‘ர’ – தமிழ்த்திரைப்பட விமர்சனம்

வாரத்திற்கு 6 முதல் 8 படங்கள் வரை வருவதால், அத்தனை படங்களுக்கும் விமர்சனம் எழுதுவதென்பது சாத்தியமில்லாமல் போகிறது.

படத்தின் டைட்டில் மற்றும் விமான பைலட்டுகளே தயாரித்து,இயக்கி நடித்தும் இருந்ததால், இந்த ‘ர’வும் அப்படி எழுதப்படாமல் தப்பிப்பிழைக்கப்போகும் படம் என்ற எண்ணத்துடன் தியேட்டருக்குள் நுழைந்த படம்தான். ஆனால்…?

காதல் மணம் புரிந்த அஜயும் ரென்யாவும் முதல் இரவுக்கு தயாராகிக்கொண்டிருக்க, பூஜையில் புகுந்த குடிகாரர்களாய் நண்பர்கள் பார்ட்டி கொண்டாட அவர்களது வீட்டுக்கே வருகிறார்கள். ‘சரி இன்று ஒருநாள் தானே நண்பர்களுடன் குடித்துவிட்டு வா. நான் ஓய்வெடுக்கிறேன்’ என்று படுக்கைக்குப் போகும் ரென்யா நிரந்தர ஓய்வெடுத்துவிடுகிறார். புரியாத மரணத்தின் போஸ்ட்மார்ட் ரிப்போர்ட் ஹார்ட் அட்டாக் என்று சொல்கிறது.

காதலியுடன் ஒருநாள் கூட வாழமுடியாத அவஸ்தையில் துடிக்கும் அஜயை ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி ஆட்டிப்படைக்க ஆரம்பிக்க, அது ரென்யாதான் என்று முடிவெடுத்து, அதை எதிர்கொள்ள ஒரு விஞ்ஞானியை சந்திக்கிறார்.  அஜயை சந்தித்து வழக்கம்போல் ஆவிகள், சாத்தான்கள் குறித்து குழப்பமான தகவல்கள் தரும் விஞ்ஞானியும் மறுநாள் மர்மமான முறையில் மாண்டுபோக போலீஸுக்கு அஜய் மேல் சந்தேகம் வருகிறது. ஆனால் ஆதாரங்கள் இல்லை.

இன்னும் சில தினங்கள் கழித்து அஜயின் அக்காவும் தம்பியைப் பார்க்கவந்த தின இரவில் இறந்துவிடுகிறார்.

‘ஆவியா இவ்வளவு வேலைகளும் செய்தது? என்று கேள்வி எழப்போகும் நேரத்தில் ‘அடப்பாவி’ என்று சொல்லும்படி ஒரு வில்லனைக் காட்டுகிறார்கள்.

முதல் சபாஷ் மொத்தக்குழுவினருக்கும். தொழில்முறையில் விமான ஓட்டிகளாக இருந்தாலும் தங்கள் சினிமா முயற்சியையும் சிறப்பாகவே ‘டேக் ஆஃப்’ செய்திருக்கிறார்கள்.

நாயகன் அஷ்ரஃப் முகவெட்டு முன்னப்பின்ன இருந்தாலும் கதைக்குள் பயணிக்கத்துவங்கிய பிறகு கச்சிதமாய் பொருந்திப்போகிறார். நாயகி அதிதி செங்கப்பா ஏற்கனவே உங்கள எங்கப்பா பாத்திருக்கோம்?’ படத்தில் கொஞ்சமே வந்தாலும் நெஞ்சம் நிறைகிறார்.

ஒளிப்பதிவு [ஆர்.சரவணன்], எடிட்டிங் [ப்ரேம் பூமிநாதன்] என்று மற்ற தொழில்நுட்ப சமாச்சாரங்களில் அசத்தலான டீமைக்கொண்டு வந்த இயக்குநர் பிரபு யுவராஜ் இசையமைப்பாளரை [ராஜ் ஆர்யன்] தேர்ந்தெடுப்பதில் கோட்டைவிட்டுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.

பேய்க்கதைகளை கண்மூடித்தனமாக நம்பமாட்டார்கள் என்று பயந்தோ என்னவோ கிளைமாக்ஸ்க்கு பக்கத்தில் ஒரு வில்லன் அதுவும் இன்சூரன்ஸுக்காக செய்த கொலை என்று சப்பைக்கட்டு கட்டியிருப்பது படத்துக்கு பெறும் சறுக்கல்.

ண்டு வாரங்களுக்கு முன்னால், இண்டு மாதங்களுக்கு முன்னால்  என்று இண்டு முறை சப்-டைட்டில் போடும்போது அதிலிருந்த ‘ர’னாவுக்கு மட்டும் சிவப்புமை கொடுத்ததைத் தாண்டி ‘ர’ என்ற டைட்டிலுக்கான வேறு சமாச்சாரங்கள் படத்தில் இருந்ததாக தெரியவில்லை.

இருந்தாலும் விமான ஓட்டிகளின் முதல்முயற்சி என்ற வகையில் ‘ரா ரா தமிழ்சினிமாவுக்கு விமானத்தை விட்டு இறங்கி தொடர்ந்து படங்கள் எடுக்க ‘ரா ரா’ என்று வரவேற்கலாம்.