ரொம்ப அரிதான ஒரு மனிதப் பிறவியாய் அமேசான் காட்டுப்பகுதியில் பிறந்து பல்வேறு நாடுகளில் அல்லோலகல்லோலப்பட்டு கடைசியாய் தமிழ்நாடு வந்து சேரும் ஒரு அப்பாவி இளைஞனின் கதைதான் இந்த ‘குலுகுலு’. அதாவது கூகுள் என்பது மருவி ‘குலுகுலு’. கொஞ்சம் குழப்பமாய் இருக்கிறதா? டார்க் காமெடிப் படம் என்றால் அப்படித்தான் இருக்கும். காட்சி புரியாவிட்டாலும் சிரித்துவிட வேண்டும். இல்லையென்றால் தியேட்டரில் பக்கத்து சீட்டில் இருப்பவர்கள் உங்களைப் பார்த்துச் சிரிப்பார்கள்.
சரி கதைக்கு வருவோம்.
உதவி என்று யார் கேட்டால் கண்ணை மூடி களத்தில் இறங்கும் சந்தானத்திடம் தங்கள் நண்பனை ஒரு கூட்டம் கடத்திவிட்டது மீட்டுக் கொடுங்கள் என்று சிலர் அவரை அணுகுகிறார்கள். சந்தானமும் கடத்தப்பட்டவரை மீட்கப் புறப்படுகிறார்.
அதன்பின் என்னவாகிறது? என்பதை இருண்மை கலந்த நகைச்சுவையுடன் அதாவது டார்க் காமெடியுடன் சொல்லிச் செல்லும் படம்தான் குலுகுலு.
அழுக்கான உடை, அமைதியான முகம், அதீத புத்திசாலித்தனம் என சந்தானம் இதுவரை ஏற்காத வேடம். எதற்கெடுத்தாலும் எதிர்ப்பேச்சு பேசாத இந்த சந்தானமும் ஈர்க்கிறார். அதாவது இதுவரை வந்த படங்களில் எல்லா கேரக்டர்களுக்கும் சளைக்காமல் கவுண்டர் டயலாக்குகள் கொடுத்து வந்த சந்தானத்தை என் கவுண்டர் பண்ணிவிட்டு புத்தம் புதுசாய் ஒரு சந்தானத்தை இப்படத்தில் காட்டியிருக்கிறார் இயக்குநர்.
கடத்தப்பட்டவரின் நண்பராக வருகிறார் நமீதாகிருஷ்ணமூர்த்தி.ஆண்களை மட்டுமே வைத்து படத்தை நகர்த்தினால் போரடிக்கும் என அவரையும் கோர்த்துவிட்டிருக்கிறார் இயக்குநர். இவருக்குப் பதில் இன்னொரு பையனையே போட்டிருக்கலாம் என்று தோணினால் நண்பேண்டா.
இன்னொரு நாயகி அதுல்யாசந்திரா. மடில்டா எனும் வெளிநாட்டுப் பெண்ணாக வருகிறார். பல்லாயிரம்கோடி சொத்துகள் உள்ள குடும்பங்களில் உள்ள சிக்கல்களை அம்பலப்படுத்தும் வேடம் அவருக்கு.அப்படிப்பட்டவர் 500 ரூபாய் நோட்டை டாய்லெட்டுக்குக் கொடுத்துவிட்டு, அஞ்சு ரூபாய் சில்லரைக் காசுக்காக அதே டாய்லெட்டின் வாசலில் அமர்வதெல்லாம் அபார டார்க் காமெடி.
பிரதீப்ராவத்,பிபின், தீனா உள்ளிட்டோருக்கு வில்லன் வேடம். வழக்கமான தமிழ்த்திரைப்பட வில்லன்கள் போல் படம் நெடுக துப்பாக்கியும் கையுமாய் துள்ளிக் கொண்டேயிருக்கிறார்கள்.
ஜார்ஜ்மரியம் டிஎஸ்ஆர் உள்ளிட்ட கடத்தல் கூட்டத்தை ஈழத்தமிழர்களாகக் காட்டியிருக்கிறார்கள். அதற்கான குறியீடு புரியவில்லை.
ஒளிப்பதிவாளர் விஜய்கார்த்திக் கண்ணன் இயக்குநரின் இருண்மை எண்ணத்துக்கேற்ப அருண்மையாய் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.
சந்தோஷ்நாராயணன் இசையில் பாடல்கள் மிகமிக விநோதமாக இருக்கின்றன. திடீர் திடீரென பதறவைக்கவும் செய்கின்றன.
உலகில் சுமார் 700 பேர் மட்டும் பேசும் மொழிக்குச் சொந்தக்காரன், நாடிழந்தவன் என ஒரு ஆழமான கதாபாத்திரத்தைச் சந்தானத்துக்குக் கொடுத்து அதன்மூலம் பல வலிகளைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ரத்னகுமார்.
ஈழத்தமிழர்களை கொஞ்சமும் மூளையில்லாத கடத்தல்காரர்களாகக் காட்டிக் கொச்சைப்படுத்தியிருக்கிறாரே என்று துவக்கத்தில் ஏற்படும் ஆத்திரத்தை பட்த்தின் பிற்பகுதியில் சரி செய்கிறார்.
பப்ஜி போன்ற இணைய விளையாட்டுகளின் ஆபத்தை நகைச்சுவை கலந்து சொல்லியிருப்பது ஒரு ஆறுதலான சமாச்சாரம்.
வழக்கமான லவுட் ஸ்பீக்கர் சந்தானத்தை அடக்கி வாசிக்கவைத்திருப்பதால், பழைய சந்தானத்தை அவ்வளவாக ரசிக்காதவர்கள் இந்த குலுகுலு சந்தானத்தை ரசிக்க வாய்ப்புள்ளது.