சினிமாவுக்காக காம்ப்ரமைஸ் செய்துகொள்ளவேண்டிய தர்மசங்கடங்களை தவிர்த்துவிட்டு சுதந்திரமாக கதை சொல்ல வாய்த்திருக்கும் ஒரு அற்புத வாய்ப்புதான் ஓ.டி.டிக்கான பிரத்யேக படங்களும், வெப் சீரியல்களும். அந்த வகையறா வெப் சீரியல்தான் இந்த ‘பேப்பர் ராக்கெட்’. கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கிறார்.

அப்பாவின் திடீர் இழப்பைத் தாங்கவியலாமல் மனநெருக்கடிக்கு ஆளாகும் நாயகன் காளிதாஸ் ஜெயராம், மனநல மருத்துவர் பூர்ணிமா பாக்யராஜை சந்திக்கிறார். அங்கு அவரைப் போல சிகிச்சைக்கு வந்திருக்கும் நாயகி தான்யா ரவிச்சந்திரன், ரேணுகா,கருணாகரன், நிர்மல் பாலாழி, கெளரி கிஷன் ஆகியோரோடு நெருங்கிப்பழகும் வாய்ப்பு கிட்டுகிறது.

ஆளுக்கொரு பிரச்சினைகளில் சிக்கித்தவிக்கும் அவர்கள் அனைவரும் சேர்ந்து ஒரு பயணம் போகிறார்கள்.பயணம் எங்கே? அந்தப் பயணத்தில் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதை செல்லுலாய்ட் கவிதையாகச் சொல்லியிருக்கிறார்கள்.

நாயகன் காளிதாஸ் ஜெயராமுக்கு நல்ல வேடம். அலட்டல் இல்லாத நடிப்பால் கவனம் ஈர்க்கிறார்.

தான்யா ரவிச்சந்திரனுக்கு வரும் அதீத கோபம்தான் நோயே. அதன் நதிமூலம் பழையதுதான் என்றாலும் இன்றும் தொடர்வதுதான். அவருடைய கோபத்தை மூலதனமாகக் கொண்டு ஆண்வர்க்கத்தின் மண்டையை உடைக்கிறார்கள், முகத்தில் அறைகிறார்கள். அவரும் வேடத்துக்கேற்ப நன்றாக நடித்திருக்கிறார்.

ரேணுகாவின் கதாபாத்திரம் கொடுமையானது, ஆனால் அதையும் ரசித்துப் பார்க்கும்படி வடிவமைத்ததும் அதற்கேற்ப அவர் வழக்கம்போல் வாயாடுவதும் ஆறுதல்.

கெளரி கிஷனின் சிக்கல் கொடூரமானது, இதுபோல் யாருக்கும் எப்போதும் நேர்ந்துவிடக்கூடாது என்று எண்ண வைக்கிற சிக்கல்.அதையும் புன்னகையோடு அவர் சொல்லுகிற நேரமெல்லாம் கண்கள் குளமாகின்றன.

நிர்மல் பாலாழியின் பாத்திரமும் ஏற்றுகொள்ளவியலாதது. ஆனால் அதில் அவருடைய வசன உச்சரிப்புகளும் உடல்மொழியும் நம்மைச் சிரிக்க வைத்துக்கொண்டேயிருக்கின்றன. முன்னாள் காதலியை அவர் சந்திக்கும் காட்சிகள் குட்டி ஆட்டோகிராஃப்.

கருணாகரன் கதாபாத்திரம் வித்தியாசமானது. அன்றாட வாழ்வின் எந்தச் சிக்கலும் இல்லாத அவருக்கு எல்லாமே சிக்கல்தான். நேர்த்தியான நடிப்பின் மூலம் எல்லோரும் வெறுக்க வேண்டிய கதாபாத்திரத்தை இரசிக்க வைத்திருக்கிறார்.

தொடரின் ஆதாரமாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறார் நாயகனின் அப்பா நாகிநீடு.அவரை வைத்து அன்பு அறம் ஆகியனவற்றை அழகாகப் போதித்திருக்கிறார்கள். கதையின் அடிநாதமும் அதுவே என்பதால் தொடர்ந்து ரசிக்கமுடிகிறது.

காளிவெங்கட், சின்னிஜெயந்த்,ஜிஎம்,குமார்,அபிஷேக், பிரியதர்ஷினி உட்பட ஏராளமானோர் இருக்கிறார்கள்.எல்லோரும் ஏதோவொரு நல்லதைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறார்கள்.

தொடரின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதனின் பார்வையில் நாம் பார்த்த திருநெல்வேலி, மார்த்தாண்டம், காரைக்குடி மட்டுமின்றி சென்னை கூடப் புதிதாகத் தெரிகின்றது. நாயகி தான்யா காட்டில் சேகரிக்கும் பூக்களை நிச்சயம் இந்த ரிச்சர்ட்.எம்.நாதனுக்குத்தான் கொடுக்கவேண்டும்.

சைமன் கே கிங், தரன்குமார், வேத்சங்கர் ஆகியோர் இசையமைத்திருக்கிறார்கள். சித்ஸ்ரீராமின் பாடல் உருகவைக்கிறது. ரம்யாநம்பீசன் பாடல் ரசனை. சுந்தரி ரகளை.

லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பு தொடரை மிக இலகுவாக நகர்த்திச் சென்று கோண்டேயிருக்கிறது.

எழுதி இயக்கியிருக்கும் கிருத்திகா உதயநிதி, மனித உணர்வுகளுக்குள் பயணப்பட்டிருக்கிறார். 

ஒவ்வொருவர் சிக்கலையும் களைந்து கொண்டே வரும்போது உயர்ந்து கொண்டேயிருக்கிறார்.

கருணாகரன் வேடத்தை வைத்துக் கொண்டு மிக ஆழமாகச் சிந்தித்திருக்கிறார். ஆனால் எளிமையாக விளக்கியிருக்கிறார். 

நான் உங்கள்மேல் மழையாய்ப் பொழிவேன் என்று ரேணுகா சொல்வதும் அதுவே இறுதிக்காட்சியாக இருப்பதும் சிலிர்ப்பு.

இந்த அருமையான படைப்பின் மூலம் உதயநிதியின் மனைவி என்கிற அடையாளம் களைந்து ஒரு தனித்துவம் மிக்க இயக்குநராய் மிளிர்கிறார் கிருத்திகா.

 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This will close in 0 seconds