படம் ஆரம்பிக்கும் போது இயக்குநரின் சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த கதை இது என்று பேக்ரவுண்டில் நாயகன் சொல்கிறார். சோகமாகத்தான் இருக்கிறது. வழி சொல்லப்போய் வாழ்க்கையில் ஒரு சுகமான சுமையை சுமக்க வேண்டிய கட்டாயத்தை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரவீந்தர்.

நாயகன் ஒரு உதவி இயக்குனர். சினிமா இயக்குனராக ஆகிவிட்டுத்தான் கல்யாணம் செய்வேன் என்று பிடிவாதமாய் இருக்கிறார். அவர் வாழ்வில் என்னென்னவோ நடந்து அவர் இயக்குனராக ஆனாரா ? ஜெயித்தாரா ? என்னெவெல்லாம் கஷ்டங்கள் பட்டார் என்பதை விலாவரியாக விளக்கும் படம்.

ஹீரோ சந்தோஷ் பிரதாப் ஒரு உதவி இயக்குனராக வருகிறார். தன்னுடைய கைக்குழந்தைக்கு ஒரு வேளை பால் வாங்க படுகிற அவஸ்தை மனதை பிசைகிறது. 1996 -இல் நடந்த கதை என்பதால் சில காட்சிகள் பழமையாக இருக்கிறது. அந்த காலத்து கதை என்பதால் காட்சி படுத்தலும் பழைய ஸ்டைல்.! உள்ளே முதலிரவு. வெளியில் கஜுராஹோ காமத்துச் சிலைகளை போல நடன முத்திரைகளுடன் ஒரு மழை டான்ஸ்…. நாயகன் நடிப்பில் குறை சொல்ல ஏதுமில்லை. வேறு படங்களில் இன்னும் பிரமாதப்படுத்துவாரா பார்ப்போம்.

1996 ஆம் ஆண்டு நிகழ்ந்த கதை என்பதால் முடிந்தவரை செட் பிராப்பர்ட்டிஸ்களில் கவனம் செலுத்தியிருக்கிறார்கள் , நாயகனின் வீட்டில் இயக்குநர் விக்ரமனின் படம் ,அந்தக்கால பொம்மை சினிமா இதழ்களில் வெளியான சிவாஜி கணேசனின் அட்டைப்படம்.இப்படி…சில பல அடையாளங்கள். படத்தில் ஊடுபாவாக உதவி இயக்குநர்களின் பரிதாபநிலை ஆங்காங்கே. ஆனால் அவை காமடிக்காக பயன்பட்டிருக்கிறது. இவ்வளவு வறுமையிலா வாடுகிறார்கள் உதவி இயக்குநர்கள் என்கிற ஐயம் வெளியுலகத்தினருக்கு வரும். ஆனால் அதுதான் உண்மை.

சுரண்டல் அதிகம் உள்ள துறைகளில் சினிமாவும் ஒன்று. சினிமாத்துறையில் இருப்பவர்களின் உடல் உழைப்புக்காகவும், பாலியல் ரீதியாகவும் சுரண்டப்படுகிறது என்பது சாதாரணமான உண்மை.

ஹீரோயின் சாந்தினி அழகாய், பாந்தமாய் நடித்திருக்கிறார். இன்னும் அழுத்தமான வேடங்கள் கிடைத்தால் செய்யக்கூடியவர் என்று தோன்றுகிறது. ஹீரோயினுக்கு கொளுந்தியா கேரக்டராக வரும் பெண்மணி அப்படியே இன்றைய டி.வி. சீரியல்களில் வரும் வில்லி கேரக்டர்கள் போலவே இருக்கிறார். டி.வி. சீரியல் டயலாக்குகளாகவே பேசவும் செய்கிறார். டி.வியிலிருந்து இறக்குமதியானவரா ? தெரியவில்லை. ஆனால் டி.வி.த்தனமான வில்லி நடிப்பெல்லாம் ஓவரோ ஓவர்.

மலையாளத்தில் புகழ் பெற்ற நடிகர் இன்னசன்ட் இப்படத்தில் ஒரு ப்ளூ பிலிம் புரொட்யூசராக நடித்திருக்கிறார். கேரளத்தின் பெரிய ஆள். அரசியல்வாதியும் கூட. அசால்ட்டாக இம்மாதிரியான கேரக்டரில் நடிக்க சம்மதித்திருக்கிறார். எவர்கிரீன் ஆர்ட்டிஸ்ட் நாகேஷ் மாமா கேரக்டரில் அந்த காலத்தில் நடித்ததில்லையா?

கேமராமேன் ஆர்.எஸ்.செல்வா .ஆர்ட் டைரக்டர் ஜெய்காந்த் இருவரும் கூடியவரை அந்த காலத்து சூழலை காட்டியிருக்கிறார்கள். இசை அமைப்பாளர் ஹித்தேஷ் முருகவேல் .வஞ்சகம் இல்லாமல் போட்ட மெட்டு வரிகளை மழுங்கடிக்கவில்லை என்பது ஆறுதல்.

இயக்குனருக்கு இது இரண்டாவது படம். படம் ரெடியாகி ஒரு வருடமாகவாவது ஆகியிருக்கும். இயக்குனர் விக்கிரமன், பாக்யராஜ் போல சென்ட்டிமென்ட்டுகளை வைத்தே கதையை நகரத்துகிறார். க்ளைமேக்ஸ், வில்லன்கள் இல்லாததால் படத்தின் இறுதிக் கட்டங்களில் படத்தின் க்ளைமாக்ஸாக எதை வைப்பது என்று கொஞ்சம் குழம்பியிருக்கிறார்.. கதை ஒரிஜினலாய் இருப்பதால் தப்பித்துவிட்டார்.

உங்களால் அந்தக் காலத்து ‘வானத்தைப் போல’ போன்ற விக்கிரமனின் சிம்ப்பிளான லாஜிக்குகள் கொண்ட, பெரிய ட்விஸ்ட்டுகள் இல்லாத, வில்லன்கள் அற்ற எளிமையான திரைக்கதை படங்களை ரசிக்க முடியும் என்றால் இப்படம் உங்களுக்கு மிகமிக பிடிக்கும். இல்லாவிட்டால் கொஞ்சம் இடிக்கும். மற்றபடி விஷமான விஷயங்கள் இல்லாத எளிமையான படம்.

Related Images: