வழக்கமாக கமல் நடிக்கும் படங்களை அவரே இயக்குவார் அல்லது பினாமியாக ஒருவரை இயக்குனராக்கிவிட்டு அவர் இயக்குவார். தூங்காவனம் படமும் அது போன்றதொரு படமாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தை அதிகரிப்பது போல கமலிடம் நீண்ட நாட்கள் அஸிஸ்டெண்ட்டாக பணிபுரிந்து வந்த ராஜேஷ் செல்வா இப்படத்தின் இயக்குனாகியிருக்கிறார். படத்தின் இறுதிக் கட்டப் பணிகளில் இருந்தவரிடம் பேசியதிலிருந்து…

உங்களின் முதல் படமான ‘தூங்காவனம்’ படம் பற்றி..
‘தூங்காவனம்’ குடும்பப் பின்னணியுள்ள ஒரு த்ரில்லர். இந்தப் படத்தில் கமல் சார் ஒரு ஸ்டார் ஹீரோ இல்லை; ஒரு சராசரி மனிதர். அவருடைய கடமைக்கும் வாழ்க்கைக்கும் இடையிலான போராட்டம்தான் கதை. போதைப் பொருள் தடுப்பு அதிகாரியாக நடிக்கிறார் கமல். பிரகாஷ்ராஜ் ஒரு போதைப் பொருள் கடத்தல்காரராக நடிக்கிறார். பிரெஞ்சுப் படமான ‘ஸ்லீப்லஸ் நைட்’ என்கிற படத்தைத் தழுவி தமிழில் திரைக்கதை எழுதியிருக்கிறார் கமல் ஸார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பின்போதே ஒருபுறம் சேர்ந்து எடுத்த காட்சிகளை எடிட்டிங்கும் செய்தோம். படப்பிடிப்பு முடிவடையும்போது, எடிட்டிங்கும் முடிந்து படம் தயாராகிவிடும். படத்தின் காட்சிகள் முழுமையாக வந்திருக்கிறதா என்று அந்தந்த நேரத்திலேயே தரம் பார்த்துக் கொள்வதற்கு இது உதவி செய்திருக்கிறது.

கமலிடம் நீங்கள் வியந்து பார்க்கும் விஷயம்..?
ஏழு வருடங்களாக அவரிடம் உதவியாளராக இருக்கிறேன். பெரிதாக ஒரு விஷயத்தை நாம் சொன்னோம் என்றால் அதில் இருக்கும் இன்னொரு விஷயத்தைச் சொல்வார் கமல் சார். வயது ஆனாலும் இன்னும் புதிய தொழில்நுட்பங்களை நோக்கி தன்னை வளர்த்துக் கொள்கிறார். தூங்காவனம் படத்தின் தயாரிப்பாளரிலிருந்து படக் குழுவினர் வரை ஐ-பாட் கருவி வைத்திருப்பார்கள். படப்பிடிப்பில் கட் என்று சொன்ன அடுத்த கணம் அவர்களுடைய கருவிகளில் எடுக்கப்பட்ட காட்சி காண்பிக்கப்படும். அந்தக் காட்சியில் திருத்தங்கள் ஏதாவது இருந்தால் உடனே அவர்கள் அதைச் சுட்டிக் காட்டுவார்கள்.
தயாரிப்பாளர் அமெரிக்காவில் இருந்தாலும், படப்பிடிப்பில் இன்று என்ந நடந்திருக்கிறது என்று தொடர்ந்து தகவல்களைத் தெரிந்துகொள்ளலாம். “என்னப்பா… இன்னும் முதல் ஷாட் எனக்கு வரவில்லை” என்று தயாரிப்பாளர் கேட்கலாம். தவிர அவரது அயராத உழைப்பு. சினிமாவுக்காகவே மெனக்கெட்டுக்கொண்டேயிருக்கும் குணம். இது போல நான் வியக்கிற விஷயங்கள் நிறைய இருக்கின்றன அவரிடம்.

கமலின் கதைகள், திரைக்கதைகள் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் ?
அவருடைய படங்களில் உலகச் சினிமாவில் இன்ஸ்பிரேஷன்கள் நிறைய உண்டு. அதே சமயம் அவருடைய கதைகள் பல ஹாலிவுட்சினிமாக்களுக்கு சவால் விடுபவவை. ‘பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்’(Planet of the Apes) என்று ஹாலிவுட் படம் பல பாகங்கள் வந்திருக்கிறது. அந்த மாதிரியான ஒரு கதையை கமல் சார் 20 வருடங்களுக்கு முன்பே எழுதிவிட்டார். அந்தக் கதையை நான்தான் அவருக்கு டிஜிட்டலாக மாற்றிக் கொடுத்தேன். அந்தக் கதையைப் படிக்கும்போது கண்ணீர் விட்டு அழுதேன். ‘
அதே போல அவரது ‘மர்மயோகி’ கதையைப் படித்துவிட்டு மூன்று நாட்கள் குளிர் ஜுரத்தில் படுத்துவிட்டேன். ஏனென்றால் உதவி இயக்குநராக அப்படத்தில் பணியாற்றுவது மிகவும் கடினம். அவ்வளவு பிரம்மாண்டமான படம் அது. ஒவ்வொரு காட்சியிலும் 2,000 முதல் 3,000 துணை நடிகர்கள் இருப்பார்கள். கமல் சார் எப்போதுமே அதிகமான உதவி இயக்குநர்கள் வைத்துக்கொள்ள மாட்டார். ‘மர்மயோகி’ பெரிய படம் என்றாலும் மொத்தமாக 6 உதவி இயக்குநர்கள்தான்.

‘தூங்காவனம்’ இயக்குநர் அனுபவம் பற்றி..
ஒரு நாள் ரொம்ப கோபமாக அலுவலகம் வந்தார். அனைவரையும் திட்டிவிட்டு மேலே உள்ள அவருடைய அறைக்குச் சென்று விட்டார். பின்பு அவர் என்னை அழைத்தபோது நமக்கு வேலை போகப்போகிறது என்று பயந்துகொண்டே சென்றேன். “நான் முடிவு பண்ணிவிட்டேன், நீதான் இந்தப் படத்தை இயக்க வேண்டும்” என்றார். ‘அப்பாடா வேலை போகவில்லை. புதிய வேலை கிடைத்திருக்கிரது’ என்று அவரிடம் காலில் விழுந்து ஆசி வாங்கிவிட்டு வந்துவிட்டேன். பின்னர் படப்பிடிப்புத் தளத்திற்குச் சென்று அவரை இயக்கும் நேரம் வரும்போது தான் அதன் யதார்த்தம் பயம் கலந்த பாரத்தை ஏற்றி வைத்தது.
படப்பிடிப்புத் தளத்தில் அவர் இயக்கும்போது ‘ஸ்டார்ட் ஆக்ஷன்ட என்று அவர் சொல்ல மாட்டார், மூன்று வருடங்களாக நான்தான் சொல்லிக்கொண்டிருந்தேன். மானிட்டரில் பார்த்துக்கொண்டிருக்கும் போது ‘கட்’ மட்டும் அவர் சொல்வார். இந்தப் படத்தில் ‘கட்’டும் நான் சொல்ல வேண்டியதிருந்தது. அவ்வளவுதான்.

‘உத்தம வில்லன்’ படம் ஏன் தோல்வியடைந்தது ?
‘உத்தம வில்லன்’ தோல்வி என்று நான் சொல்லமாட்டேன். சரியான நேரத்தில் திட்டமிட்டபடி வெளியாகாததுதான் அதன் வசூலில் ஏற்பட்ட தோல்வி. முதல் மூன்று நாட்கள் வசூல் என்பது ஒவ்வொரு படத்துக்கும் முக்கியமானது. அந்தப் படம் திட்டமிட்ட நேரத்தில் வெளியாகவில்லை. அது படத்தின் வசூலை மிகவும் பாதித்துவிட்டது.
சினிமா என்பது ஒரு கலைதான். என்றாலும் இன்றைய நிலையில், அதில் கலைப் படம், வர்த்தகரீதியான படம் என்ற பாகுபாடு மங்க ஆரம்பித்துவிட்டது. 10 லட்ச ரூபாய் முதலீட்டில் ஒரு படம் எடுத்தாலும் அந்தப் பணம் எப்படித் திரும்ப வரும் என்றுதான் பார்க்கிறார்கள். இன்றைக்கு கலைப்படமும் வர்த்தக ரீதியாக ஓடியாக வேண்டியிருக்கிறது.

Related Images: