sukumari-namma-gramam

நம் நாட்டில் பல கிராமங்கள் ஜாதீய வன் கொடுமைகளையும், பெண் கொடுமைகளையும் சந்தித்துள்ளன. இன்றும் அதன் சுவடுகள், தழும்புகளைத் தாங்கிக் கொண்டு மௌன சாட்சிகளாக நிற்கின்றன கிராமங்கள். அப்படி சாட்சியாக நிற்கும் ஒரு கிராமத்தில் நடந்த கதையின் திரைக்காட்சி வடிவம்தான் ‘நம்ம கிராமம்’படம் .இதுவரை படங்களில் ஜாதி, பெண்ணடிமைத்தனம் போன்றவை வணிகப் பார்வை கெட்டு விடாதபடி மேம்போக் காகவே சொல்லப்பட்டு வந்துள்ளன.

ஜாதிக் கொடுமையின் அடக்குமுறையும் பெண்ணினத்தின் ஒடுக்குமுறையும் இதுவரை சொல்லாத அளவுக்கு ரத்தமும் சதையுமாக சொல்லப்பட்டு இருக்கும் படம் ‘நம்ம கிராமம்.’ இப்படத்தில் நடித்த நடிகைக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ‘நம்ம கிராமம்’ படத்தை இயக்கியிருப்பவர் மோகன் சர்மா. இவர் புனா திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். தமிழ், மலையாளம், தெலுங்கு கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் 170 படங்களில் நடித்தவர்; 17 படங்களைத் தயாரித்தவர்;கதை, திரைக்கதையாசிரியர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தயாரிப்பிலும் நடிப்பிலும் தொடர்ச்சியாக இயங்கி வந்த இவருக்கு தான் படம் இயக்கினால் சமூகச் சிந்தனையுடன இயக்கவேண்டும் என்ற தீர்மானம் இருந்தது. அதன்படியே தன் மனத்தின் ஆழத்தில் புதைந்து கிடந்த உண்மைச் சம்பவத்தை எழுதி இயக்கியுள்ளார்.இப்படத்துக்கு 2012-ன் சிறந்த குணச்சித்திர நடிகையாக சுகுமாரிக்கும் சிறந்த உடைகள் அமைப்புக்காக இந்திரன் ஜெயனுக்கும் என இரண்டு தேசியவிருதுகள் கிடைத்தது.

படம் பற்றி மோகன் சர்மா கூறுகையில் “இது முழுக்க முழுக்க உண்மைச் சம்பவம். இது சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த கதை. நம் நாட்டில் ஜாதிக் கொடுமை எந்த அளவுக்கு கொழுந்து விட்டு எரிந்தது என்பதற்கும் சமுதாயத்தில் பாதியளவு உள்ள பெண்களுக்கு எவ்வளவு கொடூரங்கள் நிகழ்த்தப்பட்டன என்பதற்கும் ஏராளமான சான்றுகள் உண்டு. என்னைப் பாதித்த ஒரு கிராமம் பற்றியதுதான் இப்படம். ஒரு அக்கிரகாரத்தில் நடப்பவைதான் இந்தக் கதை. “என்கிறார்.

படத்தின் நாயகன் நிஷாந்த் நாயகி சம்ருதா இருவரும் புதுமுகங்கள். ஒய்.ஜி. மகேந்திரன், பாத்திமாபாபு, நளினி ஆகியோருடன் மோகன் சர்மாவும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஆவணங்களின்படி இது 100 ஆண்டுக்கு முன் நடந்த கதை என்றாலும் இப்படத்தின் கதை 1935 ல் தொடங்கி 1947 ல் முடியும்படி அமைக்கப்பட்டுள்ளது. அதற்காக அக்காலச் சூழல்படி கதை, நிகழ்விடம், காட்சிகள் அமைக்க மிகவும் சிரமப்பட்டு ஆய்வு செய்து விவரம் சேகரித்துள்ளனர். இடம், மனிதர்கள், உடைகள், சாதனங்கள் பற்றி தீவிர கவனம் செலுத்தி எடுத்துள்ளனர். கோவை அருகில் தத்தமங்கலம் என்கிற ஊரில்தான் படத்தின் பெரும்பகுதி  எடுக்கப்பட்டுள்ளது.காட்சிப் பின்புலத்தை உருவாக்க கலை இயக்குநர் பாவாவும் ஏற்ற ஒளியமைப்பு செய்ய ஒளிப்பதிவாளர் மது அம்பாட்டும் நிறையவே உழைத்துள்ளனர்.இசை- பி.என். சுந்தரம். படத்தொகுப்பு- பி.லெனின். இயக்கம்- மோகன் சர்மா.தயாரிப்பு-குணசித்ரா மூவீஸ்.

ஜனவரி 3-ல் ஒவ்வொரு ஊரிலும் பேசப்பட வருகிறது ‘நம்ம கிராமம்’.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.