ஒரு கிராமம் அங்கு மதவேறுபாடுகளை மறந்து பாசமாகப் பழகும் மக்கள். தங்கள் சுயநலத்துக்காக அம்மக்களைப் பிரித்தாள நினைக்கும் அரசியல்கூட்டம்.அதனால் ஏற்படும் சிக்கல்கள். அவற்றின் முடிவு? ஆகியனதாம் லால்சலாம் படம்.

விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஆகிய இருவருக்கும் சம அளவிலான வாய்ப்பு. இருவருமே தங்கள் இருப்பை வெளிப்படுத்திவிடவேண்டும் என்கிற முனைப்புடன் நடித்திருக்கிறார்கள். விளையாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மனங்களில் வேறுபாடுகளும் வெறுப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து விருட்சமாவதைத் தங்கள் நடிப்பில் பிரதிபலித்திருக்கிறார்கள்.

விஷ்ணுவிஷாலுக்கு இணையராக நடித்திருக்கும் அனந்திகா சனில்குமாருக்கு ஒரு பாடல் மற்றும் சில காட்சிகள் மட்டும் கிடைத்திருக்கின்றன. தன்யாபாலகிருஷ்ணா வந்துபோகிறார்.

விஷ்ணுவிஷாலின் அம்மாவாக நடித்திருக்கிறார் ஜீவிதா.நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்தாலும் தோற்றத்திலும் நடிப்பிலும் பெரியமாற்றமில்லை.விக்ராந்தின் அம்மா, ரஜினிகாந்த்தின் மனைவி ஆகிய பொறுப்புகளை ஏற்று நடித்திருக்கும் நிரோஷாவும் நன்று.

செந்தில், தம்பிராமையா, மூணார் ரமேஷ் ஆகியோர் பலமும் பலவீனமுமாக இருக்கிறார்கள். விவேக்பிரசன்னாவுக்கு முக்கிய வேடம். அதை நன்றாகச் செய்து வெறுப்பைச் சம்பாதிக்கிறார்.

மட்டைப்பந்து விளையாட்டை உறுப்பாகக் கொண்ட கதை என்பதால், நிஜவீரர் கபில்தேவ் திரையில் வந்து வியப்பூட்டுகிறார்.

மொய்தீன்பாய் எனும் பெயருடன் சிறப்புத்தோற்றத்தில் நடித்திருக்கிறார் ரஜினிகாந்த்.அவர் வரும் காட்சிகளும் பேசும் வசனங்களும் வரவேற்புப் பெறுகின்றன.

விஷ்ணுரங்கசாமியின் ஒளிப்பதிவு, கிராமம், நகரம், விளையாட்டுக்களம் ஆகியனவற்றை ஒளியமைப்பு மற்றும் வண்னங்களிலும் வேறுபடுத்திக் காட்டி இரசிக்க வைத்திருக்கிறது.

ஏ.ஆர்.ரகுமானின் இசையில் ஜலாலி, தேர்த்திருவிழா,அன்பாளனே பாடல்கள் கேட்கலாம். சித்ஸ்ரீராமின் குரலில் கபிலனின் வரிகளில் வரும் ஏ புள்ள பாடல் இளைஞர்களுக்கு இதமாக அமைந்திருக்கிறது.

திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.தற்கால கட்டத்தில் பல்கிப்பெருகி தரையில் நடக்கும் அநீதிகளுக்கு எதிராகத் திரையில் களமாட முயன்றிருக்கிறார்.ரஜினிகாந்த்துக்கு மொய்தீன்பாய் எனும் வேடத்தைக் கொடுத்திருப்பதே கடும் எதிர்வினை.

விளையாட்டு மைதானத்தில் மதத்தைப் பற்றிப் பேசும்போது ரஜினிகாந்த் கூறும் அறிவுரை அங்கு பேசியவருக்கு மட்டுமன்று என்பது எல்லோருக்கும் புரிவதால் ஏகப்பட்ட வரவேற்பு.

சந்தனக்கூட்டுத் தேரில் அம்மனை பவனி வர வைத்திருப்பதன் மூலம் ரஜினிகாந்த்தும் ஐஸ்வர்யாரஜினிகாந்த்தும் சொல்லியிருக்கும் செய்தி ஆழமானது.திரைமொழியில் இருக்கும் சிற்சில குறைகளைத் தாண்டி படத்தில் பேசப்பட்டிருக்கும் இந்த நல்லிணக்கத்துக்காக இருவருக்கும் செவ்வணக்கம்.

– ஆநிரையன்

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.