vagina-monologues-article

எப்போதும் சென்னை வந்து இறங்கியவுடன் இரண்டு ஆங்கிலச் செய்தித்தாள்களையாவது வாங்கிவிடுவது வழக்கம். செய்திகளுக்காக அல்ல. நகரில் ஏதாவது நல்லது கெட்டது நடக்கிறதா என்று பார்க்கத்தான். கண்காட்சிகள், இசைநிகழ்ச்சிகள் கண்ணில் தட்டுப்படும். வாய்ப்பிருந்தால் ஒருநடை பார்த்துவிட முயற்சிப்பதுண்டு. இந்த முறை ஒரு நாடகத்தைப் பற்றிய சின்ன செய்தி தென்பட்டது. தலைப்பு வேறு ஆர்வத்தைத் தூண்டியது. முதல் நாள் முழுவதும்

வேலை மும்முரத்தில் நினைவில் கொள்ளமுடியவில்லை. மறுநாள் தற்செயலாக (மாஜி) நாடகக்காரரான நண்பர் சுபகுணராஜனைச்  சந்திக்க நேர்ந்தபோது நாடகம் பற்றிய நினைவு வந்தது. பிற்பகல் 3 மாலை 5, இரவு 7 என மூன்றுகாட்சிகள் என்பதால் 7 மணிக்குப் போகலாம் என முடிவு செய்தோம்.

தமிழ்நாட்டில் நவீன, பின்நவீன இத்யாதி நாடகம் என்றால்  பதட்டப்படாமல் போகலாம். ஏனென்றால்  இந்தமாதிரி நாடகங்களைப் பார்ப்பவர்கள் மொத்தமே 300 பேர்தான் தேறுவார்கள். அதிலும் 250பேர் நடிகர்கள், இயக்குநர்கள். மீதமுள்ள 50பேர் நடிகர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள். அந்த நினைப்பில் 6:30க்கு அல்லயன்ஸ் பிரான்சே அரங்குக்குப் போய்ச் சேர்ந்தோம்.  ‘நீங்கள் ஏற்கனவே புக் செய்திருக்கிறீர்களா?’ என்றபோதுதான் ஆகா இது வேறு சமாச்சாரம் என்று புரிந்தது. கொஞ்சம் ஆறுதலாக நீங்கள் வெயிட் பண்ணுங்கள் புக் செய்து வராமல் போனால் உங்களுக்குக் கிடைக்கும் என்றார் வரவேற்பில் இருந்தவர். அப்போதுதான் ஆன் லைனில் புக்செய்யவேண்டும் என்பதும் கட்டணம் 300 ரூபாய் என்பதும் தெரியவந்தது. மூன்றுநாட்கள் தினசரி 3காட்சிகள் என்பதும் இது கடைசிகாட்சி என்பதும் கூடுதல் தகவல்களாகத் தெரிய வந்தன. சில வராமல்போன நல்லவர்களின் புண்ணியத்தில் அரங்குக்குள் சென்று அமர்ந்தபோது அரங்கம் நிறைந்திருந்தது.

பார்வையாளர்களுக்குள்ளிருந்து பேசிக்கொண்டே எட்டுப் பெண்கள், இருபதிலிருந்து நாற்பதுகளுக்குள். குறிப்பாக எதையும் உணர்த்தாத அவரவர்க்குப் பிடித்த அல்லது சௌகர்யமான உடைகளில்… ஏதோ ஷாப்பிங் போனவர்கள் அரங்கத்திற்குள் நுழைந்தமாதிரி… இந்த மாதிரி எவ்வளோவோ பாத்தாச்சும்மா…என்று மனக்குரலில் பேசி முடிப்பதற்குள் அதிர்ச்சி வைத்தியத்தை ஆரம்பித்தார்கள். எந்தவிதமான சோடனைகளுமற்ற அரங்கங்த்தில் ஆங்காங்கே அமர்ந்தபின் பெண்குறிகளின் தனிமொழிகளாக…குறியே மனமாகவும் உடலாகவும் மாறும் விந்தை நிகழத்தொடங்கியது.

தன்னைவிட்டு பிற பெண்களைப் புணரும் கணவனைப் பற்றிப் பேசும் நடுத்தரவயதுப் பெண்…தன் காதலனுடனான முதல் அனுபவத்தை விவரிக்கும் ஒரு எழுபதுவயது மூதாட்டி.. அறியாவயதில் தந்தையின் நண்பரால் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டதைச் சொல்லும் பெண்… பக்கத்துவீட்டு நடுத்தரவயதுப் பெண்ணால் ஒருபால் உறவுக்குள்ளாக்கப்பட்டவள்… தன் குறியின் அழகில் மயங்கிக் கிடந்த கணவனைப் பற்றிப் பேசும் பெண்…பாலியல் வல்லுறவுக்குள்ளான கிராமத்துப் பெண்……கடைசியாக தான்  ஒரு குழந்தையைப் பிரவித்ததை விவரிக்கும் பெண்…என்பதாக வடிவமைக்கப்பட்ட நாடகம்.

ஒவ்வொரு கதைக்குமிடையில் பார்வையாளர்களிடம் நேரடியான உரையாடலாக ஒருவர் கட்டியங்காரன் பாணியில் உரையாடி நாடகத்திற்கான ஒரு அரசியல் சங்கிலியை இணைத்துச் செல்கிறார். தொடக்கத்தில் பெண்குறியைப் பற்றிய விதவிதமான படிமங்களைப் பேசிச் செல்கிறார் ஒருவர். அடுத்ததாக பெண்குறி பற்றி உலகின் பல மொழி வார்த்தைகள், பலபகுதிகளில் கேலியாக, வக்கிரமாக, சங்கேதமாக எப்படியெல்லாம் உச்சரிக்கப்படுகின்றன என்பதை இன்னொருவர் சொல்லிச் செல்கிறார். உலகம் முழுவதும் பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்படும் பெண்களின் எண்ணிக்கையைப் பட்டியலிடுகிறார் இன்னொருவர். போஸ்னியாவிலும் இன்னும்பல பகுதிகளிலும் பெண்களுக்கு இழைக்கப்படும் உடல் ரீதியான வன்முறைகள் விரிவாகப் பேசப் படுகின்றன. இன்னொருவர் புணர்தலின் போது பெண்களின் முனகல் எப்படியிருக்கும் என்பதை விவரிக்கும்போது… ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கப்பெண், ஒரு பெங்காலிப் பெண், ஒரு கிறித்தவப் பெண், ஒரு மளையாளிப்பெண் என்பதாக நடித்துக்காட்டிய போது அரங்கம் அதிர்ந்து அடங்கியது.       .

கடைசியாக ஒரு பிரசவத்தை விவரித்தலின் மூலமாக பெண்மையின் தாய்மையின் வலியை உணர்வையும் பேசிவிடுகிறது. அதற்காக முந்தைய காட்சிகளையெல்லாம் இதை நோக்கியதாக நகர்த்தி வந்ததாகவும் சொல்லமுடியாது. தாய்மையின் மகத்துவத்தைப் பேசுவதாகவும் எளிமைப் படுத்தமுடியாது. பெண்ணுறுப்பின் இன்பத்தை, வலியை, அவமதிப்பை, கொண்டாட்டத்தை பெண்களின் பார்வையில் சமரசமற்ற தொனியில் பேச முற்படுவதிலேயே இந்நாடகம் தனித்து நிற்கிறது.

மூலப்பிரதியைப் போதுமான அளவிற்கு இந்தியப் படுத்தியிருப்பது பார்வையாளர்களோடு கூடுதலான தொடர்பை உண்டாக்குகிறது. ஆங்கிலத்தில் நிகழ்த்தப்பட்ட இந்நாடகத்தை இந்திய மொழிகள் எதிலும் குறிப்பாக தமிழில் மொழிபெயர்ப்பதற்கோ நிகழ்த்துவதர்க்கோ சாத்தியம் இருப்பதாகத் தெரியவில்லை.

இந்நாடத்தின் பிரதியை அரங்கத்தில் நிகழ்த்துவாதென்பது இந்தியச் சூழலில் எளிதான கற்பனையல்ல. அந்த வகையில் பெங்களூர் ‘குரைக்கும் நாய்கள்’ குழுவினர் அசாத்தியமான அரசியல் தெளிவுடனேயே இந்நாடகத்தை நிகழ்த்திவருகிறார்கள் என்பதை அவர்களின் ஈடுபாடும் நிகழ்த்துமுறையும் உணர்த்தியது. முழுக்க தனிமொழியாகவே (monologue) நிகழ்த்தப்படும் இந்நாடகத்தில் நடிகர்களாக மிகச் சிறந்த பங்களிப்பைச் செய்தார்கள். பேசத் தயங்குகிற, பேச இயலாத எந்த ஒரு விசயத்தையும் ஒரு கலைவடிவத்தால் கையாள முடியும் என்பதற்கு இந்நாடகம் ஒரு உதாரணம்.

இந்நாடகத்தின் மூல ஆசிரியர் பற்றி இணையத்தில் தேடியபோது… ஈவா என்ஸ்லர் (Eva Enslar) எனும் அமெரிக்க பெண்ணிய நாடகாசிரியர், செயல்பாட்டாளர் 1996இல் எழுதிய இந்நாடகம் 48 மொழிகளில் பெயர்க்கப்பட்டு 140 நாடுகளில் நிகழ்த்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஓப்ரா வின்ஃபிரே, உஃபி கோல்ட்பர்க் உள்ளிட்ட பிரபலங்கள் இந்நாடகத்தில் நடித்திருப்பதாகத் தெரிகிறது. நியூயார்க்கில் பிறந்த ஈவா சிறுவயதில் தன்னுடைய 5 லிருந்து 10வயதுகாலகட்டத்தில் தந்தையால் வன்முறைக்கும் வல்லுறவுக்கும் உள்ளாக்கப்பட்டமையை தன்நூலில் வெளிப்படுத்தியிருக்கிறார். இவரின் ‘வி-டே’ (V-Day) எனும் அமைப்பு, பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான வன்முறைகளைக் களைய செயல்படுமொரு அமைப்பாகும். வி- எனும் எழுத்து Victory, Valentine மற்றும் Vagina வைக் குறித்து நிற்கிறது. 2002இல் விஜினல் மோனோலாகிஸ் திரைப்படமாகவும் வந்ததாகவும் தெரிகிறது. படம் பார்க்கக் கிடைக்கவில்லை.

பெங்களூரைச் சார்ந்த ‘குரைக்கும் நாய்கள்’ (Barking Dods ) குழுவினர் பற்றி அறிய முற்பட்டபோது, அவர்கள் 2011லிருந்து பெங்களூரை மையமாகக் கொண்டு இயங்கி வரும் குழு என்று தெரிகிறது. சினிமா, ஃபாஷன், புகைப்படம், விளம்பரம் என பலதுறைகளைச் சார்ந்தவர்களும் சேர்ந்து இயங்கும் இக்குழுவினர் 70திற்கும் மேற்பட்ட நிகழ்த்துதல்களைச் செய்திருக்கிறார்கள். தொடர்ந்த அவர்களின் செயல்பாடுகளும் எதிர்கால திட்டங்களும் நம்பிக்கையளிக்கக்கூடியவை.

தமிழ்நாட்டில் 80களில் ஒரு பாய்ச்சலாகத் தொடங்கிய நவீன நாடக அலை 90களைத் தாண்டுவதற்குள்ளாகவே ஓய்ந்து குளம் போல் தேங்கிவிட்டது. துர்கிர அவலம், ஸ்பார்டக்கஸ், ஊர்வலம், சூரியனின் முதல் கிரணத்திலிருந்து முதல் கிரணம் வரை, பல்லக்குத் தூக்கிகள் என்று தமிழில் பார்த்த நல்ல நாடகங்கள் நினைவில் வந்து போகின்றன. மதுரை, சென்னை, திருச்சி என்று நடந்த நாடகவிழாக்கள் தூரத்து நினைவுகளாக மாறிவிட்டன.  என்ன செய்ய.. கலைவறட்சிமிக்க ஒரு மாநிலத்தில் வாழநேர்கிற அவலத்தை நினைத்து நொந்துகொள்வதைத் தவிர?

–இரா.ப்ரபாகர்

மேலும் சிறப்புக்கட்டுரைகள்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.