இன்று மனிதர்கள் தங்களது அன்றாட நடவடிக்கைகளை செல்பி எடுத்து அடுத்தவர்களுக்கு அனுப்பி துன்புறுத்துவதை தங்களது முக்கிய கடமையாகக்கொண்டுள்ளார்கள். காலையில் எழுந்து பல் துலக்குவதில் துவங்கி தூங்கப்போகும் வரை இந்த செல்பி அட்ராசிட்டி தொடர்கிறது. இதையே மையமாக வைத்து ‘சண்டிக்குதிரை’ என்றொரு படம் தயாராகி வருகிறது.
இதில் சின்னத்திரை நட்சத்திரம் ராஜ்கமல் கதாநாயகனாக நடிக்க, மானஸா அவருடன் செல்பி எடுக்கிறார். இயக்குநர் அன்புமதியும் சின்னத்திரை மூலம் பிரபலமான அன்புமணியே.
சண்டிக்குதிரை குறித்து அவர் கூறுகையில், “விஞ்ஞான வளர்ச்சி என்பது நன்மையும், தீமையும் கலந்தே இருக்கிறது. இன்று மொபைல் போன் இல்லாத ஆளே இல்லை. தகவல் தொடர்புக்காக வடிவமைக்கப்பட்ட மொபைல் போன் இன்று வேறு பரிமாணத்திற்கு மாறி விட்டது. அதன் இன்னொரு பக்கத்தை இதில் பதிவு செய்திருக்கிறோம். செல்பி என்கிற வியாதியின் கருப்புப் பக்கங்களை மிக நுணுக்கமான திரைக்கதை மூலம் உணர்த்தி உள்ளோம். புதுக்கோட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். காமெடி கலந்த திகில் படமாக சண்டிக்குதிரை உருவாகி உள்ளது,” என்றார்.