ninaithathu-yaaro-vikraman-interview

தொன்னூறுகளில் புதுவசந்தம், பூவே உனக்காக, வானத்தைப் போல போன்ற ஹிட் படங்களைக் கொடுத்துவிட்டு பின் காணாமல் போன விக்ரமன் மீண்டும் ‘நினைத்தது யாரோ’ படத்தின் மூலம் மறுபிரவேசம் செய்கிறார்.

அதே தாடி, எளிமையான உடை, அதே பழைய அமுத்தலான சிரிப்புடன் தோன்றினார் விக்ரமன். அவரை நினைத்தது யாரோ என்பதுபற்றி அவரிடம் விவாதித்தபோது சுவராசியமாகப் பேசினார்.

‘நினைத்தது யாரோ’ எப்படிப்பட்ட படம் ? உங்கள் பழைய காதல் மசாலா ஸ்டைல்தானா ? இல்லை…

ஏன் சார் இது 2013ன்னா என்ன ? இன்னிக்கும் உறவுகள் பிரிவில் கலங்குவதில்லையா ? எங்கோ சம்பந்தமில்லாத உயிர் கொல்லப்படுவதற்காக நாம் இப்பவும் கண்ணீர் விடுறோமே ஏன் ? எல்லாம் இருக்கு. நாம் என்ன வியாழன் கிரகத்துக்கா போய் குடியிருக்கோம் ?
ஆனால் இன்னிக்கு உறவுகளும், சென்டிமென்ட்களும் கொஞ்சம் வேறு லெவலில் இருக்கின்றன தான். கனவு போல அம்மா, அப்பா, மகன் உறவுகள் என்று காட்டினால் காமெடி பீஸாகத் தெரியும் இப்போது.  இப்படத்தில் என்னுடைய  புதுமுயற்சியாக புதுமுகங்களான விஜித், நிமிஷா, சுபிக்ஷா ஆகியோரை இப்படத்தில் அறிமுகப்படுத்தியிருக்கிறேன்.

உங்களது கடைசிப் படமான மரியாதை கூட தோல்விப் படமில்லை. ஆனாலும் ஏன் இவ்வளவு இடைவெளி?
வானத்தைப் போல வெற்றிக்குப் பின் எனக்கு வந்த வாய்ப்புக்கள் எல்லாமே பெரிய நடிகர்களை மனதில் வைத்து கதை செய்யும்படி இருந்தன.
நான் கொடுக்க நினைத்த சினிமாவை கொடுக்க முடியாமலேயே இருந்தேன். தயாரிப்பாளர்கள் ரமேஷ், இமானுவேல் இருவருமே எனது நண்பர்கள். எனது மனத்தில் இருப்பதை படமாக எடுக்க முன்வந்தார்கள்.
டீன் ஏஜ் நட்பு, காதல் கதைதான் இது. இந்தத் தலைமுறையினர் காதலை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதை இப்படம் புரியவைக்கும். ஆனால் வழக்கமான என் பாணியில் இல்லாமல் வித்தியாசமாக நிஜத்தை நிஜமாகவே சொல்லப் போகிறேன்.

புது வசந்தம், வானத்தைப் போல, பூவே உனக்காக போன்ற படங்கள் நூறு நாட்களைத் தாண்டி ஓடிய காலம் போலெல்லாம் இனிமேல் வருமா ?
கடினம் தான். அப்போது குறைந்த பட்ஜெட்டில் மெகா ஹிட்கள் கொடுத்திருக்கிறேன். இப்போதோ எல்லா கணக்குகளும் மாறிவிட்டன. அன்று 10 தியேட்டர்களில் நூறுநாட்கள் ஓட்டினார்கள். இன்றோ நூறு தியேட்டர்களில் பத்து நாட்கள் ஓட்டிவிடுகிறார்கள். இன்று ஒரு படம் வரவேண்டுமென்றால் ப்ரோமோஷன் வேண்டும். இல்லாவிட்டால் படம் வந்தது கூட யாருக்கும் தெரியாமல் போய்விடும். அதே போல கதையும் வேண்டும். அது இல்லாவிட்டால் மக்களைப் போய்ச் சேராது. திருட்டு வி.சி.டிக்கள் இணையத்தில் வெளிப்படையாக இருப்பதை யார் தட்டிக் கேட்பது ?

உங்கள் கடந்த கால சாதனைகள்.. மற்றும் இனி செய்ய இருப்பவை பற்றி..

நான் எதுவுமே சாதித்துவிடவில்லை என்றுதான் தோன்றுகிறது. சினிமாவுக்காக சில சமரசங்கள் செய்து வந்திருக்கிறேன். இன்றளவும் மகேந்திரனின் உதிரிப்பூக்கள் படம் பார்த்தால் பரவசம் வருகிறது. அதே போன்ற உணர்வை நானும் ஏற்படுத்திவிட விரும்புகிறேன். வானத்தைப் போல அப்படி வந்திருக்கவேண்டிய படம் தான். அதில் விஜயகாந்த் இடத்தில் ஜனகராஜ் நடித்திருக்க வேண்டும்.  விஜயகாந்த்தும் நடித்திருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை. தமிழர்களின் வரலாற்றை முன்வைத்து ஒரு கதை வைத்திருக்கிறேன். அது என் கனவுப் படம் என்று சொல்லலாம். அதை எடுக்க நிறைய அனுபவம் தேவைப்படும். பணமும் கூட.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.