தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளன பொதுக்குழுக் கூட்டம் நாமக்கல்லில் நடந்தது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளைப் பற்றி அகில இந்திய மோட்டார் டிரான்போர்ட் காங்கிரஸ் அமைப்பின் டோல் கமிட்டி தலைவர் ஜி.ஆர்.சண்முகப்பா, தமிழ்நாடு லாரி உரிமை யாளர்கள் சம்மேளன தலைவர் கே.நல்லதம்பி ஆகியோர் கூறியதாவது:
கடந்த 2006-ம் ஆண்டு நாடாளு மன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டம் மூலம், நாடு முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகள் அமைப்பதற்க்கு ஆன செலவான ரூ.1.73 லட்சம் கோடி பணத்தை வசூல் செய்ய 373 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இதுவரை ரூ.72,300 கோடி ரூபாய் சுங்க கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.
373 சுங்கச்சாவடிகள் மூலம் ஆண்டுக்கு ரூ.14,170 கோடி வருவாய் மத்திய அரசுக்கு கிடைக்கிறது. இச்சூழலில் டீசல் மீதான செஸ் வரி லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.6 ஆக உயர்த் தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.55 ஆயிரம் கோடி மத்திய அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. பெரும்பாலான பணம் கிடைத்துவிட்ட நிலையில், இதன் பிறகும் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை கைவிட மத்திய அரசு மறுக்கிறது. இது தனியார் நிறுவனங்களுக்கு பணம் கிடைக்கவே வழி செய்யும்.
மத்திய அரசு சுங்கக் கட்டணத்தை வசூலிப்பதில் ஆட்சேபம் இல்லை. இது டீசல் மீதான செஸ் வரி, சாலை வரி போன்று ஆண்டுக்கு ஒரு முறை செலுத்தும் வகையில் இருக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். லாரி தொழில் செய்பவர்களுக்கு 2 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
ஏற்கெனவே லாரி தொழில் நெருக்கடியில் உள்ள நிலையில், இது கூடுதல் சுமையாகும். எனவே டிடிஎஸ் பிடித்தம் செய்வதை ரத்து செய்ய வேண்டும். இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.
மத்திய அரசு சுங்கச் சாவடிகளை மூடவில்லை என்றால், வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் நாடு முழுவதும் 92 லட்சம் லாரிகள் ஓடாது. 1.62 லட்சம் சரக்கு புக்கிங் அலுவலகங்கள் மூடப்படும்’ என லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்தனர்.