பி.ஜே.பி ஆட்சியில் மாட்டைப் பாதுகாப்போம் என்று மனிதர்களைப் போட்டுத் தள்ளும் கலாச்சாரம் பல்கிப் பெருக மத்திய அமைச்சர்கள் முதல் பிரதமர் வரை அதற்குத் தூபம் போட கடந்த நவம்பரில் மதச்சகிப்புத் தன்மை குறித்து தன் மனைவி ‘வேறு நாடு போகலாமா’ என்று தன்னிடம் புலம்பியதை ஒரு நேர்காணலில் சொல்லி விட்டார் அமீர்கான்.

அவ்வளவுதான் ஆர்.எஸ்.எஸ் முதல் பஜ்ரங் தள் வரை அவரைப் போட்டு வாட்டி வதக்கிவிட்டார்கள். முஸ்லீமான அமீர்கான் வேறு நாட்டுக்குப் போகனும்னு நான் சொல்லவில்லை இப்படியாகுதேன்னு வருத்தப்பட்டேன் என்று என்னென்னவோ சொல்லிப் பார்த்தார். ஆனாலும் இந்துத்துவாவின் கொடிய கரங்களிலிருந்து அவர் தப்பிக்க முடியாது போலிருக்கிறது.

முதலில் மத்திய அரசின் சுற்றுலாத்துறையின் ‘வியத்தகு இந்தியா’ வின் விளம்பரத் தூதராக இருந்த அமீர்கானைத் தூக்கிவிட்டு அதற்குப் பதில் அமிதாப்பையும், ப்ரியங்கா சோப்ராவையும் போட்டுவிட்டார்கள். அடுத்ததாக தற்போது ஸ்நாப் டீல் நிறுவனம் தனது விளம்பர மாடலாக இருந்த அவரை நீக்கிவிட்டு புதிதாக வேறு ஒருவரை போடப்போவதாக அறிவித்துள்ளது.

பா.ஜ.க ஆட்சியில் இனிமேல் அவருக்கு பட வாய்ப்புகளோ வேறு டி.வி. வாய்ப்புகளோ வர வாய்ப்பேயில்லை. இனி அமீர்கான் ஓரம் கட்டப்படுவார். இதுதான் மதச்சகிப்புத் தன்மைக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் நிலைமை.

Related Images: