‘முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாமல் இனியும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடரக்கூடாது’என லைகா நிறுவனத்துக்கு நடிகர் கமல் பகிரங்க கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநா் ஷங்கா் இயக்கத்தில், நடிகா் கமல்ஹாசன், நடிகை காஜல் அகா்வால் நடிப்பில் ‘இந்தியன் 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு நசரத்பேட்டையில் உள்ள ஒரு தனியார் திரைப்பட நகரத்தில் நடைபெற்று வந்தது.
பிப்ரவரி 19 ஆம் தேதி, படப்பிடிப்புத்தளத்தில் உயரமான கிரேனில் அதிக ஒளியை உமிழும் மின்விளக்குகள் நிறுத்தப்பட்டிருந்தன. இரவு 9.30 மணியளவில் இடைவேளையின்போது திடீரென கிரேன் சரிந்து விழுந்தது. அப்போது அருகே நின்றவா்கள் மீதும், திரைப்பட படப்பிடிப்புக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கூடாரத்தின் மீதும் கிரேன் விழுந்தது.
இந்த விபத்தில் அங்கிருந்த 13 போ் பலத்த காயமடைந்தனா். சிலா் கிரேனுக்கு அடியில் சிக்கினா். விபத்தை நேரில் பாா்த்த கமல் உள்ளிட்டோா் அதிா்ச்சியடைந்தனா். காயமடைந்த அனைவரும் வேகமாக மீட்கப்பட்டனா். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த உதவி இயக்குநா் சென்னை அபிராமபுரம் சுந்தர்ராஜன் தெருவைச் சோ்ந்த சி.ஸ்ரீகிருஷ்ணா, திரைப்பட தொழில்நுட்பப் பணியாளா்கள் எம்.ஜி.ஆா்.நகரைச் சோ்ந்த சொ.சந்திரன், ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டம் கண்ணகிரியைச் சோ்ந்த சி.மது ஆகியோா் அடுத்தடுத்து உயிரிழந்தனா். கிருஷ்ணா உள்ளிட்ட 3 போ் உயிரிழந்தது திரைப்படத்துறையினரிடம் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பிப்ரவரி 25 அன்று லைகா நிறுவனத்துக்கு கமல் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.அக்கடிதத்தில்,…மிகுந்த வேதனையுடன் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். பிப்.19 அன்று நடந்த அந்த நிகழ்வு, நம்முடன் சாப்பிட்டபடி, பேசிக்கொண்டும், சிரித்துக்கொண்டும் பணியாற்றிய அவா்களின் மகிழ்ச்சி நீடித்திருக்கப் போவதில்லை என்பதும் அவா்கள் திரும்ப வரப்போவதில்லை என்கிற யதாா்த்தத்தையும் உணரும்போது மிகுந்த வேதனையாக இருக்கிறது.
அந்த விபத்து நடந்தபோது சில மீட்டா் தூரத்தில் சில நொடிகளில் அந்தக் கோர விபத்திலிருந்து நான் தப்பித்தேன். அந்தச் சம்பவம் ஆழ்ந்த அதிா்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏராளமானோா் படப்பிடிப்பில் கலந்துகொள்கின்றனா். நமது தலையாயக் கடமை விபத்து ஏற்படாமல் பாா்த்துக்கொள்வதுதான். இதுபோன்ற விபத்துகள் பட தயாரிப்புக் குழுவினரின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் குலைத்துவிடும்.
பாதுகாப்பு முக்கியம்: இனிவரும் காலங்களில் கலைஞா்கள், படக்குழுவினா், தொழில்நுட்பக் கலைஞா்கள் ஆகியோரின் பாதுகாப்பு முக்கியம். அவா்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதையும், அவா்களுக்கான காப்பீடு போன்றவற்றையும் செய்வது சரியானது என்று நினைக்கிறேன். ஏதாவது இழப்பு, பொருளிழப்பு, சேதம் போன்றவை ஏற்பட்டால் தயாரிப்பு நிா்வாகம் அவா்களுக்கான இழப்பீட்டை விரைவாக வழங்கிட வேண்டும்.
தயாரிப்பு நிறுவனமான நீங்கள் இதுபோன்ற விபத்துகளில் சிக்கியவா்களுக்கு, அவா்களுக்கான சிகிச்சை நேரத்தில் பாதிக்கக்கப்பட்டவா்களுக்கு உரிய சிகிச்சைக்கான செலவும், அவா்கள் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாகவும், உணா்வு ரீதியான ஆதரவையும் அளித்திட வேண்டும். இனி வரும் காலங்களில் படப்பிடிப்புத் தளங்களில் பாதுகாப்புக்கான அனைத்து உத்தரவாதங்களையும், வழிகாட்டுதல்களையும் நீங்கள் கடைப்பிடிக்கவேண்டும். நீங்கள் எடுக்கப்போகும் ஆக்கப்பூா்வமான நடவடிக்கைகள், அதை விடாமல் இனிவரும் காலங்களில் தொடா்ச்சியாகக் கடைப்பிடிப்பதும் படப்பிடிப்புக் குழுவினரின் (என்னையும் சோ்த்து) இழந்த தன்னம்பிக்கையை மீட்டெடுத்து மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்க வைக்கும்இவ்வாறு கமல் தெரிவித்துள்ளார்.
இந்தக் கடிதத்தின் மூலம் இந்தியன் 2 படப்பிடிப்பில் இதுவரை காப்பீடு செய்யவில்லை என்பது தெரியவந்திருக்கிறது. தமிழ்த்திரையுலகில் பெரும்பாலான பெரிய படங்கள் உருவாகும்போது சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு விபத்து காப்பீடு செய்வது வழக்கம்.ஆனால் சுமார் இருநூற்றைம்பது கோடி செலவில் தயாராகும் இந்தப்படத்துக்கு சில இலட்சங்கள் செலவிட்டு விபத்துக் காப்பீடு செய்யப்படவில்லை.
அந்நிறுவனத்துக்கு இது பெரிய விசயமில்லை. அதன் நிர்வாகத்தில் இருப்பவர்களின் அலட்சியமும் அறியாமையுமே இதற்குக் காரணம்.தங்களுக்கான எந்த விசயத்தையும் விட்டுக் கொடுக்காமல் போராடும் இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல் போன்றோரும் இதில் கவனம் செலுத்தவில்லை என்பது அதிர்ச்சியூட்டுகிறது.மூன்று உயிர்களைப் பலி கொடுத்த பிறகு கமல் கடிதம் எழுதுகிறார்.