விசாரணை திரைப்படம் குறித்த உரையாடல் அரங்கம் மதுரை தமிழ்நாடு இறையியல் கல்லூரியில், பிப்ரவரி 19 ம் நாளன்று நடைபெற்றது.

மனித உரிமைக்கான ஆம்னெஸ்டிக் இன்டர்நேஷனல் விருதுபெற்ற மக்கள் கண்காணிப்பகத்தின் இயக்குநர் ஹென்றி டிபேன், அமெரிக்கன் கல்லூரி பேரா. பிரபாகர், நாவலாசிரியர் மு சந்திரக்குமார், விசாரணை ஒளிப்பதிவாளர் ராமலிங்கம், தமிழ்நாடு இறையியல் கல்லூரி பேரா. ஜான் ஜெயகரன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

காவல்துறையின் வன்முறை வகைமைகளையும் சட்ட மீறலையும் விரிவாக பேசிய ஹென்றி டிபேன், ‘விசாரணை’ ஒரு தொடக்கமாகவும் , தமிழ் சினிமாவின் நல்ல முயற்சியாகவும் வந்திருக்கிறது என்று பேசினார்.

பிரபாகர் பேசும்போது, விசாரணை திரைப்படம் காவல்துறையினர் மீதான அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் அதுகுறித்துப் பேசும் வாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றும் பேசினார். வாச்சாத்தி வன்முறை போன்றவற்றையும் வெற்றி மாறன் பதிவு செய்ய வேண்டும் என்றார்.

தமிழ்சினிமா சுயசார்பு நிலையடையும்போது அனைத்தையும் பதிவுசெய்யும் நல்ல படங்கள் வரும்
என்று பேசிய மு.சந்திரக்குமார், விசாரணையின் சர்வதேச வெற்றிக்கு அனைத்தையும் கடந்த வெற்றி மாறனின் துணிச்சல்தான் காரணமென பேசினார்.

அறிவுச் சமூகத்தின் அங்கீகாரம் பெற்ற விசாரணையை ஒளிப்பதிவு செய்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் எஸ்.இராமலிங்கம்.

சமூகத்தின் கொடுமைகளை பதிவுசெய்ய ஊடகங்கள் தயங்குகிறவேளையில் விசாரணை படம் ஆறுதலாக அமைகிறது என்று பேசிய ஜான் ஜெயகரன், வெற்றி மாறனை வாழ்த்துகிறோம் என்றார்.

எளிய அடித்தட்டு மக்களைக் குற்றவாளிகளாக சித்தரித்து, அவர்களை அழித்தொழிக்கும் காவல்துறையை நாயகமயப் படுத்தும் வசதிபடைத்தவர்களுக்கான சினிமாத் துறையில் வெற்றி மாறன், அடித்தட்டு மக்கள் காவல்துறையால் பலியிடப்படுவதை அம்பலப் படுத்தியிருக்கிறார். அந்த வகையில் தமிழ் சூழலில் விசாரணை மக்களுக்கான சினிமா என்றார் தமிழ் முதல்வன்.

காவல்துறையால் பாதிக்கப் பட்டோர், களப் பணியாளர்கள், கட்சிக்காரர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், ஊடகத்தினர்,மருத்துவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்ட அரங்கம் நிறைந்த நிகழ்வில் பார்வையாளர் சிலரும் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டனர்.

மக்கள் திரைப்படக் கழகத்தின் முன்னெடுப்பில் அரசரடி மனித உரிமைக் கழகம் மற்றும் தலித் விடுதலை இயக்கம் இணைந்து நடத்திய இந்நிகழ்வை வரவேற்றும் தொகுத்தும் வழங்கினார் மக்கள் திரைப்படக் கழகத்தின் முருகன். நன்றி கூறினார் தலித் விடுதலை இயக்கத்தின் இணைப் பொதுச் செயலர் கருப்பையா.

Related Images: