பு.பா.பிரின்ஸ் கஜேந்திர பாபு
மாநில அரசால் நடத்தப்பட்டு வரும் பள்ளி களுக்கும், உயர் கல்வி நிறுவனங்க ளுக்கும் மத்திய அரசு போதிய நிதியை வழங்கி அவற்றை வலுப்படுத்துவதற்கு பதிலாக, இயங்கிவரும் மாநில அரசின் பொதுக் கல்வி நிறுவனங்களை பல வீனப்படுத்திட பல்வேறு கூறுகளை கொண்டதாக தேசியக் கல்விக் கொள்கை 2020 இருப்பதாலேயே இதை நிராகரிக்க வேண்டும் என்ற குரல் தமிழ் நாட்டில் வலுவாக எழுந்துள்ளது. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சமத்துவக் கோட்பாட்டின் அடிப்படையில் இன்று இயங்கும் பள்ளிக் கல்வி முறையை சிதைத்து, சந்தைக்கு தேவையான கட்டமைப்பை இக்கொள்கை உருவாக்குகிறது.
அதன் விளைவு தான், பள்ளிக் கல்வியில் சுலபமாக முன்னேறிச் செல்ல ஏணி போன்ற 10 +2 அமைப்பை எத்தகைய ஆய்வும், காரணமும் இல்லாமல் சிதைத்து விட்டு, சிக்கலான 5+3+3+4 என்ற அமைப்பை தேசியக் கல்விக் கொள்கை 2020 முன் வைக்கிறது. அத்துடன் பலவீனமான அரசுப் பள்ளிகளை ஆய்வு செய்து பலவீனங்களை களைந்து பலப்படுத்துவதற்கு பதிலாக, 1966யிலேயே நடைமுறை சாத்தியம் இல்லை என்று நிராகரிக்கப்பட்ட “பள்ளி வளாக” அமைப்பை இந்த கல்விக் கொள்கை முன்வைக்கிறது.
அதே வேளையில் தனியார் தங்கள் வசதிக்கு தகுந் தாற்போல் பள்ளியை நடத்திக் கொள்ளவும், பள்ளி தரும் வசதிக்கு தகுந்தாற்போல் கட்டணம் வசூல் செய்யவும், உபரி வருமானத்தை கல்வித் துறையில் முதலீடு செய்யவும் வழி செய்கிறது இந்த கொள்கை. தற்போதுள்ள சமமற்ற கல்வி நிலையை நீடிக்கச் செய்வதுடன், மேலும் மேலும் தனியாரை ஊக்குவிப்பது டன், அரசுப் பள்ளிகளுக்கு நெருக்கடியை உருவாக்குகிறது தேசியக் கல்விக் கொள்கை 2020. மாணவர்கள் தாய்மொழியில் பயில்வது தான் அவர்க ளின் முழு கல்வி வளர்ச்சிக்கும் கற்றல் திறன் அதிகரிக்கவும் வாய்ப்பை தரும் என்பது ஆய்வு மூலமும் அனுபவ ரீதியாகவும் நிறுவப்பட்டது.
மூன்றாவது மொழி இந்தி
21ஆம் நூற்றாண்டின் முதல் கல்விக் கொள்கை என்று பெருமை பேசும் இந்த கொள்கையில், 2009 கல்வி உரிமைச் சட்டத்தில் சொல்லப்பட்ட அதே கருத்தை வேறு வார்த்தைகளில் இந்த கல்விக் கொள்கையில் சொல்லி இருக்கிறார்கள். அதாவது, எங்கெல்லாம் சாத்தியமோ அங்கெல்லாம் தாய் மொழி வழியில் கல்வி ஐந்தாம் வகுப்பு வரை, அது எட்டாம் வகுப்பும் அதற்கு மேல் வகுப்புகளிலும் வழங்குவது விரும்பப்படுகிறது. தற்போது உள்ள நிலையும் இது தான். இந்த கொள்கை அறுதியிட்டு அனைத்து வகை பள்ளிகளிலும் குறைந்தது ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழி வழி கல்வி என்ற திட்டவட்டமாக கூறவில்லை. அனைவருக்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் தாய்மொழி வழியில் கல்வி வழங்குவதை உத்தரவதப் படுத்த இயலாத இந்த கல்விக் கொள்கை கூடுதலாக, மூன்றாவதாக ஒரு மொழியை படி என்று மாணவரை கட்டாயப்படுத்துகிறது.
தன்னை சுற்றியுள்ள சூழலில் பேசப்படும் மொழியை கற்பது ஒரு குழந்தைக்கு சுமையாக இருக்காது. சூழலிய லில் இல்லாத ஒரு மொழியை கற்பது சுமை தான். தாய்மொழி அல்லது மாநில மொழி ஒரு குழந்தைக்கு கற்பதில் சுமை இல்லாத ஒன்று. அதை தாண்டி ஆங்கிலம் கற்க வேண்டிய தேவையை அரசே உருவாக்கி வைத்துள் ளது. உயர் கல்விக்கும், வேலை வாய்பிற்கும் ஆங்கில அவசி யம் என்ற நிலையில், ஆங்கிலம் தன் சூழலியல் மொழி யாக இல்லாத போதும், குழந்தைகளுக்கு ஆங்கிலம் கற்க வேண்டிய அவசியம் எழுகிறது.
இந்தி ஆசிரியர்கள் உருவாக்க 50 கோடி
கடந்த மத்திய நிதி நிலை அறிக்கையில் தேசியக் கல்விக் கொள்கை அறிவிக்கப்பட உள்ளது என்று குறிப்பிட்டு, இந்தி பேசாத மாநிலங்களில் இந்தி கற்பிக்க தேவைப் படும் இந்தி ஆசிரியர்களை உருவாக்க ஐம்பது கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ் உள்ளிட்ட வேறு எந்த மொழிக்கும் நிதி ஒதுக்காமல் இந்திக்கு மட்டும் என்பதின் நோக்கமென்ன?
13 வயதிலேயே ‘தொழில்’
இது குழந்தைகளின் விருப்ப மா, குழந்தைகளின் மீது நடத்தப்படும் திணிப்பா? மரவேலை, மண்பாண்ட வேலை, மின்சார வேலை உள்ளிட்ட பல்வேறு வகையான தொழிலில் குழந்தை விரும்பும் தொழிலை கற்க வேண்டும். கற்றுத்தர குழந்தை உளவியல், குழந்தைகள் கற்கும் விதம் ஆகியவற்றில் எந்த பயிற்சியோ அனுபவமோ இல்லாத உள்ளுரில் அந்த தொழில் செய்பவரே வகுப்பறையில் தொழில் கற்றுத் தரு வார். அது மட்டுமல்லாமல் 13 வயதிற்கு உட்பட்ட குழந்தை கள், அவர்கள் விரும்பும் தொழிலை அனுபவ ரீதியாக கற்றுணர பத்து நாட்கள் தொழில் நடக்கும் இடத்திற்கே சென்று பயிற்சி மேற்கொள்ள வேண்டுமாம். குழந்தை பரு வத்தில் ஒரு தொழில மீது ஆர்வத்தை உருவாக்கிய பிறகு குழந்தைகளால் படிப்பின் மீது ஆர்வம் செலுத்த இயலுமா? மொழி, கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்க ளிலும் தேர்ச்சி பெற வேண்டும், தொழில் கல்வியிலும் தேர்ச்சி பெற வேண்டும் என்பது குழந்தை பருவத்தில் எத்தகைய சுமை.
அவ்வாறு 13 வயதிற்குள் தொழில் கற்க வேண்டிய அவசி யத்தை ஏன் இந்த கல்விக் கொள்கை உருவாக்குகிறது? இத்துணை சவாலையும் அரசுப் பள்ளி மாணவர் எதிர் கொள்ள, இவர்கள் முன் வைக்கும் நிர்வாக ஏற்பாடு தான் பள்ளி வளாகம். ஒரு பள்ளியை மையமாக வைத்து சுற்றி உள்ள அரசுப் பள்ளிகளை அதனுடன் இணைத்து வளங்களை பகிர்ந்து அளிப்பார்களாம். ஒவ்வொரு பள்ளியிலும் அனைத்து வளங்களும் இல்லாமல், வளங்களை பகிர்ந்து பயன்படுத்தும் பள்ளிக ளில் பயிலும் மாணவர்களுக்கு உள்ள வாய்ப்பும், சவாலும், அனைத்து வளங்களையும் தன் பள்ளி வளாகத்திலேயே கொண்ட ஒரு பள்ளியில் பயிலும் மாணவர்களின் வாய்ப்பும் சவாலும் ஒன்றா? ஆனால் கற்றல் திறன் வெளிப்பாடு மட்டும் இருவருக்கும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றது தேசியக் கல்விக் கொள்கை 2020.
சமமான கற்றல் வாய்ப்பை அனைத்துக் குழந்தைக ளுக்கும் வழங்க மறுக்கும் தேசியக் கல்விக் கொள்கை 2020, கற்றல் திறன் வெளிப்பாடு மட்டும் அனைவருக்கும் சமமாக இருக்கும் வேண்டும் என்கிறது. 9 முதல் 12 வகுப்பு வரை இடைநிலைக் கல்வி. இரண்டு மொழி அல்லாமல் கூடுதலாக ஒரு மொழி பயில்வதும், தொழில் கல்வி பயில்வதும் கட்டாயம். பாடங்களிலும், தொழிலிலும் சம அளவில் தேர்ச்சி பெற வேண்டும்.
பள்ளிப் பொதுத் தேர்வு முறை மூலம் படிப்பை நிறுத்தமுடியும்.
ஒவ்வொரு பாடத்திலும் பொதுத் தேர்வு தாள்களில் பொது நிலை, உயர் நிலை என்று இரண்டு நிலைகளில் கேள்வித் தாள்கள் இருக்கும். 14 வயதில் 9 ஆம் வகுப்பில் தொடங்கி தனக்கு எந்த பாடம் கடினமாக இருக்கிறதோ அதில் அவர் பொது நிலைத் தாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அப்படி என்றால் உயர் நிலை தாள் எடுக்காத மாணவர் அந்த பாடத்தில் உயர்கல்வி பெற இயலாது. ஒன்பதாவது வகுப்பு முடிக்கும் போதே ஒரு குழந்தையால் உயர் கல்வியில் தன் இந்த பாடம் தான் படிக்க போகிறோம் என்று முடிவு செய்ய இயலுமா? தேவையற்ற இந்த நெருக்க டியை குழந்தைகளுக்கு ஏன் தரவேண்டும்? நெகிழ்வான, முழுமையான பள்ளிக் கல்வி தருவதாக கூறிவிட்டு, மூன்று வயது தொடங்கி பதினெட்டு வயது வரை பதினைந்து வருட பள்ளி படிப்பு முடித்த மாணவரை “நீ படித்த பள்ளிப் படிப்பை வைத்து உயர்கல்வி செல்ல தகுதி இல்லை” என்று கூறுவது எந்த வகையில் நியாயம்.
கல்லூரியில் சேரவும் நுழைவுத்தேர்வு. வடிகட்டும் மற்றொரு வழி.
மாணவர் உயர் கல்வி எந்த பாடத்தில் படிக்கலாம் என்று அவர் ஆர்வத்தை அறியவும், அந்த பாடத்தில் அவருக்கு உள்ள அறிவை அறிய அகில இந்திய அளவில் தேசிய தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் பெறும் மதிப்பெண் வைத்தே கல்லூரிக் கல்விக்கு அனுமதி. ஆக, பதினைந்து வருட பள்ளி படிப்பு கல்லூரி செல்ல பயன்படாது. பதினைந்து வருட பள்ளி படிப்பு மூலம் ஒரு மாணவர் தான் எந்த பாடத்தில் மேற்கொண்டு படிக்கலாம் என்று அறிய முடியாது, பதினைந்து வருட பள்ளி படிப்பு மதிப்பீடு மூலம் எந்த பாடத்தை மாணவர் படிக்கலாம் என்று கல்லூரியால் தீர்மானிக்க முடியாது. ஒரு அகில இந்திய தேர்வில் பெறப்படும் மதிப்பெண் தான் கல்லூரி சேர்க்கைக் கான தகுதியை தீர்மானிக்கும் என்பது அனைவரையும் உயர்கல்வி கொண்டு சேர்க்க உதவாது. கல்வி முறையை விட்டு வெளியேற்றி அரைகுறை திறன் கொண்ட சந்தை எதிர்பார்க்கும் கூலித் தொழிலாளிகளையே உருவாக்க முற்படுகிறது தேசியக் கல்விக் கொள்கை 2020.
கல்லூரிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள்.
கல்லூரிகளிலும் இதே நெருக்கடியை இக்கொள்கை உருவாக்குகிறது. ஒவ்வொரு கல்லூரியும் பல்துறை கொண்ட, தானே பாடத்திட்டத்தை உருவாக்கிக் கொண்டு, பட்டம் வழங்கும் தகுதி பெற்ற தன்னாட்சி கல்லூரிகளாக பத்தாண்டுகளில் மாற வேண்டும். இல்லை என்றால் கல்லூரிகள் பல்கலைக்கழகத்தின் பகுதியாகிவிட வேண்டும். அந்த கல்லூரி அதே பகுதியில் செயல்பட இயலாது. ஓவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் அவ்வாறு மாற வேண்டும் என்றால் எவ்வளவு நிதி தேவைப்படும். நிதி தேவை குறித்து ஏதாவது ஆய்வு உண்டா? மாநில அரசால் போதுமான நிதியை ஒவ்வொரு கல்லூரிக்கும் வழங்க இயலுமா? தேவையான நிதியும், பிற வசதிகளும் முதல் ஆண்டிலேயே வழங்கினால் தானே பத்தாண்டு கழித்து தேசியக் கல்விக் கொள்கை 2020 முன் வைக்கும் அளவுகளை அடைய முடியும். இல்லா விட்டால் இக் கல்லூரிகள் இயங்க முடியாது.
கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டும் தொடரலாம். மாணவனை விரட்டும் இன்னொரு வழி.
தனியார் உயர் கல்வி நிறுவனங்களும், வெளிநாட்டு உயர் கல்வி நிறுவனங்களும் ஈட்டிய இலாபத்தை, தங்கள் விருப்பப்படி வெவ்வேறு கல்வி நிறுவனங்களை வெவ்வேறு இடங்களில் திறப்பதற்கான முதலீடுகளை செய்ய தேசியக் கல்விக் கொள்கை 2020 வழி செய்கிறது. உயர் கல்வி கற்க வரும் மாணவரை, தன் படிப்பை எந்த நிலையிலும் நிறுத்திவிட்டு வெளியேற அனைத்து வழிகளை யும் காட்டுகிறது. எந்த ஆய்வும் இல்லாமல் மூன்று வருடப் பட்டப் படிப்பை நான்கு வருட பட்டப் படிப்பாக்குகிறது. ஆழ மாக ஒரு பாடத்தை படித்து அறிஞர் ஆவதற்கு உருவாக்கப் பட்ட இரண்டாண்டு முதுகலைப் பட்டப் படிப்பை ஓராண்டாக சுருங்குகிறது.
இட ஒதுக்கீடு பற்றி பேச்சே இல்லை.
இட ஒதுக்கீடு குறித்து இந்த கொள்கையில் எங்கும் பேசப்படவில்லை. இந்திய அரசமைப்புச் சட்டத்தின் படி இட ஒதுக்கீடும், கல்வி உதவித் தொகையும் சமூக மற்றும் கல்வி பின்தங்கலை அடிப்படையாக கொண்டது. அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில் இருந்து மாறு பட்டு, வரலாற்றை மறைத்து, இந்திய சமூகத்தில் பெரும் பகுதி மக்களுக்கு பல நூற்றாண்டுகளாக கல்வி மறுக்கப் பட்டதை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், சமூக – பொரு ளாதார வாய்ப்பின்மை என்ற தலைப்பில் தான் கல்வி உதவித்தொகை குறித்து விவாதிக்கிறது தேசியக் கல்விக் கொள்கை 2020.
ஏழ்மை, வசதியின்மையே கல்வி வளர்ச்சிக்கு தடை என்கின்ற வகையில் சிக்கலை திசை திருப்பி, எதிர்கா லத்தில் கல்வியிலும் வேலை வாய்ப்புகளிலும் சமூக மற்றும் கல்வி பின்தங்கலை கணக்கில் எடுத்து இட ஒதுக்கீடு இல்லா மல் செய்கிறது. சமூக நீதியின் விளைவாக பெறப்பட்ட உரி மைகள் பறிக்கப்பட தேசியக் கல்விக் கொள்கை 2020 வழி செய்கிறது. இக்கொள்கை அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடான கூட்டாட்சி தத்துவத்தை புறம் தள்ளி, பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மத்திய பட்டியலுக்கு நகர்த்த வழி செய்கிறது.
இந்திய அரசமைப்புச் சட்டம் தந்துள்ள அதிகாரத்தின் அடிப்படையில், தமிழ் நாடு சட்டப் பேரவை இதுவரை கல்வித் துறையில் இயற்றிய சட்டங்கள் செல்லாதவை ஆக்கப்படுவதுடன், இனி மாநில அரசு சுயமாக கல்வித் துறையில் கொள்கை வகுக்கவோ, சட்டம் இயற்றவோ இயலாது என்ற நிலையை இக் கொள்கை உருவாக்குகிறது. கல்வித் துறையில் எல்லா மாநிலங்களிலூம் சமச் சீரான வளர்ச்சி இல்லை. இந்திய அளவில் உருவாக்கப் படும் கொள்கை மாநிலங்களுக்கு வழி காட்டுவதாக அமைய வேண்டுமே தவிர மாநிலங்கள் மீது ஒரே கட்ட மைப்பை திணிக்க கூடாது.
பன்னாட்டு நிறுவனங்கள் பள்ளிகள், கல்லூரிகள் நடத்தி காசு பார்க்கலாம்.
“வேற்றுமையில் ஒற்றுமை” என்பதே இந்தியாவின் தனித் தன்மை. பல மொழி, பல வகையான பழக்க வழக்கங்கள் கொண்டு பன்முகப் பண்பாட்டின் பெட்டகமாக திகழும் இந்தியவின் இன்றைய தேவைகளை உணராமல் உலகச் சந்தையின் தேவைகளை கருத்தில் எடுத்து உரு வாக்கப்பட்டது தான் தேசியக் கல்விக் கொள்கை 2020. பல்வேறு மாநில அரசுகள் முடிவு செய்வது பன்னாட்டு நிறுவனங்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதனால் கொள்கை வகுக்கும், சட்டம் இயற்றும் அதிகாரங்களை மத்திய அரசு முழுமையாக எடுத்துக் கொள்ள வழி செய்யும் தேசியக் கல்விக் கொள்கை 2020 நடைமுறைக்கு வந்தால் அதிகாரம் மத்திய அரசிடம், பொறுப்பு மாநில அரசி டம் என்ற நிலை உருவாகும்.
கல்வியில் சிறந்த தமிழ் நாடு மேலும் கல்வித் துறையில் வளர்ச்சி பெற தமிழ் நாடு அரசு தன் கல்வி நிறுவனங்களை வலுப்படுத்தி சமமான கற்றல் வாய்ப்பை அனைவருக்கும் உருவாக்க வேண்டும். மாநில அரசின் உரிமையை பறிக்கின்ற, சமூக நீதிக்கு எதிராக அமைந்துள்ள, சமமான கற்றல் வாய்ப்பை அனை வருக்கும் உறுதிப்படுத்தாத தேசியக் கல்விக் கொள்கை 2020யை மக்களுடன் சேர்ந்து தமிழ் நாடு அரசு நிராகரிக்க வேண்டும்.
கட்டுரையாளர் : பொதுச் செயலாளர், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை