கடந்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி படப்பிடிப்பு துவங்கி, இந்த ஆண்டு ஜூலை 13 அன்று, அதாவது, சரியாய் 365 வது நாளன்று திரைக்கு வருகிறது அஜீத்தின் பில்லா2’.
அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட தினத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன்பிருந்தே கள்ளமார்க்கெட்டில் பில்லா2 டிக்கட்டுகள் விற்கப்பட்டதால் இப்போதைய நிலவரப்படி 18-ம் தேதிவரை அனைத்து செண்டர்களிலும் படம் ஹவுஸ்ஃபுல் ஆகிவிட்டது என்கிறார்கள்.
இன்னொருபுறம் இதுவரை இல்லாத புது தினுசாய், ‘பில்லா2’ டிக்கட் இருக்கு,வேணுமா?’ என்று பல்வேறு திசைகளிலிருந்து சகட்டுமேனிக்கு சர்வீஸ் மெசேஜ்கள் வந்தவண்ணமிருக்கின்றன.
இந்த நிலையில், இன்று காலை, எக்மோர் ராடிஸன் ஹோட்டலில் ‘பில்லா2’ படத்துக்கான அதிரடிஅவசர பிரஸ் மீட் ஒன்று நடந்தது.
அஜீத் கலந்துகொள்வார், கொள்ளமாட்டார் என்று நிருபர்கள் மத்தியில் ஒரு நீண்ட விவாதம் நடந்துகொண்டிருக்க இறுதியில் அவர் கலந்துகொள்ளாமலே பிரஸ்மீட் துவங்கியது.
தயாரிப்பாளர்கள் தரப்பில் ஜார்ஜ், சுரேஷ்பாலாஜி, இயக்குனர் சக்ரி டோலட்டி, ஒளிப்பதிவாளர் ஆர்.டி. [ராஜசேகரை டெலீட் பண்ணிட்டாங்களாம்] பட நாயகிகள் புருனா, பார்வதி மற்றும் இரு வில்லன்கள் கலந்துகொள்ள, ஏதோ ஒரு வேற்றுமொழி படக்கூட்டத்துக்கு வந்தது போலவே ஒரு ஃபீலிங்.
அதையே இயக்குனர் சக்ரியிடம் ஒரு நிருபர் கேள்வியாகவே கேட்டார், ‘’ பில்லா2’ யூனிட்ல அஜீத் மற்றும் கேமராமேன் தவிர யாருக்கும் தமிழ் தெரியாது போலருக்கே. தமிழே தெரியாத ஒரு யூனிட்டை வச்சி எப்பிடி ஒரு தமிழ்ப்படம் எடுத்தீங்க?’’
அதற்கு டைரக்டர் சக்ரி ஏதோ ஒரு பதில் சொன்னார். எனக்கு சுத்தமாக விளங்கவில்லை. ஏதாவது நல்ல அறிவாளிகள் எழுதும் வெப்சைட்டில் அதைப்படித்து புரிந்துகொள்ள முடிந்தால் எனக்கும் கொஞ்சம் சொல்லுங்கள்.
அடுத்ததாக ’தல’யாய கேள்வி ஒன்றை இன்னொரு நிருபர் எழுப்பினார்,’’ ஷாருக் கானே மும்பையிலிருந்து கிளம்பி வந்து தனது படத்தின் புரமோஷனுக்கு சென்னையில் டான்ஸ் ஆடிவிட்டுப்போகிறார். அப்படியிருக்க, பில்லா2’ படத்துக்கு அஜீத் ஏன் வரவில்லை?’’
இந்த கேள்வியை கேட்டு மேடையிலிருந்த அனைவருமே சற்றே களேபரத்துக்கு ஆளாக , இயக்குனர் சக்ரி மைக்கை வாங்கி தன் காதுகளுக்கே கூட கேக்காத மெல்லிய குரலில் ஏதேதோ சொன்னார். அவற்றில் ‘ தன் பட புரமோஷன்களுக்கு கூட போவதில்லை என்பது அவரது கொள்கை . அதில் நாங்கள் வற்புறுத்த விரும்பவில்லை’ என்பதுபோல் கொஞ்சம் புரிந்தது.