ராமன் பெயரை களங்கப்படுத்திவிட்டார்கள், இந்துக்களின் மனம் புண்பட்டு விட்டது என அவ்வப்போது சர்ச்சைகள் எழுகின்றன.

ராமனைப்பற்றி டாக்டர் அம்பேத்கர் என்ன கூறுகிறார்?
**************
ஒவ்வொரு பகுத்தறிவாளர்களும் தெரிந்து வைத்திருக்க வேண்டிய விஷயம் இது.

🔹️ராமராஜ்ஜியம் அமைக்க வேண்டும் என அரசியல் நடந்து கொண்டிருக்கும் இந்த சூழலில், அந்த ராமனைப்பற்றி அறிந்து வைத்திருக்க வேண்டியது ஒவ்வொரு இந்திய குடிமகனின் கடமையும் கூட.

ராமன் என்னும் கதாபாத்திரத்தை நாம் ராமாயணம் மூலம் தான் அறிகிறோம்.

ராமாயணம் உண்மையாக இருந்தால் தான் ராமன் உண்மையாகிறான்.

ராமாயணத்தில் எத்தனையோ உள்ளன. அதில் வால்மீகி ராமாயணம் தான் நாம் ஆதாரத்திற்காக எடுத்துக்கொள்வது.

எனவே வால்மீகி ராமாயணத்திலிருந்து கேட்கப்படும் பின்வரும் இந்த கேள்விகளுக்கு, பகுத்தறிவுக்கேற்ற பதில்கள் அளித்தால், ராமாயணத்தை போற்றுபவர்களின் வாதத்தையும், ராமனை போற்றுபவர்களின் வாதத்தையும் பகுத்தறிவுள்ள மனிதர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

🍁1. தசரதனுக்கு வெகு காலம் குழந்தை பாக்கியம் இல்லையென்று, “ஷ்ருங்க்” என்னும் பிராமணரை அழைத்து, புத்ரேஷ்டி யாகம் செய்கிறான்.

அந்த பிராமணர் அளித்த பிண்டத்தை தின்ற பிறகு தசரதனின் மூன்று மனைவிகளும் கர்ப்பமுறுகிறார்கள்.

அதில் கெளசல்யாவிற்கு பிண்டம் மூலம் பிறந்தவன் தான் ராமன்.

இவ்வாறு ராமனின் பிறப்பே பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டதாகிறது.

எப்படி ராமாயணத்தை நம்ப முடியும்? ராமனை நம்ப முடியும்?

பகுத்தறிவுள்ள பதில் ஏதேனும் இருந்தால் தருக.

இல்லையேல் ராமனையும் ராமாயணத்தையும் மேற்கோள் காட்டுவதை தவிர்க.

இல்லையில்லை நான் ராமாயணத்தில் உள்ள நல்ல விஷயங்களை மட்டும் தான் சொல்கிறேன் என சொல்வதாக இருந்தால்(?!), அந்த நல்ல விஷயங்களை மட்டும், ராமன் பேரையும் ராமாயணம் பேரையும் சொல்லாமல் தருக.

இப்படி நல்ல விஷயங்களை தர வேண்டும் என்றால், நம்மிடமே நிறைய இலக்கியங்களும் தத்துவங்களும் உள்ளன.

ஒரு குப்பையிலிருந்து அசிங்கத்தை விலக்கி விட்டு பொறுக்கி எடுக்க வேண்டிய அவசியமில்லை.

🍁2. ராமன் விஷ்னுவின் அவதாரமாக தசரதனுக்கு பிறப்பதாக முடிவெடுத்து விட்டார். அவ்வாறு பூலோக அவதாரம் எடுத்த பின்னர், விஷ்னுவிற்கு பலம் வாய்ந்த படையினர் இருக்க வேண்டும். ஆனால் அப்படி யாரும் ராமாவதாரம் எடுக்கும்போது விஷ்னுவிற்கு இல்லை.

எனவே, பிரம்மா தேவர்களை வைத்து, தேவலோக பாலியல் தொழிலாளர்களான அப்சராக்களை புணர்ந்தும், யக்‌ஷ மன்னனின் மற்றும் நாகர்களின் கல்யாணமாகாத பெண்களை புணர்ந்தும், மேலும் ரூக்‌ஷ, கந்தார்வ, வித்யாதர் மற்றும் வாணர் குல திருமணமான பெண்களையும் புணர்ந்து மிக வீரமான ஆண் குழந்தைகளை பெற்றெடுத்து, ராமனுக்கு ஆதரவாக செயல்பட உருவாக்கினார் என்கிறது வால்மீகி ராமாயணம்.

ராமனுடைய பிறப்பே கேள்விக்குறியாக இருக்க, அவனது ஆதரவாளர்களின் பிறப்பும் இவ்வாறாகத்தான் வால்மீகி ராமாயணத்தில் விவரிக்கப்படுகிறது.

பகுத்தறிவுள்ளவர்கள் யாரும் இந்த கதையை ஏற்றுக்கொள்வார்களா?

🍁3. புத்த ராமாயணத்தில், சீதை ராமனுடைய தங்கை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆரிய கலாச்சாரத்தில், அண்ணன் தங்கை திருமணம் அனுமதிக்கப்பட்ட வேத காலம் அது. எனவே அதில் எதுவும் ஆச்சரியமில்லை.

ஆனால், வால்மீகி ராமாயணம் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.

சீதை ஜனகருடைய வளர்ப்பு மகள் என சொல்கிறது.

ஒரு விவசாயி தன் நிலத்தை உழும்போது, மண்ணில் கிடந்த குழந்தையை ஜனக மன்னரிடம் கொடுப்பதாகவும், மன்னர் வளர்க்கும் மகள் தான் சீதை எனவும் சொல்கிறது வால்மீகி ராமாயணம்.

இதைத்தான் பூமாதேவியின் மகள் என நம்புகின்றனர்.

பூமி இப்படி குழந்தை பெற்றுக்கொள்ளுமா?

இது பகுத்தறிவுக்கு ஏற்றதாக உள்ளதா?

🍁️4. ராமன் ஏக பத்தினி விரதன் என பரவலாக கூறப்படுகிறது.

ஆனால் வால்மீகி ராமாயணம், ‘தந்தை’ தசரதன் போலவே, ராமனுக்கும் பல மனைவிகள் இருந்தததாகவும் பல அந்தப்புரத்து பெண்கள் இருந்ததாகவும் குறிப்பிடுகிறது.

பின் எப்படி ஏக பத்தினி விரதன் என ராமன் போற்றப்படுகிறார்?

🍁5. கிஷ்கிந்தாவை தலைநகராக கொண்டு, வாணர்குலம் ஆண்டு வந்தது.

அந்த வாணர்குல மன்னராக வாலி ஆண்டு வந்தான். அவனுடைய இளைய சகோதரன் தான் சுக்கிரீவன்.

அந்த சமயத்தில், வாணர் குலம் மீது படையெடுத்து வந்த மாயாவியுடன் போர் நடந்தது.

மாயாவியை விரட்டிக்கொண்டு வாலியும் சுக்ரீவனும் செல்ல, கடைசியில் ஒரு குகைக்குள் சென்ற மாயாவியை வாலி பின் தொடர்ந்து செல்கிறான். சுக்ரீவனை குகை வாயிலில் இருக்க சொல்லிவிட்டு செல்கிறான்.

பின்னர் குகைக்குள்ளிருந்து இரத்த வெள்ளம் வெளிவரவே, வாலி இறந்து விட்டதாக நினைத்து சுக்ரீவன் கிஷ்கிந்தா சென்று தன்னை மன்னனாக முடிசூட்டிக்கொள்கிறான்.
ஹனுமானை தன் மந்திரியாக்கிக்கொள்கிறான்.

ஆனால், குகைக்குள் இறந்தது வாலி அல்ல. மாயாவி!

வெளியே வந்த வாலி, தன் சகோதரனை காணாததால் நாட்டுக்கு திரும்பிய பிறகுதான் தெரிந்து கொண்டான் சுக்ரீவன் தன்னை மன்னனாக முடி சூட்டிக்கொண்டதை.

அவனை கீழே இறக்கி விட்டு தான் மீண்டும் மன்னனாகிறான்.

சுக்ரீவனுக்கு தன் சகோதரன் மீது பகை உண்டாகிறது. நாடு கடத்தப்பட்ட சுக்ரீவன் மற்றும் ஹனுமான், காட்டுக்குள் சுற்றித்திரியும்போது தான், சீதையை தேடி அலையும் இராமனை சந்திக்கிறான்.

சீதைய மீட்க உதவினால், வாலியை கொல்ல உதவுவதாக இருவருக்கும் ஒப்பந்தம் ஏற்படுகிறது.

வாலியும் சுக்ரீவனும் மல்யுத்தம் செய்யும்போது மறைந்திருந்து வாலியை ராமன் கொல்கிறான்.

இது தான் வால்மீகி ராமாயணத்தின் கதை.

இறந்தது யார் என்பதை உறுதிப்படுத்தாமல் முடிசூட்டிக்கொண்டது சுக்ரீவனுடைய தவறு.

அப்படியே வாலி இறந்திருந்தாலும், வாணர்குல வழக்கப்படி, வாலியின் மகன் அங்கதன் தான் மன்னனாக முடிசூட்டப்பட்டிருக்க வேண்டும்.

இங்கு நியாயம் யார் பக்கம் உள்ளது?

கடவுளாக வணங்கப்படும் தகுதி உள்ள ஒரு நபர் நியாயத்தின் பக்கம் நின்றார் என்றல்லவா இலக்கியம் இருக்க வேண்டும்?

🍁6. வாலியும் சுக்ரீவனும் மல்யுத்தம் செய்யும்போது, மறைந்திருந்து அம்பெய்தி வாலியை கொன்றதாக ராமாயணம் சொல்கிறது.

நிராயுதபாணியை கொல்வது போர் தர்மமா?

கடவுளாக வணங்கப்படுபவர் தர்மத்தின் பக்கம் இருந்ததாக அல்லவா இலக்கியங்கள் குறிப்பிட வேண்டும்?

ஏகலைவனின் கட்டை விரல் துண்டிக்கப்பட்டதையும், கண்ணப்பனாரின் கண்கள் பிடுங்கப்பட்டதையும், துருவன் நட்சத்திரமானதையும், நந்தன் தீக்கிரையானதையும், பிராமணப்புலவரை எதிர்த்துக்கேள்வி கேட்டதற்காக எரிக்கப்பட்ட நக்கீரன் கதையையும், ஜோதியான வள்ளலாரையும், என்றும் பதினாறான மார்க்கண்டேயன் பின்னாலும், இப்படி ஒவ்வொரு கதையிலும் கடவுள் முலாம் பூசப்பட்டு கசப்பான உண்மைகள் மறைக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் அவற்றை சப்புக்கொட்டிக்கொண்டு கேட்டுக்கொண்டிருக்கிறோம்.

பகுத்தறிவு என்பதே ஒரு விஷயத்தை கூர்ந்து பார்த்து அதன் உண்மையை அறிவது தானே?

இங்கு தானே மனிதனுக்கும் விலங்குகளுக்கும் வேறுபாடு வருகிறது?

ஆனால் நம் பகுத்தறிவு மழுங்கடிக்கக்படுவதை, மனித அடையாளத்தை இழப்பதை, நாமே ரசிக்கிறோமே! எப்படி அது சாத்தியம்?
இது தான் கடவுளின் ரகசியம்.

🍁7. இலங்கையிலும் இதே டெக்னிக் தான்.

இரு சகோதரர்களிடையே பதவி சண்டையை உருவாக்கி வென்ற கதை தான்.

விபீஷணனை அரசனாக்க ஆசை காட்டி, ராவணனையும் அவனுடைய மகன் இந்திரஜித்தையும் கொன்ற பிறகு, விபீஷணனை மன்னராக்கிய பிறகு, ஹனுமான் மூலம் சீதைக்கு தகவல் சொல்லியனுப்புகிறான்.

சீதை அழைத்து வரப்பட்டதும், ராமன் கூறியவையாக வால்மீகி ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டவை:

“ராவணனுக்கு எதிரான போரில் நான் அடைந்த வெற்றிக்கான பரிசு தான் நீ!

உன்னை கடத்தியதன் மூலம் என்னுடைய வீரத்திற்கு ராவணன் விடுத்த சவாலை நான் வெற்றிகரமாக எதிர்கொண்டு விட்டேன்.

என்னுடைய அவமானத்தை போக்கவே நான் இங்கு வந்தேனேயொழிய, உனக்காக அல்ல!

பத்து மாதமாக தன் கட்டுப்பாட்டில் இருக்கும் உன்னைப்போன்ற அழகான பெண்ணை தொடாமல் விட்டு வைத்திருப்பான் அந்த ராவணன் என நான் நம்ப தயாராயில்லை.

உன்னை பார்ப்பதற்கே எனக்கு அருவறுப்பாக இருக்கிறது.

இனி நீ உன் விருப்பம் போல் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம். எனக்கும் உனக்கும் எந்த சம்மந்தமுமில்லை.

தன் கற்பின் மீது சந்தேகம் கொண்டு தன்னை ராமன் நிராகரிக்கிறான் என்பதை அறிந்த சீதை, நெருப்பில் பாய்ந்து தன்னை நிரூபிக்கிறாள்.

அதன் பிறகே ராமன், சீதையை அயோத்திக்கு அழைத்து வருகிறான்.

இது தான் போற்றுதலுக்குரிய புருஷ லட்சணமா?

🍁8. அயோத்தியில் ராமன் முடி சூட்டிக்கொள்கிறான். சீதை ராணியாகிறாள். சிறிது காலம் கழித்து கர்ப்பமாகிறாள்.

அந்த கரு மீது நாட்டு மக்களுக்கு சந்தேகம் வருகிறது. சீதையைப்பற்றி மக்கள் அவதூறு கூறுவதாகவும், கருவிற்கு காரணம் ராவணந்தான் என மக்கள் பேசிக்கொள்வதாகவும், அரசவை விகடகவி பத்ரன் வந்து ராமனிடம் கூறுகிறார்.

இதனைத்தொடர்ந்து, இந்த களங்கத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள, கர்ப்பிணியாக இருக்கும் சீதையை யாருக்கும் தெரியாமல் காட்டுக்குள் விட்டு விடுமாறு லக்‌ஷ்மணனுக்கு உத்தரவு பிறப்பித்து அனுப்பிவிடுகிறான்.

தேரோட்டி சுமந்தா தேரை ஓட்ட, லக்‌ஷ்மணன் சீதைய அழைத்து க்கொண்டு கங்கையாற்றின் கரையில் உள்ள ஒரு ஆசிரமத்திற்கு அருகில் வனத்தில் விட்டு விட்டு, சீதையின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டு, ராமனுடைய உத்தரவை கூறுகிறான்.

அந்த ஆசிரமத்தில் வால்மீகியிடம் அடைக்கலம் புகுந்தாள் சீதை. இப்படியாகத்தான் ராமனின் (புருஷ)”லட்சணம்” வால்மீகிக்கு தெரிகிறது.

இதில் போற்றுதலுக்குரிய குணம் எதுவும் இருக்கிறதா?

🍁9. லவ, குஷ என இரட்டை க்குழந்தைகள் பிறந்ததும் வால்மீகி ஆசிரமத்திலேயே வளர்கின்றனர். (தன் தந்தை யாரென தெரியாமல்).

ஆனால் ராமனின் கதையை பாட்டாக சொல்லிக்கொடுக்கிறார் வால்மீகி. அந்த குழந்தைகளும் அதனை பாடுகின்றன.

பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து, ஒரு நாள் ராமன் நடத்தும் யாகத்திற்கு, இரு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு வருகிறார் வால்மீகி.

குழந்தைகள் ராமனுடைய கதையை பாடியதும் ராமனின் கவனம் அவர்கள் மீது படுகிறது.

அவர்கள் யாரென்பதை வால்மீகி ராமனிடம் கூறுகிறார்.

குழந்தைகளின் தோற்றத்தை பார்த்ததும் தெரிந்து விடுகிறது அவை ராவணனின் குழந்தைகள் அல்ல. ராமனுடையவை தான் என.

குழந்தைகளை அழைத்து, அவர்களிடம் உங்கள் தாய் உத்தமியாக இருந்தால் இந்த அவையில் வந்து நிரூபித்து தன் களங்கத்தை போக்கிக்கொள்ளுமாறு வால்மீகியிடம் சொல்லுங்கள் என சொல்கிறான் ராமன்.

(இதை குழந்தைகளிடம் தான் சொல்ல வேண்டுமா?)

சீதை மறுபடியும் அவைக்கு அழைத்து வரப்படுகிறார் அக்னிபரிட்சைக்காக.

(இது தான் அவளை உத்தமி என நிரூபிக்கும் என்றால், அதை காட்டுக்குள் விடுவதற்கு முன்னரேயே செய்யச்சொல்லியிருக்கலாமே?!)

மீண்டும் மூன்றாவது முறையாக பழி சுமத்தப்படுவதை விரும்பாத சீதை, ராமனுடன் வாழ்வதை விட சாவதே மேல் என முடிவு செய்து, தான் பத்தினி என்பது உண்மையானால், பூமித்தாய் தன்னை விழுங்கிக்கொள்ளட்டும் என உரைக்க, பூமி பிளந்து சீதையை விழுங்கிவிடுகிறது.

இதில் எங்கு ராமன் மீது உன்னதத்தன்மை வருகிறது?

🍁10. ராமன் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் நடந்து கொண்ட விதத்தினையும் வால்மீகி பதிவு செய்துள்ளார்.

ஒரு நாளின் முற்பகலில் சடங்குகளிலும் வழிபாட்டுக்களிலும் ஈடுபட்டிருக்கிறார். பிற்பகலில், அரசவை கோமாளியுடனோ அல்லது அசோகவனத்திலுள்ள அந்தப்புரத்திலோ தினந்தோறும் காலத்தை கழித்துள்ளார்.

ராமனுக்கு மதுப்பழக்கம் இருந்ததாகவும், இறைச்சி மற்றும் அறுசுவை உணவுகளோடு, அந்தப்புரத்தில் பல பெண்களோடு நடனமாடுவதை தன் வழக்கமாக வைத்திருந்தார் என்றும் வால்மீகி குறிப்பிட்டுள்ளார்.

புலால் உண்ணாத புரட்டாசி மாதத்திற்கும் ராமனுக்கும் என்ன சம்மந்தம்?

🍁11. ராமனுடைய ராஜ்ஜியத்தில் ஒரு முறை ஒரு பிராமணருடைய குழந்தை இறந்து விட்டது. குழந்தையின் உடலை எடுத்துக்கொண்டு வந்து, ராமனின் கோட்டை வாசலில் கிடத்தி வைத்த பிராமணர், ராமராஜ்ஜியத்தில் ஏதோ தவறு நடக்கிறது. அதனால் தான் ஒரு பிராமணரின் குழந்தை இறந்து விட்டது. இதற்கு ராமனே பொறுப்பேற்க வேண்டும். என் குழந்தை உயிர் பெறாமல் நான் இங்கிருந்து செல்ல மாட்டேன் என தர்ணா செய்துள்ளார்.

உடனே ராமன் தன்னுடைய அரசவை ஆலோசகர்களான ரிஷிக்களை கேட்க, அவர்கள் ராமனுடைய ராஜ்ஜியத்தில் எங்கேயோ ஒரு சூத்திரன் தவம் செய்கிறான் என்றும், அதுவே பிராமண குழந்தை இறப்பதற்கு காரணம் என்றும் கூறியுள்ளனர்.

இதற்கு தக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், ராமன் மீது தீராப்பழி வந்து சேரும் எனவும் எச்சரித்தார்கள்.

உடனே தன் ரதத்தில் ஏறி நாடெங்கும் அலைந்த ராமன், ஒரு வனப்பிரதேசத்தில் சம்பூகன் என்னும் சூத்திரன் கடுமையான தவத்தில் ஈடுபட்டிருப்பதை கண்டுள்ளான்.

சூத்திரர்களுக்கு தவம் செய்யும் உரிமை கிடையாது. உடனே தன் வாளால் சம்பூகனின் தலையை வெட்டி சாய்த்துள்ளான் ராமன்.

இது நடந்த வனத்திலிருந்து பல மைல் தூரம் இருக்கும் ராமனின் அரண்மனை வாயிலில் பிராமணனின் குழந்தை உயிர்பெற்று எழுந்தது.

வானத்து தேவர்கள் ராமன் மீது மலர் தூவி வாழ்த்தினர். பிராமணர்களுக்கு மட்டுமேயான தவம் செய்யும் உரிமையை தவறாக பயன்படுத்திய சூத்திரனுக்கு தகுந்த பாடம் புகட்டி பிராமண தர்மத்தை நிலை நாட்டியதற்காக அகஸ்தியர் ராமனை பாராட்டினார் என முடிக்கிறது வால்மீகி ராமாயணம்.
******&&&*******

இத்தகைய ராமராஜ்ஜியத்தை மீண்டும் கொண்டு வரத்தான் ராமநவமி கொண்டாடுகிறோமா?

ராமராஜ்ஜியத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டிற்கு சம்பூகர்களே தங்கள் தலையை நீட்டி வெட்ட சொல்லி சிலுப்பி க்கொண்டிருப்பது தான் வியப்பு.

இதற்காகவே ராமனை பாராட்டலாம்.

பின்குறிப்பு:
*****
மேலேயுள்ள அனைத்தும் டாக்டர்.அம்பேத்கர் எழுப்பிய கேள்விகள்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.