‘குற்றம் கடிதல்,’மெட்ராஸ்’,’வட சென்னை’உள்ளிட்ட பல படங்களில் தேர்ந்த நடிகராக தன்னை வெளிப்படுத்தி வந்த பாவெல் நவகீதன் இயக்கத்தில் வந்திருக்கும் முதல் படம் ‘வி 1’.எதிர்பாரா வகையில் ஒரு கொலை நடக்கிறது. அந்தக் கொலையைச் செய்தது யார்? என்கிற விசாரணையும் அதன் இறுதியில் கிடைக்கும் அதிர்ச்சி தரும் விடையும்தான் இந்தப்படம்.

நாயகன் அக்னிக்கு இருட்டைக் கண்டால் பயம். அதனால் தான் வேலை பார்த்த போலீஸ் அதிகாரி வேலையை உதறிவிட்டு தடவியல் துறையில் தன் பணியை தொடர்கிறார்.அவரின் திறமை காவல்துறைக்கு ஒரு கொலையில் துப்புத் துலக்க உதவி தேவைப்படடுகிறது.ஆனால் அதை மறுக்கும் அக்னி கொலையுண்ட பெண்ணின் பெற்றோரின் கண்ணீருக்கு மனமிரங்கி கொலையாளியை கண்டுபிடிக்க களமிறங்குகிறார்.

தன் காதலனுடன் கல்யாணம் செய்யாமல் லிவிங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்து வருகிறார் கொலையுண்ட பெண்.வழக்கம்போல் கொலையின் பழி காதலன் மேல் விழ விசாரணையில் அவன் கொலையாளி இல்லை என்று தெரியவர, அடுத்து அவளை ஒருதலையாக காதலிக்கும்*புல்லட் ரோமியோ *விடம் விசாரணை தொடங்க அது ஒரு டம்மி பீஸ் என்று தெரியவருகிறது. இப்படி வழக்கமான பாணியில் தொடரும் விசாரனையின் முடிவில் ஒரு ட்விஸ்ட் வைத்து படத்தை படு ஆச்சர்யமான ட்விஸ்டுடன் முடித்திருக்கிறார் இயக்குநர்.

முதல்படம் போலவே தெரியாமல் நாயகன் ராம் அருண் காஸ்ட்ரோவின் நடிப்பு மிக நேர்த்தியாக இருக்கிறது. விசாரணை அதிகாரி என்பதோடு இருள் பயம் கொண்ட பாத்திரம் அவருடைய நடிப்பை வெளிப்படுத்த உதவியிருக்கிறது. அவருடன் இணைந்து விசாரணை அதிகாரியாக வரும் விஷ்ணுப்ரியா பிள்ளை செம ஸ்மார்ட். காவல்துறை யூனிஃபார்மிலும், ஜீன்ஸ் டீ சர்டிலும் படு கச்சிதமாக இருக்கிறார்.துணை பாத்திட்ரங்களில் வரும் லிஜேஷ், காயத்ரி, லிங்கா ஆகியோர் தங்கள் பங்கைச் சரியாகச் செய்திருக்கிறார்கள்.

ரோனி ரெபேலின் இசையும், கிருஷ்ணசங்கர் டி.எஸ்-ன் ஒளிப்பதிவும் கதைக்கு ஏற்றவகையில் இருக்கிறது. படத்தொகுப்பாளர் சி.எஸ்.பிரேம்குமார் படம் வேகமாகச் செல்ல உதவியிருக்கிறார்.

ஒரு கிரைம் த்ரில்லர் ஜானரில் கிளைமேக்ஸில் இயக்குநர் பாவெல் வைத்திருக்கும் ட்விஸ்டும், அதை ஒட்டி கொலையாளியை தனது சமூக அக்கறை வசனங்களால் அவர் விளாசித்தள்ளுவதும் ரசிகர்களை நிச்சயம் சபாஷ் போட வைக்கும். இயக்குநரின் துணிச்சலான முதல் முயற்சியை வாழ்த்தி வரவேற்கிறோம்.

Related Images: