சுமார் 15 வருடங்களுக்கும் மேலாக வருடா வருடம் இமயமலைக்கு யாத்திரை செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார் ரஜினி.
வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்கும் ரஜினி படம் முடிந்தவுடன் இமயமலையிலுள்ள ரிஷிகேஷூக்குக் கிளம்பி விடுவார். நெருங்கிய
நண்பர்களுடன் செல்லும் ரஜினி அங்கு சென்றதும் சாதரண மனிதராக வேட்டி, சட்டை அணிந்து பக்தர்களுடன் பக்தராக சராசரி மனிதராகக் கலந்து விடுவாராம்.
அங்குள்ள பாபாஜி கோயிலுக்குச் சென்று தியானம் செய்வதும், நதிகளில் குளிப்பதும், ஸ்தலங்களுக்கு நடந்தே செல்வதும், வழியில் டீக்கடைகளில் அமர்ந்து டீக்குடிப்பதுமாய் சகஜமாய் இருப்பாராம். போனவருடம் அவருக்கு கிட்னியில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டு உடல் நலம் சரியில்லாமல் போனதால் அவர் இமயமலை செல்லவில்லை.
இந்த வருடம் கோச்சடையான் ரிலீசாகும் என்று பேச்சு அடிபடுகிறது. அதற்கு ட்ரெய்லர் ஏப்ரலில் தமிழ் புத்தாண்டு அன்று ரிலீசாகும் என்று ஐஸ்வர்யா தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. படம் ஆரம்பித்ததிலிருந்து இதுவரை சுமார் பத்து போஸ்டர்களை மட்டுமே வெளியிட்டுள்ள அம்மணி படத்தை உண்மையிலேயே எந்த நிலையில் வைத்திருக்கிறார் என்பது பாபாவுக்கும் தெரியாத ரகசியமாக இருக்கிறது. இந்த நிலையில் ரஜினி எப்போது இமயமலை செல்வார் என்பது கேள்வியாகத் தான் இருக்கிறது.
ஒரு வேளை படம் ரிலீசானவுடன் இமயமலைக்குச் செல்வாரோ ரஜினி ? அல்லது படம் எப்படியாவது ரிலீசாகிவிட வேண்டும் என்று வேண்டுதலாய் வேண்டிக்கொண்டு செல்ல வேண்டிய நிலை ரஜினிக்கு ஏற்படுமோ ? எல்லாம் அப்பாவை வைத்து பிஸினெஸ் குளிர் காயும் ஐஸ்வர்யா தேவிக்கே வெளிச்சம்.