நடிகர் பரத் நடித்துள்ள என்று துவங்கினல் எந்த பரத் ? என்று கேட்கிற அளவுக்கு தமிழ் சினிமா சுத்தமாக மறந்துபோகிற அளவுக்கு குப்பைப் படங்களில் மட்டுமே நடித்து வந்த பரத்துக்கு மறு ஜென்மம் போல் காளிதாஸ் என்கிற க்ரைம் த்ரில்லர் படத்தைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஸ்ரீசெந்தில்.

சென்னை ஆதம்பாக்கம் பகுதியில் மூன்று பெண்கள் அடுத்தடுத்து மாடியிலிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொள்கின்றனர்.ஒரு பெண் மர்மமான முறையில் கத்தியால் குத்திக் கொலை செய்யப்படுகிறார். அக்கொலைகள் பற்றிய எந்த குளூவும் கிடைக்காத நிலையில் இவை எதனால் நடக்கிறது? என்பதைக் காவல் அதிகாரிகளான பரத்தும் சுரேஷ்மேனனும் இணைந்து புலனாய்வு செய்வதுதான் கதை.

படத்தில் நாயகன் பரத்தின் பெயர் காளிதாஸ். எனவே அந்தப்பெயரை தலைப்பாக வைத்திருக்கிறார்கள்.பரத், காவல்துறை அதிகாரி வேடத்துக்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். அதிகார மிடுக்கும் வீட்டில் அமைதி என்று நடிப்பில் வேறுபாடு காட்டியிருக்கிறார்.இனியாவது நல்ல கதை மட்டுமே நம்மைக் காப்பாற்றும் என்று அவர் புரிந்துகொள்வார் என்று நம்புவோம்.

நோய்நாடி நோய் முதல் நாடி என்பதற்கேற்ப தனக்கு முன்னால் கத்தியைக் காட்டி மிரட்டுபவரை, என்னிடமே கத்தியைக் காட்டுகிறாயா? என்று அடித்து உதைக்காமல் அவர் கத்தியைக் காட்டுவதற்கான காரணத்தை ஆய்ந்து அச்சிக்கலைக் கையாள்கிறார்.காவல்துறை அதிகாரிகள் இப்படி இருந்தால் நாடு எவ்வளவு நன்றாக இருக்கும் என ஏங்க வைத்துவிட்டார் இயக்குநர் ஸ்ரீசெந்தில்.

நாயகி ஆன்ஷீத்தல். நல்வரவு. கணவனைக் காதலோடு பார்ப்பது, பிடிக்காத நேரத்தில் சண்டை போடுவது ஆகிய காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார். இறுதிக்காட்சியில் அவர் கதறி அழும்போது நம்மையும் கலங்கவைக்கிறார்.அனுபவமிக்க காவல் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் சுரேஷ்மேனன் சரியாக இருக்கிறார். ஒரு சிக்கலை எப்படி அணுகுவது என்கிற அனுபவப்பாடத்தைக் கற்றுக் கொடுக்கிறார்.

சில காட்சிகளில் மட்டும் வருகிற பிரியதர்ஷினி அழகு அவருடைய பாத்திரப்படைப்பும் சிறப்பு.ஆதவ்கண்ணதாசன் பாத்திரம் ரசனையாக இருக்கிறது. அவரும் நன்றாக நடித்திருக்கிறார், அம்முராமச்சந்திரன் உள்ளிட்ட பெண்களும் கவனிக்க வைக்கிறார்கள்.

விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை இரைச்சல்களின் உச்சம்.சுரேஷ்பாலாவின் ஒளிப்பதிவு மிக நன்று. கதை நடக்கும் இடத்தைப் பற்றிய விவரங்களைக் காட்சிகளில் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

இயக்குநர் ஸ்ரீசெந்திலுக்கு இது முதல்படம். ஆனால் தேர்ந்த இயக்குநர் போல் படமெடுத்திருக்கிறார். குடும்பச் சூழல்களை உளவியல் அக்கறையோடு அணுகியிருக்கிறார். நாயகி ஆன்ஷீத்தல் வேடத்தை அவர் கையாண்டவிதம் மிகவும் சிறப்பு.

இரண்டு மணி நேரம் ஓடுகிற ஒரு படத்தில் அடுத்து வரும் எந்த ஒரு காட்சியையும், குறிப்பாக கொலைக் குற்றவாளி யார் என்பதை துளியும் யூகிக்க முடியாத அளவில் ஒரு படம் இயக்கியதில் முழு வெற்றி கண்டிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீசெந்தில்.நல்வரவு.

Related Images: