நமது இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் லலித் மோடி என்கிற வறிய ஏழையின் மீதான மனிதாபிமான நேயத்திற்காக இந்திய நாட்டின் வெளியுறவுக் கொள்கையை மீறிய கதை.
மொத்த எதிர்க்கட்சி கூட்டமே வெளியை எம்.பி.க்களை வெளியேற்றியதால் (வேண்டுமென்றே ) வெட்டி தர்ணா செய்துகொண்டிருக்க, கேட்க ஆளேயில்லாத பார்லிமெண்டில் சுஷ்மா ஸ்வராஜ் லலித்மோடி விவகாரத்தில் தனது நிலைய விளக்கி முழங்கினார்.
அவர் கூறியதாவது “லலித்மோடி விவகாரத்தில் என்மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமில்லாதவை. உள்நோக்கம் கொண்டவை. லலித்மோடிக்கு உதவும்படி நான் பிரிட்டன் அரசை கேட்கவில்லை. நான் செய்த உதவியெல்லாம் லலித்மோடியின் மனைவிக்கு மட்டுமே. கேன்ஸரால் 17 வருடங்களாக அவதிப்படும் அவர் போர்ச்சுகல் செல்வதற்கு உடன் செல்ல அவர் கணவர் லலித்மோடிக்கு அனுமதி தரும்படி கேட்டார். அவருக்கு அனுமதி தரலாமா ? அதனால் இருநாடுகளின் உறவுகள் பாதிக்கப்படுமா? என்று பிரித்தானிய அரசு கேட்டது. அதற்குத் தான் நான் பதிலளித்தேன்”.
மேற்கூறிய அவருடைய பார்லிமண்ட் பேச்சில் அவர் சோற்றில் மறைத்த முழுப்பூசணிக்காய்களைப் பற்றி பார்ப்போம்.
பிரிட்டன் தூதரகம் ‘இந்தியா பாகிஸ்தான் உறவுகள் பாதிக்குமா ?’ என்று சுஷ்மாவிடம் கேட்கவேண்டிய அவசியம் என்ன? இந்தியாவால் தேடப்படும் ஒரு குற்றவாளிக்கு பிரிட்டன் அரசு உதவி செய்தால் அது இரு நாட்டு உறவுகளைப் பாதிக்கும். உதாரணமாக 2008 மும்பை தாக்குதல் வழக்கில் இந்தியாவால் தேடப்படும் ரஹ்மான் லக்வியை பாகிஸ்தான் விடுதலை செய்தது. அதனால் இரு நாடுகளுக்குமான உறவில் மேலும் விரிசல் விழுந்தது. அப்படி எதுவும் ல.மோடி விஷயத்தில் ஆகிவிடக்கூடாதே என்று பிரிட்டன் அரசு சுஷ்மாவைக் கேட்கிறது. கேள்வி எப்படிக் கேட்கப்பட்டது ? நேரிலா ? போனிலா ? ஹோட்டலிலா ? இல்லை இந்திய வெளியுறவுத்துறை அலுவலகம் மூலமாகவா ? அது பற்றி சுஷ்மா ஸ்வராஜ் எதுவும் சொல்லவேயில்லை. பிரிட்டன் அரசு அதன் வெளியுறவுத்துறை மூலமாக அல்லாமல் சும்மா ஒரு இரணடு ரூபாய் செலவில் போன் செய்து சுஷ்மாவிடம் அனுமதி கேட்டிருப்பார்களா ?
முன்னதாக ட்விட்டரில் சுஷ்மா ஸ்வராஜ் இது சம்பந்தமாக கொடுத்த ட்வீட்டுகளின் மூலம் நடந்த விஷயத்தை இவ்வாறு வகைப்படுத்தலாம். ஜூலை 2014 வாக்கில் லலித்மோடி சுஷ்மாவிடம் ‘தனது மனைவிக்கு கேன்ஸர் ஆப்பரேஷன் ஆகஸ்ட் 4 ஆம் தேதி போர்ச்சுகல் நாட்டில் நடைபெற இருக்கிறது. ஆபரேஷன் நடக்க ஒப்புதல் ஆவணத்தில் கையெழுத்திட தான் செல்லவேண்டும். அதற்காக இங்கிலாந்து அரசிடம் விசா கேட்டிருப்பதாகவும் ஆனால் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் குறிப்புகளின்படி அவருக்கு அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளனர் ‘ என்று கேட்டிருக்கிறார். உடனே சுஷ்மா ஸ்வராஜ் இங்கிலாந்து தூதரகத்தைத் தொடர்புகொண்டு லலித்மோடிக்கு விசா கொடுப்பதை பரிசீலிக்கும்படியும், அவர்கள் அவருக்கு விசா கொடுத்தால் அது இந்திய-இங்கிலாந்து உறவுகளைப் பாதிக்காது என்றும் தெளிவுபடுத்தியுள்ளார்.
சுஷ்மா லலித்மோடிக்கு உதவியதை அவரது அப்பாவி மனைவிக்கு உதவியதாகக் கூறுவதை நாம் நம்பக் கடவோமாக. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் இங்கிலாந்து தூதரகத்துடன் போனிலா, நேரிலா, ஈமெயிலிலா அல்லது புறாவிடு தூதுமூலமாகவா பேசினார் என்பதை நாம் கேட்காமலிருப்போமாக.