தமிழ் சினிமா கொஞ்சகாலமாக தீவிரவாதிகளுக்கு ஓய்வு கொடுத்திருந்தது. அது பொறுக்காமல் பாழாய்ப்போன இயக்குநர் நெல்சன் விஜயை வைத்து அவர்களுக்கு மீண்டும் வேலை கொடுத்திருக்கிறார். டார்க் காமெடிக்குப் பேர் போனவர் என்று நம்பப்படும் நெல்சன் இம்முறை தீவிரவாதிகளை வைத்து படு தீவிரமான காமெடிப் படம் ஒன்றை எடுத்திருக்கிறார்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் ரகசியமாக ஊடுருவி பாகிஸ்தான் தீவிரவாதி உமர்ஃபரூக் என்பவரைக் கைது செய்துவருகிறார் ரொம்பவும் ராவான ரா அதிகாரி விஜய். அவர்கள் பதிலுக்கு சென்னையில் உள்ள வணிகவளாகம் ஒன்றை மொத்தமாகக் கையகப்படுத்திக் கொண்டு, உமர்ஃப்ருக்கை விடுதலை செய்தால்தான் உள்ளே இருக்கும் இருநூற்றுச்சொச்சம் பேரையும் உயிரோடுவிடுவோம் என்று இந்திய ஒன்றிய அரசை மிரட்டுகிறார்கள்.
அந்தச் சமயத்தில் வேறொரு வேலையாக அந்த வணிகவளாகத்துக்குள் வந்த விஜய், உமர்ஃபரூக்கை எக்காரணம் கொண்டும் விடுதலை செய்யக்கூடாது என மிரட்டுகிறார். ஆனால் அவர் மிரட்டலைப் பொருட்படுத்தாமல் உமர்ஃபரூக்கை விடுதலை செய்கிறது அரசாங்கம்.
அதன் பின் ‘என் பேச்சையே நான் கேட்க மாட்டேன்’ என்று ஆவேசமாகும் விஜய் உலகமே பதறி நடுங்கும்படி ஒரு காரியம் செய்கிறார். அதாவது தனி விமானத்தில் பறந்துபோய் பாகிஸ்தானில் இருக்கும் தீவிரவாதியை பருந்து கோழிக்குஞ்சை அமுக்குவதுபோல் அமுக்கி தூக்கி வருகிறார்.
இராணுவ அதிகாரி வேடத்துக்குப் பொருத்தமான உடல்மொழியுடனும் வசன உச்சரிப்புகளுடனும் சண்டை, பாடல், நகைச்சுவை என எல்லாவற்றையும் செய்து படத்தைக் காப்பாற்றுகிறார் விஜய். நாயகி பூஜாஹெக்டேவுடனான காட்சிகளில் இளமை துள்ளுகிறது.
சண்டைப்படங்களில் நாயகிகளுக்கு எவ்வளவு வேலை இருக்குமோ அவ்வளவுதான் பூஜாஹெக்டேவுக்கு. அதிலும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கிறார்.
துணை தேசியபாதுகாப்பு ஆலோசகர் வேடத்தில் நடித்திருக்கிறார் இயக்குநர் செல்வராகவன். விஜய்யின் வீரதீர பராக்கிரமங்களைப் பறைசாற்றுவதே அவருக்கான வேலை. அதைச் சரியாகச் செய்திருக்கிறார்.
நகைச்சுவைக்காக விடிவிகணேஷ், யோகிபாபு, கிங்ஸ்லி ஆகியோர் இருக்கிறார்கள். அங்கங்கே சிரிக்க வைக்கிறார்கள். வில்லன்களாக நடித்திருக்கும் ஷாஜி, அன்குர்விகல், லில்லிபுட்பரூக்கி உள்ளிட்டோர் தங்கள் வேடங்களுக்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
மனோஜ்பரமஹம்சாவின் ஒளிப்பதிவு கதைக்களத்துக்குத் தேவையான அளவு அமைந்திருக்கிறது.
அனிருத்தின் இசையில் பாடல்கள் புரியவில்லையென்றாலும் துள்ளல் ரகம். ஆட்டம்போட வைக்கிறது. பின்னணி இசை வழக்கம்போல் இரைச்சல்.
சண்டைப்பயிற்சியாளர் அன்பறிவ், நம்ப முடிகிற மாதிரி சண்டைக்காட்சிகளை அமைத்திருக்கலாம். கற்பனை என்றாலும் ஒரு அளவு வேண்டாமா?
இந்தியில மொழிபெயர்க்க முடியாது தமிழ் கத்துக்கோ, இராமா காமா என்பது போன்ற வசனங்கள், காவி கிழிப்பு, இராமச்சந்திரன் என்கிற பெயர் கொண்டவர் துரோகம் செய்கிறார் என்பது உட்பட பல இடங்களில் இந்துத்துவாவினரை எரிச்சலடைய வைத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன்.
பாகிஸ்தான் தீவிரவாதி என்கிற தேய்ந்துபோன சொல்லைத் தூக்கிக்கொண்டுவராமல் புதிதாக சிந்தித்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும். ஷாஜியின் வேடத்தை வைத்துக் கொண்டு அரசியல்வாதிகளைச் சகட்டுமேனிக்கு விமர்சனம் செய்திருக்கிறார்கள்.. மொத்தத்தில் ‘பீஸ்ட்’ கொஞ்சம் காஸ்ட்லியான வேஸ்ட்.