தமிழ்நாட்டில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்துவருகிறது விஜய் தொலைக்காட்சி. தொடக்கத்தில் வெறும் விஜய்யாக இருந்தது. ஸ்டார் குழுமம் அந்தத் தொலைக்காட்சியை வாங்கியவுடன் ஸ்டார் விஜய் ஆனது. அதன்பின் அதை உலக அளவில் புகழ்பெற்ற டிஸ்னி நிறுவனம் கையகப்படுத்தியது.
விஜய் தொலைக்காட்சி மற்றும் ஹாட்ஸ்டார் இணையதளம் ஆகியனவற்றை வெற்றிகரமாக நடத்திவரும் டிஸ்னி நிறுவனம், இப்போது அதிரடியாக விஜய் தொலைக்காட்சியை விற்பனை செய்திருக்கிறது.
ஹாட்ஸ்டார் தளத்தை வைத்துக் கொண்டு தொலைக்காட்சியை மட்டும் விற்பனை செய்திருக்கிறார்கள்.
டிஸ்னி நிறுவனம் விஜய் தொலைக்காட்சியை விற்கும் முடிவை அறிவித்ததும் அதை வாங்க மூன்று முன்னணி நிறுவனங்கள் களத்தில் இறங்கின.
அவற்றில் முதலில் இருந்தது அம்பானியின் ஜியோ நிறுவனம். அந்நிறுவனம் இந்திய ஒன்றியமெங்கும் ஓடிடி தளத்தை நிறுவும் வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. இந்நேரத்தில் விஜய் விற்பனைக்கு என்றவுடன் ஒட்டுமொத்தமாக அதைக் கைப்பற்றும் முயற்சியில் இறங்கியது.
தொடக்கத்தில் ஜியோ நிறுவனம், நீ பாதி நான் பாதி என்று பகிர்ந்து விஜய் தொலைக்காட்சியை நடத்தலாம் என்று டிஸ்னி நிறுவனத்திடம் பேசத் தொடங்கியிருக்கிறது. ஆனால் ஜியோ எதிர்பாராத வண்ணம் மேலும் இருவர் போட்டிக்கு வந்துவிட்டதால் மொத்தமாக வாங்கும் முடிவெடுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அடுத்ததாக இந்தியஒன்றியத்தின் புகழ்பெற்ற தொழில்நிறுவனமான டாடா நிறுவனமும் இந்தத் துறையில் இறங்க முடிவெடுத்து விஜய் தொலைக்காட்சியை வாங்க முன்வந்தது.
இவற்றோடு சோனி நிறுவனமும் விஜய் தொலைக்காட்சியை வாங்க முடிவெடுத்து பேச்சுவார்த்தை நடத்திவந்தது.
இவை மட்டுமின்றி சன் தொலைக்காட்சி நிறுவனமும் விஜய் தொலைக்காட்சியை வாங்க முயன்றது.
நான்கு நிறுவனங்களில் இப்போது, ஜியோ நிறுவனம் விஜய் தொலைக்காட்சியை வாங்கிவிட்டதாம். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவடைந்து ஒப்பந்தம் எழுதும் வேலைகள் தொடங்கிவிட்டன என்கிறார்கள்.
விஜய் தொலைக்காட்சியின் விலை சுமார் 3 பில்லியன் டாலர் என்று சொல்லப்படுகிறது.
ஏற்கெனவே, கலர்ஸ் தொலைக்காட்சியை வைத்திருக்கும் ஜியோ நிறுவனம் இப்போது விஜய்யையும் கைப்பற்றியிருக்கிறது.
இதனால் படிப்படியாக அத்தொலைக்காட்சியில் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.