கேள்வி: எல்.ஐ.சி பங்கு விற்பனையின் மூலம் பங்குச் சந்தை கட்டுப்பாடு ஆணையத்தின் (செபி) கண்காணிப்பிற்குள் வருவதால், எல்.ஐ.சியின் செயல்பாடுகள் ஒழுங்கு செய்யப்படும் என்ற வாதம் முன் வைக்கப்படுகிறதே!
கடந்த நான்கு நாட்களில் இரண்டு கதைகள் வெளி வந்துள்ளன. இரண்டும் செபியோடு தொடர்புடையவை.
ஒன்று தேசிய பங்குச் சந்தை ஆணையத்தின் நம்பர் 1 ஆக அதாவது சி. இ. ஓ வாக இருந்த சித்ரா இராமகிருஷ்ணா அவர்கள் 2013 முதல் 2016 வரை இமயமலை யோகி ஒருவரின் ஆலோசனை பேரில்தான் முடிவுகளை எடுத்தார் என்பது. 280 லட்சம் கோடி மூலதனம் சுற்றி வரும் ஒரு பங்குச் சந்தை மூன்று ஆண்டுகள் எப்படி செயல்பட்டுள்ளது பாருங்கள். தேசிய பங்கு சந்தையின் (NSE) ஐந்தாண்டு மதிப்பீடுகள், நிதி தகவல்கள், டிவிடெண்ட் விகிதங்கள், இயக்குனர் அவை விவாத பொருள்கள், வணிகத் திட்டங்கள் ஆகிய எல்லா ரகசியங்களும் இமயமலை “சிரோன்மணி” யிடம் தெரிவிக்கப்பட்டதாம். இவரின் நடவடிக்கைகளை பெரிய பெரிய அரசுத் துறைகள், வங்கிகள் யாரும் ஆட்சேபிக்கவில்லையாம். யோகி ஆலோசனையின் பேரில் தனது உறவினர் ஆனந்த் சுப்ரமணியன் என்பவரை நம்பர் 2 ஆக, தலைமை செயல் அலுவலர் ஆக, நியமித்து கொண்டு அவருக்கு இரண்டு ஆண்டுகளில் சம்பளத்தை 1.68 கோடியில் இருந்து 5 கோடி வரை சித்ரா இராமகிருஷ்ணா உயர்த்திக் கொண்டே போயிருக்கிறார். ஆனந்த் சுப்ரமணியம் வாரம் ஐந்து வேலை நாட்களில் மூன்று நாள் வந்தால் போதும் என்றும் “மலை”யில் இருந்து ஆலோசனை வந்துள்ளது. திகில் கதை போல வர்ணிக்கும் “இந்து பிசினஸ் லைன்” (13.02.2022) தலைப்பு செய்தியின் கிளைமாக்ஸ் தான் திகிலின் உச்சம். “இவ்வளவும் செய்த சித்ரா இராமகிருஷ்ணாவுக்கு செபி தந்துள்ள தண்டனை மிக அற்பமானது”. அவருக்கு வர வேண்டிய விடுப்பு பண்மாக்கல் மற்றும் நீட்டிக்கப்பட்ட போனஸ் ரூ 4.37 கோடியை நிறுத்த சொல்லி இருக்கிறது. (இந்த தண்டனை எந்த யோகி யாருக்கு சொன்ன ஆலோசனையோ?)
இரண்டாவது, சி. இ. ஓ மற்றும் மேலாண்மை இயக்குநர் பதவிகளை ஒருவரே வைத்துக் கொள்ளாமல் பிரிப்பது என்ற செபியின் ஆணை. இது உதய் கோடாக் குழுவின் பரிந்துரை. 2020 ஏப்ரலுக்குள் செய்ய வேண்டுமென உத்தரவு. 2019 செப்டம்பர் வரை டாப் 500 நிறுவனங்களில் 50 சதவீத நிறுவனங்களே நிறைவேற்றி இருந்தன. செபி சும்மா இருக்குமா? கோபம் வராதா? வந்தது. ஆனாலும் “அடக்கிக் கொண்டு” காலக் கெடுவை 2022 ஏப்ரல் வரை இரண்டு ஆண்டுகள் நீடித்தது. காலக் கெடு நெருங்க நெருங்க நிறுவனங்களின் வயிற்றைக் கலக்க வேண்டும் அல்லவா! பிப்ரவரி 2022 துவங்கிய பிறகு செபி கணக்கை பார்த்தது. 2019 இல் 50 சதவீதம். இப்ப 54 சதவீதம். வயிறு கலங்கியது. நிறுவனங்களுக்கு அல்ல. செபிக்கு… கோபம் வராதா? வந்தது.
அதனால் தடாலடி அறிவிப்பு. என்ன தெரியுமா? இரண்டு பதவிகளையும் பிரிப்பது என்பது இனி கட்டாயம் அல்ல; அவரவர் விருப்பம். இப்போது நிறுவனங்கள் மீற முடியுமா?
இந்த சிரிப்புப் போலிசுதான் எல்.ஐ.சி போன்ற நிறுவனங்களை பங்கு விற்பனைக்கு ஆளான பிறகு கண்காணிப்பை பலப்படுத்தி பாதுகாக்குமாம்!
செவ்வானம்
நாளொரு கேள்வி: 18.02.2022
தொடர் எண் : 627
இன்றைய கேள்வி எழுப்பியவர், நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் க.சுவாமிநாதன்
########################