’முதல் மூன்று படங்கள் தொடர்ந்து ஹிட் அடித்தபோது, விஜய் சேதுபதிக்கு நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கிற நாலெட்ஜ் இருக்கிறது என்று டைரக்டர்களின் கிரடிட்டுகளையும் அவருக்கே சேர்த்து தாரைவார்த்து கொண்டாடிய திரை உலகம் இது.

அடுத்து தொடர்ந்து ஒரு மூன்று படங்கள் ஃப்ளாப் ஆனபோது, அவரது கதை செலக்ட் பண்ணும் நாலெட்ஜ் கேள்விக்குறியானது.

அந்த தோல்விகளின் தொடர்ச்சியாக வந்திருக்கும், இந்த ‘வன்மம்’ விஜய்சேதுபதியின் கதை தேர்வு செய்யும் நாலெட்ஜை கதை கந்தலாக்கியிருக்கிறது.

டபுள் ஹீரோ சப்ஜெக்ட். ஹீரொக்கள் இருவரும் நண்பர்கள் என்று வருகிற கதையில் என்னவெல்லாம் இருக்கவேண்டுமோ அந்த அந்தனையும் இந்த வன்மத்தில் சற்றும் மாறாமல் அப்படியே இருக்கிறது.

விஜய் சேதுபதியும் ,கிரெஸ்ணாவும் [நியூமராலாஜியாம்…? உங்க நியூமராலாஜியில கிருஸ்ணாயிலை ஊத்திக்கொளுத்த] உயிர் நண்பர்கள். ஒரே கலயத்தில் கள்ளு குடித்து நட்பைப்பற்றி ஆடிப்பாடிக்கொண்டாடுகிறார்கள். கிரெஸ்ணா அந்த ஊர்ப்பெரியவரின் தங்கையைக் காதலிக்கிறார். தகவல் அறிந்த அண்ணன் கிரெஸ்ணாவைத் தட்டிக்கேட்க வருகையில் நண்பனுக்காக விஜய்சேதுபதி வாலண்டியராய் நுழைய, அப்போது நடக்கும் தள்ளுமுள்ளுவில் பெரியவர் விஜய் சேதுபதியின் கையால் செத்துவிடுகிறார்.

அதற்கு சாட்சியாய் இருக்கும் பெரியவரின் அடியாட்கள் இருவர் மற்றும் உள்ளூர் போலீஸை மிரட்டி தகவலை மறைக்கிறார் விஜய் சேதுபதி. அடுத்த சில காட்சிகளில் வி.சேதுபதிக்கும் க்ரெஸ்ணாவுக்கும் நடுவில் சமயத்தில் சண்டை வந்து இடைவேளை விடுகிறார்கள்.

இடைவேளைக்குப்பிறகு அந்த சண்டை வலுத்து, க்ளைமேக்ஸில் நண்பர்கள் எப்படி இணைந்தார்கள் என்று, இதற்கு முன் பார்த்த 1376 நட்புப்படங்களின் காட்சிகளை அப்படியே மீண்டும்  நகலெடுத்து தந்திருக்கிறார்கள்.

டபுள் ஹீரோ சப்ஜெக்டில், அதுவும் கிரெஸ்ணாமாதிரி எக்ஸ்பிரசன் கிலோ என்ன விலை என்று கேட்கும் ஒரு நடிகருடன், நடிக்க ஒப்புக்கொண்டதைத்தவிர விஜய் சேதுபதியை பாராட்டுவதற்கு விஷேசமாய் ஒன்றுமில்லை. [தொப்பையைக்குறைங்க பாஸ்].

கிரெஸ்ணாவுக்கு ஜோடியாய் வரும் சுனைனாவுக்கு, உள்ளூர் கண்மாயில் குளிக்கிற ஒரு காட்சி மற்றும் ஒரு டூயட் தவிர்த்து சோலி  ஒன்றும் இல்லை. புரடக்‌ஷன்ஸன்ல ஐஸ் கிரீமும், ஜூஸும் அதிகமா கேட்டுவாங்கி உடம்பைக்கொஞ்சம் தேத்துடா செல்லம்.

பாடல்கள் அத்தனையும் சொதப்பியதோடல்லாமல் பின்னணி இசையில் படத்துக்கு எமனாகவே மாறியிருக்கிறார் எஸ்.தமன்.

இயக்குநர் ஜெயகிருஷ்ணா ரொம்ப அனுபவமுள்ள பழைய ஆள் என்று சொன்னார்கள். அதற்காக இவ்வளவு பழசாகவா படம் எடுப்பது?

‘வன்மம்’ பலவாட்டி பார்த்துச் சலித்த தொன்மம்.

Related Images: