ஜாதி மறுப்பு சுயமரியாதைத் திருமணம் செய்து வைத்து, இணையர்களுக்கு பாதுகாப்பு அளித்த கழகத்தோழர் மீது நள்ளிரவில் 50 பேர் கொண்ட ஜாதி வெறி கும்பல் கொலை வெறித் தாக்குதல் !

இணையர்களை ஜாதி வெறி கும்பல் கடத்திச் சென்றது.
இதில் மணமகன் மீட்கப்பட்டுள்ளார். மணமகள் நிலை தெரியவில்லை. காவல்துறை தேடி வருகிறது.

வன்முறை வெறியாட்டம் நிகழ்த்திய ஜாதி வெறி கும்பலை கைது செய்து அவர்கள் தீண்டாமை வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி நள்ளிரவு முதல் விடியவிடிய திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களால் கொளத்தூர் காவல் நிலையம் முற்றுகை !

தமிழக அரசே,
கொலை வெறித் தாக்குதல் நடத்திய
ஜாதி வெறிக் கும்பலைச் சேர்ந்த அனைவரையும் கைது செய் !

அவர்கள் மீது கொலை முயற்சி, ஆள்கடத்தல் உடன் PCR சட்டப்படி வழக்கு தொடர் !

மணமகளை மீட்டு மணமக்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்கு !

ஈரோடு மாவட்டம் பவானி அருகே உள்ள குருப்பநாயக்கம்பாளையம் பகுதியைச் சேர்ந்த இளமதி,23(வன்னியர்), கவுந்தப்பாடி பகுதியைச் சேர்ந்த செல்வன்,25 (அருந்ததியர்) ஆகியோர் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். இவர்களது விருப்பத்தின் படியும் கேட்டுக் கொண்டதன் பேரிலும் சுயமரியாதைத் திருமணம் காவலாண்டியூரில் 09.03.2020 அன்று திராவிடர் விடுதலைக் கழக தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன் தலைமையில், கழகத் தோழர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

ஜாதியை காரணம் காட்டி பெண்ணின் பெற்றோர் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததாலும், அச்சுறுத்தலில் ஈடுபட்டதாலும் கழகத் தோழர்களே திருமணம் செய்த இணையரை பாதுகாப்பாக வைத்திருந்தனர். இதனையறிந்த மணமகள் உறவினரான ஜாதி வெறிக்கும்பல் 40க்கும் மேற்பட்டோர் நேற்றிரவு சுமார் 10 மணியளவில் தோழர் காவை ஈசுவரன் வீட்டிற்குள் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் நுழைந்து அவரை கடுமையாக தாக்கி கத்திமுனையில் கடத்திச் சென்றனர்.

அதேபோல வேறு இடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டிருந்த மணமக்களையும் தேடிச் சென்று பலவந்தமாக கடத்திச் சென்று, மூவரையும் அடையாளம் தெரியாத பகுதிக்கு அழைத்துச் சென்று கடுமையாக தாக்கியுள்ளனர். மூவரையும் கொலை செய்யும் நோக்கத்துடன் இரவில் கடத்திச் சென்றிருப்பது தெரியவருகிறது.

மூவரும் கடத்தப்பட்ட தகவலறிந்து கழகத் தோழர்கள் உடனடியாக கொளத்தூர் காவல் நிலையத்தில் குவிந்தனர். தோழர் காவை ஈஸ்வரன் மற்றும் மணமக்களை உடனடியாக மீ்ட்க வேண்டும், கடத்தலில் ஈடுபட்ட ஜாதி வெறியர்களை கைது செய்ய வேண்டுமென கொளத்தூர் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு கழகத் தோழர்கள் விடிய விடிய போராட்டம் நடத்தினர். கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணியும் நள்ளிரவே காவல் நிலையம் விரைந்தார்.

இதன் விளைவாக திராவிடர் விடுதலைக் கழக தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈஸ்வரன் மற்றும் மணமகன் செல்வனை நள்ளிரவுக்குப்பின் போலீசார் மீட்டனர். இன்னமும் மணமகள் இளமதி ஜாதி வெறிக்கும்பலிடம் இருந்து மீட்கப்படவில்லை. இளமதியை மீட்கக்கோரி கொளத்தூர் காவல் நிலையத்தில் கழகத் தோழர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். அடுத்தகட்ட செயல்பாடுகள் குறித்தும், சட்ட நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்ட வருகிறது.

உச்சநீதி மன்றம், உயர்நீதி மன்றம் ஆகியவை பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகளில் ஜாதி மறுப்பு திருமணத்தை அரசு ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஜாதி மறுப்பு திருமணம் செய்யும் இணையருக்கு அரசு தக்க பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் இதற்கென ஒரு தனி பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்றும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

தமிழக அரசும் காவல்துறையும் ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் தொடர்ந்து நீதிமன்றம் வழிகாட்டுதல்களை மீறியும், பாதுகாப்பு கேட்டு வரும் இணையர்களுக்கு பாதுகாப்பளிக்க வேண்டிய கடமையை செய்ய தவறியும், உதாசீனப்படுத்தியும், அலைக்கழித்தும் சில இடங்களில் ஜாதி வெறியர்களுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருவது ஜாதி ஆணவப்படுகொலைகளுக்கு துணைபோவது போலவேதான் ஆகும்.

ஆகவே நீதிமன்ற வழிகாட்டுதலின்களின்படியும், காவல்துறை ஜாதி மறுப்பு இணையர்களை பாதுகாக்க வேண்டிய கடமையை உறுதிப்படுத்தவும் இதற்கென தனி பிரிவை உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது.

நேற்று ஆணவப் படுகொலை செய்யும் நோக்கத்தோடு மணக்களையும், ஜாதி மறுப்புத் திருமணங்களை அதிகளவில் நடத்தி வைப்பதால் திவிக தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரனையும் கொலை செய்யும் நோக்கத்தோடும் கடத்திச் சென்ற ஜாதி வெறிக்கும்பலைச் சேர்ந்த அனைவரும் கைது செய்யப்பட்டு தக்க பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும்வரை திராவிடர் விடுதலைக் கழகத்தின் போராட்டம் தொடரும்.

– திராவிடர் விடுதலைக் கழக தலைமையகம்.
10.03.2020.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.