல்லும் படம் இன்னும் வரவில்லை. சத்யசிவா அதற்கு முதல்படியாய் இருப்பார் என நம்புகிறோம்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.