ராஜா, கவுதம் கூட்டணியின் ‘நீ தானே என் பொன் வசந்தம்’ இசைவெளியீட்டு விழாவின் ஆகச்சிறந்த அம்சம் பாரதிராஜா,பாலுமகேந்திரா மற்றும் பாலசந்தர் ஆகிய மும்மூர்த்திகள் அழைக்கப்பட்டு அவர்களிடம் ராஜாவுடனான அனுபவங்களை பேச வைத்தது. [இதில் தமிழ்சினிமாவின் தன்னிகரற்ற மேதை மகேந்திரன் எப்படி இடம் பெறாமல் போனார் என்பதை கவுதம் விரைவில் அறிவிப்பார் என நினைக்கிறேன்.]

ராஜாவுடனான நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும்படி மைக் கையில் தரப்பட்ட உடன், உணர்ச்சிக்கொந்தளிப்புக்கு ஆளானார் பாரதிராஜா.

‘’ ராஜாவை மத்தவங்க மாதிரி, இசைஞானின்னோ, அவர் இவர்னு மரியாதை குடுத்து பேசுறதோஎனக்கு சரிப்பட்டுவராது. . 40 வருடங்களுக்கும் மேலானது எங்க நட்பு. நாங்க எவ்வளவோ வாட்டி சண்டை போட்டிருக்கோம். அப்புறம் அதை மறந்து பழையபடி ஒண்ணு சேர்ந்திருவோம்.

இசையமைப்பாளர்கள் எத்தனை பேர் வேணுமுன்னாலும் வரலாம். ஆனா ராஜாவுக்கு இணை அவன் ஒருத்தன் தான். அதுவும் பின்னணி இசையில ராஜாவை அடிச்சிக்க இன்னொருத்தன் பிறந்து கூட வர முடியாது.

பாடல்கள்லயும் ஏற்கனவே இசையமைச்ச ஒரு பாடல் மாதிரி, இன்னொரு பாடல் இருக்கக்கூடாதுங்குறதுல பிடிவாதமானவன் ராஜா. இன்னைக்கி வரைக்கும் அந்த பிடிவாதத்துல நின்னு ஜெயிச்சிக்காட்டினவன் நம்ம ராஜா.

‘டிக் டிக் டிக்’ பட ரீ-ரெகார்டிங் நடந்துக்கிட்டிருக்கு. ஒரு குறிப்பிட்ட சீன்ல இன்னமாதிரி இசை வரனுமுன்னு மனசுல நினைச்சிட்டேயிருந்துட்டு, அதை ராஜாகிட்ட சொல்லாமலே சாப்பிடப்போயிட்டேன். ‘அடடா சொல்லாம வந்துட்டமேன்னு திரும்பிப்போய் பாத்தா, நான் மனசுல என்ன நினைச்சிருந்தேனோ அதைவிட பலமடங்கு பிரமாதமா அந்த சீனை வாசிச்சி வந்திருந்தான் ராஜா’ என்று மிக நீளமாக, ’முதல்மரியாதை’ காதல் ஓவியம்’ உள்ளிட்ட பல படங்களில் தன்னை திகைக்கவைத்த நண்பரின் நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட பாரதிராஜா, விழா ஏற்பாட்டினை பிரமாதப்படுத்தியிருந்த கவுதமையும் மனதார வாசித்துத்தள்ளினார்.

‘டி40 [டைரக்டர்கள் சங்க 40வது ஆண்டுவிழா ] ஃபங்சன்ல இருந்து உன்னை வாட்ச் பண்ணிக்கிட்டுருக்கேன். யூ ஆர் சம்திங் ஸ்பெஷல் கவுதம். ஹேட்ஸ் ஆஃப் டு யூ’ என்று பாரதிராஜா சொன்னபோது, கவுதம் நன்றிசொல்ல வார்த்தைகளின்றி தழுதழுத்தார்.

தள்ளாத முதுமையிலும், ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் நிகழ்ச்சிகளை ரசித்துவந்த பாலசந்தர், ராஜவுடனான அனுபவங்களை ஒரு காகிதக்கற்றில் எழுதிக்கொண்டு வந்து,வாசித்தார்.

தொடர்ந்து கவுதம் காதல் படங்களை இயக்குவது பற்றிக்குறிப்பிட்ட பாலசந்தர், ’’காதல் படங்கள் எடுப்பதற்கு 40 வயசுதான் சரியான வயசு. நானும் ‘மரோ சரித்ரா’ ஏக் தூஜே கேலியே’ போன்ற காதல் படங்களை இயக்கும்போது எனக்கும் வயது 40 ‘ என்று குறிப்பிட்டபோது, வயதான இளைஞர்கள் சிலர் தங்கள் வயது மறந்து ரசித்தார்கள்.

அவருக்குப்பிடித்த பாடலை கேட்டபோது, எனது நண்பர் பாரதிராஜாவின் ‘முதல்மரியாதை’ படத்தில் இடம்பெற்ற ‘பூங்காற்று திரும்புமா’ தான். அதையே பாடுங்கள்’ என்று சொன்னபோது பாரதிராஜா, குழந்தையாக மாறி குதூகலித்தார்.

அடுத்து பேசிய பாலுமகேந்திரா,ராஜா ரசிகர்களின் மனதில் நேற்று ஒரு புதிய ஆசனம் போட்டு அமர்ந்தார்.

‘’ எனது மூன்றாவது படத்தில் தொடங்கி, இதுவரை இளையராஜாவை விட்டு நான் வேறு எந்த இசையமைப்பாளருடனும் பணியாற்றியதில்லை. 35 வருடங்களில் இதுவரை 22 படங்களை இயக்கியிருக்கிறேன். அத்தனைக்கும் இசை இளையராஜாதான். இவர் அளவுக்கு ஆகச்சிறந்த இசையமைப்பாளரை காண்பது அரிது.

சினிமாவில் எனக்கு இளையராஜா அளவுக்கு மனதுக்கு நெருக்கமானவர்கள் வேறு யாரும் கிடையாது.

நான் திரைப்படக்கல்லூரி துவங்கியபோது, குத்துவிளக்கு ஏற்றி வைத்து ஒரு பதிகம் பாடிவிட்டு செல்லும்படி அவரை மட்டுமே அழைத்திருந்தேன். அவ்வாறே வந்து என்னை கவுரவித்துவிட்டுப்போனார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, திடீரென்று ராஜாவைப் பார்க்கவேண்டும் போல தோணவே பிரசாத் ஸ்டுடியோ சென்றேன். உள்ளே சென்று ராஜா இருக்கும் அறையின் கதவை திறந்தபோது, சரியாய் அதே கதவை உள்ளிருந்து திறந்து கொண்டு ஒன்றரை அடி தூரத்தில் தரிசனம் தந்தார் ராஜா. இதை என்னவென்று சொல்வது?

இந்தமாதிரியான அபூர்வ சந்திப்புகள், ராஜாவுடன் இவ்வளவு நீண்ட நட்பாய் பணியாற்ற நேர்ந்தது ஆகிய எல்லாமே முன்கூட்டியே எழுதி விதிக்கப்பட்ட ஒன்று என்றே எனக்குத்தோன்றுகிறது.

ராஜாவின் ரசிகர்களாகிய உங்களிடம், இதுவரை ராஜாவிடம் கூட நான் பரிமாறிக்கொள்ளாத புதிய செய்தி ஒன்றை இப்போது சொல்கிறேன். இப்போது நான் புதிதாக ஒரு படத்தை இயக்கி வருகிறேன். அதற்கும் ராஜாதான் இசையமைக்கப்போகிறார்.

இது மட்டுமின்றி, இனி நான் இயக்கவிருக்கும் அனைத்துப்படங்களுக்கும், ராஜா நீங்கள்தான் இசையமைத்துத்தரவேண்டும். தயவுசெய்து எனக்காகவும் நேரம் ஒதுக்கிவையுங்கள்’’ என்று ஒரு அற்புதமான பேச்சைப் பதிவு செய்தார் பாலுமகேந்திரா.

மேடையின் ஒரு ஓரத்தில் நின்றபடி, இவர்களது பேச்சை, ‘நீங்க சொல்ற அளவுக்கு நான் ஒண்ணும் பெரிய ஆள் இல்லைப்பா’ என்பதுபோல் அப்பாவியாய் நின்றுகொண்டிருந்தார் இசைஞானி.

[ எச்சரிக்கை: நீ.எ.பொ.வசந்தம்’ நிகழ்ச்சி நெகிழ்ச்சி, இன்னும் சில செய்திகள் தொடரும் ]

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.