படம் ரிலீஸாக இன்னும் இரு தினங்களே உள்ள நிலையில்,கமலின் ’விஸ்வரூபம்’ படம் டி.டி.எச்.சில் வெளியாவது ரத்து செய்யப்பட்டுள்ளது என்பதாக ஒரு வதந்தியும், பட ரிலீஸே தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மற்றொரு வதந்தியும் கோடம்பாக்கத்தில் குண்டக்கமண்டக்க நடமாடுகின்றன.இன்னும் சிலரோ, கமலுடன்
திரையரங்க உரிமையாளர்கள் நேற்று இரவிலிருந்து விடிய விடிய நடத்திய பேச்சில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.
விஸ்வரூபம் படத்துக்கு வட இந்தியாவில் தியேட்டர்கள் கிடைப்பதில் இன்னமும் சிக்கல் நீடிக்கிறது. அங்கு பிரச்னை இருப்பதை ஒப்புக்கொண்ட கமல், “ஒரு மிகப்பெரிய மல்டிப்ளக்ஸ் நிறுவனம் விஸ்வரூபம் படத்தை வட இந்தியாவில் ரிலீஸ் செய்வதாய் கொடுத்த வாக்கிலிருந்து பின்வாங்கியுள்ளது” என்றார். அது, 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை தன்வசம் வைத்திருக்கும் பி.வி.ஆர். சினிமாஸ் குழுமம் என்று தெரிகிறது.
ஆந்திராவில் பிரபல இயக்குனர் தாசரி நாரயண ராவ் விஸ்வரூபத்தை எடுத்து ரிலீஸ் செய்கிறார். அவரின் கட்டுப்பாட்டில் பல தியேட்டர்கள் உள்ளன. ஆனால், விஸ்வரூபம் தெலுங்கு டப்பிங் இன்னமும் முழுமையாகரெடியாகவில்லை என்கிறார்கள். அது தயாராக இன்னமும் சில நாட்கள் ஆகலாம் எனவும் ஒரு வதந்தி உலவுகிறது.
இன்னொரு பக்கம் ரிலீஸ் தேதி நெருங்க நெருங்க புதிது புதிதாகப் புறப்பட்ட எதிர்ப்புகளை கமல் விரும்பவில்லை என்றும் தெரிகிறது.
இந்த நிலையில்தான் கமலுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த சில தியேட்டர் உரிமையாளர்களை முன்னிலையில் கொண்டு, டி.டி.ஹெச் திட்டத்தை தள்ளிப்போட கமல் ஆலோசித்ததாகத்தெரிகிறது.
’விஸ்வரூபம்’ துவங்கிய காலத்திலிருந்தே படத்தையும் என்னையும் பற்றி ஏகப்பட்ட வதந்திகள். அதனால் ராஜ்கமல் காம்பவுண்டிலிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை எதையும் நம்பாதீர்கள்’ என்று பல மாதங்களுக்கு முன்னர் கமல் வெளியிட்ட அறிக்கைக்கு இன்று மீண்டும் உயிர் வந்திருக்கிறது.
ஓரிரண்டு தினங்களாக மவுனம் காத்து வரும் கமலின் அறிவிப்பை அறிய மீடியாவும் ரசிகர்களும் படத்துக்கு இணையான எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.