எந்த வித எதிர்பார்ப்பையும் உண்டாக்காத சில சின்ன பட்ஜெட் படங்களுக்குள் சில சமயம் எதிர்பாராத ஆச்சர்யங்கள் காத்திருக்கும். அப்படிப்பட்ட படங்களுல் ஒன்றுதான் இந்த ‘தொட்டு விடும் தூரம்’.

ஒரு குட்டி கிராமம். அதில் வழக்கம்போல் வேலைவாய்ப்பு தேடிக்கொண்டிருக்கும் நாயகன். அவரை உயிராகக் காதலிக்கும் அத்தை மகள். அதே ஊருக்கு என்.எஸ்.எஸ்.கேம்புக்கு வரும் கதாநாயகி என்ரு வழக்கமான டெம்ப்ளேட்டுடன் துங்கும் கதைதான் என்றாலும் இடைவேளைக்குப் பிறகு நடக்கும் சில ட்விஸ்டுகளால் எதிர்பாராத விறுவிறுப்பு ஏற்பட்டு சுவாரசியமான படமாக மாறிவிடுகிறது.

நாயகன் விவேக்ராஜ், துடிப்பான கிராமத்து இளைஞன் வேடத்துக்குப் பொருத்தமாக இருக்கிறார். காதல் பாசம் ஆகிய உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். அவற்றை விட சண்டைக் காட்சிகளில் தேர்ந்த நாயகர்கள் அளவுக்கு சண்டை செய்திருக்கிறார். நாயகி மோனிகா சின்னகொட்லா. அழகிய புதுவரவு. இயல்பாக நடித்திருக்கிறார். பாடல்காட்சிகளில் தாராளமாக நடித்துக் கவனம் ஈர்க்கிறார்.

நாயகனின் அம்மாவாக சீதா. நாயகனின் நண்பராக பாலசரவணன்,வில்லனாக நடித்திருக்கும் ராஜசிம்மன் உள்ளிட்டோர் கொடுத்த வேடங்களுக்கு நியாயமாக நடந்திருக்கிறார்கள்.சிங்கம்புலி குழுவின் நகைச்சுவை கொஞ்சம் அரதப்பழசாக இருந்து நம்மைப் பாடாய்ப்படுத்துகிறது.

நோவாவின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் அளவாக அமைந்திருக்கிறது.கே.ராம்குமாரின் ஒளிப்பதிவில் நாகர்கோயில் சுற்றுவட்டாரப் பகுதிகள் பசுமையாக மனதில் பதிகின்றன. இளங்கோ வடிவமைத்திருக்கும் சண்டைக்காட்சிகள் கவனிக்க வைக்கின்றன.

இயக்குநர் வி.பி.நாகேஸ்வரனுக்கு இது முதல்படம் என்று சொன்னால்தான் தெரியும். அந்த அளவு நேர்த்தியாகப் படமாக்கியிருக்கிறார். தொட்டுவிடும்தூரத்தில் இருக்கும் நாயகன் நாயகியும் இணைந்துவிட வேண்டும் என்று பார்வையாளர்கள் பதட்டப்படுகிறார்கள்.ஆனால் படம் அஜீத்தின் காதல் கோட்டையின் சாயலில் இருப்பதை தவிர்த்திருக்கலாம்.அதேபோல் க்ளைமேக்ஸும் பாஸிடிவாக இருந்திருந்தால் இன்னும் கொஞ்சம் ரசிக்கும்படியான படமாக இருந்திருக்கும்.

Related Images: