வளைகுடா நாட்டிற்கு கேரளாவிலிருந்து வேலை தேடிச் சென்ற ஓர் இந்தியர் ஆடு, ஒட்டகங்களை மேய்க்கும் கொத்தடிமையாக மாற்றப்பட்டு அனுபவித்த துயரங்களைச் சுற்றி எழுதப்பட்ட மலையாள நாவலை அடிப்படையாகக் கொண்டு இப்படத்தை இயக்கி உள்ளார் ப்ளெஸ்ஸி.

கேரள மாநிலத்தின் கிராமம் ஒன்றில், தன் தாய் மற்றும் கருவுற்றிருக்கும் தன் மனைவி ஸைனுவுடன் வாழ்ந்து வருகிறார் நஜீப் முகமது . வறுமையிலிருந்து விடுபடவும், தன் குழந்தையின் எதிர்காலத்திற்காகவும்,  வீட்டை அடமானம் வைத்து, அப்பணத்தில் சவுதி அரேபியா நாட்டின் விசாவிற்கு ஏற்பாடு செய்கிறார்.

பல்லாயிரம் மலையாளிகள் போல கல்ஃப் மீதான பல கனவுகளோடு சவுதி அரேபியாவில் இறங்குகிறார் நஜீப். அரேபியர் ஒருவர் அவரை ஏமாற்றி, அழைத்துச் சென்று, நடு பாலைவனத்தில் ஆடுகளையும், ஒட்டகங்களையும் மேய்க்கும் அடிமையாக மாற்றுகிறார். உடலும், மனமும் ஒடுங்கிப் போன நஜீப், அந்த அடிமை சிறையிலிருந்தும், அனல் கக்கும் பாலைவனத்திலிருந்தும் எப்படித் தப்பித்தார் என்ற நீண்ட நெடிய போராட்டத்தைச் சமரசமின்றி சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர் ப்ளெஸ்ஸி.

கலைப் படைப்பாக திரைப்படத்தை எடுக்க இயக்குனர் முயன்றுள்ளார். திரைக் கதையமைப்பு மற்றும் அதிகமான நீளம் கொண்ட காட்சிகள் என்று சில குறைபாடுகள் வந்து படத்துடன் பார்வையாளர்கள் ஒன்ற முடியாமல் செய்துவிடுகின்றன.

மிகக் கடுமையாக உழைத்து, தனது தோற்றம் முதல் அனைத்தையும் வருத்தி பிரமாதமாக செய்திருக்கிறார் பிருதிவிராஜ் . பாலைவனத்தில் உடல் கறுத்து, நடக்க முடியாமல் நடக்கும் போதும், தப்பிக்கும்போது காட்டும் முனைப்பும் பிரிதிவிராஜின் நடிப்பு பிரமாதம்! இந்த ஆண்டு தேசிய விருதுக்கு போட்டி போடும் நடிப்பு இது. ஜிம்மி ஜீஸ் லூயிஸ் என்ற ஹாலிவுட் நடிகர் ஒரு அற்புதமான தேர்வு . மற்றும் அமலா பால் சில காட்சிகள் வந்தாலும் மனதில் நிற்கிறார் .

ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி, சுனில் என்று துறை வல்லுனர்கள் தங்கள் பங்கிற்கு படத்திற்கு மெருகேற்றியுள்ளனர். “பெரியோனே, ரஹ்மானே” என்ற ஏ.ஆர் ரஹ்மானின் இசையில் அமைந்த பாடல் மனதைத் தொடுகிறது வளைகுடாவின் பாலைவன வெப்பம் , கேரளாவின் குளிர்ச்சி இரண்டையும் அழகாகக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுனில். 

ஆனாலும் நாவலின் ஜீவ நாடியை திரைப்படம் பிரதிபலிக்கத் தவறியுள்ளதாகவே இருக்கிறது. நாவலை இயக்குவதில் இது போன்ற பிரச்சனைகள் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இருந்தாலும் இயக்குனரின் துணிவான, நேர்மையான இந்த முயற்சி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியதே.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.