நடிகர்கள் சூரி – சசிகுமார்- உன்னி முகுந்தன்-  ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் ‘கருடன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அப்போது தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர பிரபலங்களான மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் வெற்றிமாறன், தயாரிப்பாளர் அம்பேத்குமார் உள்ளிட்ட பலர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘கருடன்’ திரைப்படத்தில் சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, ரேவதி சர்மா, ரோஷினி ஹரி பிரியன், பிரிகிடா, துஷ்யந்த் ஜெயபிரகாஷ், மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் ஆர்தர் ஏ. வில்சன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் K.குமார் தயாரித்திருக்கிறார்.

மே 31 ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக வெளியீட்டு விழாவில் சூரி, சசிகுமார், சமுத்திரக்கனி,  தயாரிப்பாளர் K.குமார், இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார்,  துஷ்யந்த் ஜெயப்பிரகாஷ், மைம் கோபி, ரோஷினி ஹரி ப்ரியன், பிரிகிடா, ரேவதி ஷர்மா, ஒளிப்பதிவாளர் ஆர்தர் ஏ. வில்சன், கலை இயக்குநர் துரைராஜ், படத்தொகுப்பாளர் பிரதீப் ஈ. ராகவ், சண்டை பயிற்சி இயக்குநர் மகேஷ் மேத்யூ, திரைப்பட விநியோகிஸ்தர் பைவ் ஸ்டார் K. செந்தில், பாடலாசிரியர்கள் சினேகன் மற்றும் சூப்பர் சுப்பு உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

பாடலாசிரியர் சினேகன் பேசுகையில்,

‘இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் புதிதாக இருந்தது. இந்தத் திரைப்படத்தில் மூன்று பாடல்களை எழுதி இருக்கிறேன். பாடல்களை எழுதினாலும் இயக்குநரை நேரில் சந்திக்கவில்லை. தொலைபேசி மூலமாகவே உரையாடி இருக்கிறேன்.  

தற்போது திரையுலகில் பிரபலமாக இருக்கும் அனைத்து முன்னணி நட்சத்திர நடிகர்களுக்கும் நான் பாடல்கள் எழுதி இருக்கிறேன். இருப்பினும் நம்மில் ஒருவன் என்ற உணர்வை ஏற்படுத்தும் சில கதாநாயகர்களில் மண்ணின் மைந்தனான சூரியும் ஒருவர்.

அவருக்குள் இருந்த இதுபோன்ற ஆளுமை செலுத்தும் நடிப்புத் திறனை கண்டறிந்ததற்காகவும், தமிழ் சினிமாவில் ஹீரோக்களுக்கு என்றிருந்த வரைமுறையை உடைத்து எறிந்து, எங்கள் ஊர் திருவிழாவில், கூட்டத்தில் ஒருவராக.. எங்கள் ஊர் ஜனத்திரள்களில் ஒருவராக..  உலா வரும் ஒருவனை.. அவனுக்குள் இருக்கும் நாயக பிம்பத்தை ஹீரோவாக  திரையில் செதுக்கியதற்காக இயக்குநர் வெற்றிமாறனுக்கு இந்த தருணத்தில்  நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  வெற்றிமாறன் கொடுத்த வாய்ப்பை உணர்ந்து சூரியும் கடினமாக உழைத்திருக்கிறார்.‌ சூரியும் ஒவ்வொரு திரைப்படத்திலும் அவருக்குள் ஏற்பட்ட மாற்றத்தை காணும் போது வியக்க வைக்கிறார். அந்த வகையில் இந்தப் படத்தில் சூரிக்கு வாய்ப்பளித்த இயக்குநர் தயாரிப்பாளர் ஆகியோருக்கு சூரியின் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்

இன்று உலக சினிமா என்று வியந்து பாராட்டும் எந்த திரைப்படமும் பிரம்மாண்டத்தை பற்றி பேசுவதில்லை. நடிகர்களை பற்றி பேசுவதில்லை. உணர்வுகளைப் பற்றி பேசுகிறது. உண்மையை பேசுகிறது. வாழ்வியலை பேசுகிறது. எனவே உலக சினிமா என்பது நமக்கு தூரமாக இருக்கும் என்பதெல்லாம் இல்லை. நமக்கு வெகு அருகிலேயே இருக்கிறது. நம்மை சுற்றி நடப்பவைகளை.. நமக்கே தெரியாத விசயங்களை.. உணர்வுகளாக பிரதிபலிப்பது தான் உலக சினிமா. இதனை பூர்த்தி செய்யும் வகையில் சமீப காலமாக படைப்பாளிகள் தமிழ் சினிமாவில் உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். ஒப்பனைகளை கடந்து கற்பனைகளை கடந்து வாழ்வியலோடு கலந்து கைபிடித்து நடக்கத் தொடங்கி விட்டது. எனவே கருடன் போன்ற படங்களும், கருடனை படைத்த படைப்பாளிகளும் வெற்றி பெற வேண்டும். வெற்றி பெறும்.  ” என்றார்.

நடிகர் சமுத்திரக்கனி  பேசுகையில்,

” தம்பி சூரி நிறைய நல்ல மனிதர்களை சம்பாதித்திருக்கிறார். ஒவ்வொரு திரைப்படத்திலும் தலைமை கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பவர்களுக்கு அப்படத்தின் வெளியீடு என்பது பூக்குழிக்குள் இறங்குவது போன்றது. வெளியிலிருந்து பார்க்கும் போது பூக்குழி என்பது பூவின் புதையல் போன்று தோன்றும். ஆனால் அருகில் சென்று பார்த்தால் தான் அது தீமிதி என தெரியவரும். அவருடைய முதல் படத்தில், அவரை அருமையான பூசாரி ஒருவர் அவருக்கு கை பிடித்து அழைத்து வந்தார். இந்த திரைப்படத்தில் அவருடன் பலமுறை தீமிதித்தவர்கள் உடன் இருந்தனர். தீ மிதிக்கும் போது அவருக்கு அருகில் இரண்டு பக்கங்களிலும் வேட்டியை மடித்துக் கொண்டு நின்றனர். தீ மிதிக்கும் போது ஏதேனும் தடுமாற்றம் ஏற்பட்டால் காப்பாற்றுவதற்காக தான் இந்த ஏற்பாடு. ஆனால் சூரி எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் நிதானமாக தீ மிதியில் இறங்கி நடந்து வந்தார்.

இந்தப் படத்தில் அவருடைய உழைப்பு அசாதாரணமானது. ஒவ்வொரு நொடியும் படத்தைப் பற்றியே நினைத்துக் கொண்டிருப்பார். இதனாலேயே அவர் திரைத்துறையில் மிக உயரத்திற்கு செல்வார். அதற்காக மனமார வாழ்த்துகிறேன்.

நீண்ட நாள் கழித்து தம்பி சசியுடன் மீண்டும் இந்த படத்தில் இணைந்து நடித்திருக்கிறேன்.

இந்த படத்திற்கு பின்னணி பேசும்போது, இயக்குநர் வெற்றிமாறன் என்னை சந்தித்து, ‘இந்தப் படத்திற்கு அனைத்தும் நல்லபடியாக அமைந்து விட்டது.’ என்றார். அவரிடமிருந்து இதுபோன்ற வாழ்த்து கிடைத்தவுடன் நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.

படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் துரை செந்தில்குமார்-  கலைஞர்களை தோழமையுடனும், புன்னகையுடனும் அணுகி பணியாற்ற வைத்த அனுபவம் மறக்க இயலாது.  இந்த திரைப்படத்தில் நானும் இருக்கிறேன் என்பது எனக்கு பெருமிதமாக இருக்கிறது. ” என்றார்.

நடிகை ரேவதி சர்மா பேசுகையில், ‌

” இது எனக்கு இரண்டாவது திரைப்படம். வெற்றிமாறன்- துரை. செந்தில்குமார் -சசிகுமார் -சமுத்திரக்கனி -சூரி போன்ற பிரபலங்களுடன் இணைந்து பணியாற்றிய அனுபவம் மறக்க இயலாததாக இருந்தது.  

நான் நடித்த முதல் திரைப்படமான ‘1947 ஆகஸ்ட் 14’  திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். என்னுடைய இரண்டாவது படமான ‘கருடன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலும் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டு சிறப்பித்திருக்கிறார். இதனை நான் பாக்கியமாக கருதுகிறேன்.

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி- அதிதி பாலனுடன் இணைந்து பணியாற்றும்போது அவரை சந்தித்து பேசி இருக்கிறேன். அவரும் இந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மே 31 ஆம்  தேதியன்று ‘கருடன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது .அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.

நடிகர் சசிகுமார் பேசுகையில், ”

இந்த படத்தில் நான் தான் கடைசியாக இணைந்தேன். படத்தில் ஏனைய நட்சத்திரங்கள் எல்லாம் தேர்வு செய்த பிறகு கடைசியாக என்னை அழைத்தார்கள். இயக்குநர் துரை. செந்தில்குமார் கதையை விவரித்தார். என் நண்பர் இரா. சரவணன், ‘இப்படத்தின் கதையைக் கேட்டிருக்கிறேன். நன்றாக இருக்கிறது. நீங்கள் நடிக்கலாம்’ என்றார். இயக்குநர் கதையை சொல்லி முடித்தவுடன் நன்றாக இருக்கிறதா? இல்லையா? என்று கூட கேட்கவில்லை. அதில் நடிக்க உங்களுக்கு சம்மதமா? என்று கூட கேட்கவில்லை. தயாரிப்பாளர் ஒரு தட்டில் பழங்கள் இனிப்புடன் வருகை தந்து அட்வான்ஸ் கொடுத்தார். அந்தத் தருணத்தில் படத்தைப் பற்றி சில சந்தேகங்கள் இருக்கிறது. அதை அதைப்பற்றி இயக்குநரிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே இந்த திரைப்படத்தில் நீங்கள் நடிக்கிறீர்கள் என்று சொல்லி, படக் குழுவினருடன் புகைப்படத்தை எடுத்து அதனை வெளியிட்டு விட்டனர். தயாரிப்பாளர் குமார் இந்த படத்தில் நான் நடிப்பேனோ..! நடிக்க மாட்டேனா..! என்ற சந்தேகத்தோடு இருந்திருக்கிறார். கதை கேட்ட பிறகு மனம் மாறி விடுவேன் என்று பதற்றம் அடைந்தார்.  உண்மை என்னவென்றால் இந்தப் படத்தின் கதை நன்றாக இருக்கிறதோ.. இல்லையோ.. என் நண்பன் சூரிக்காக இந்த படத்தில் நடிக்க வேண்டும் என முன்பே தீர்மானித்து விட்டேன்.

இயக்குநர் வெற்றிமாறன் சூரியை கதாநாயகனாக உயர்த்திருக்கிறார்.‌ சூரியின் வளர்ச்சிக்காக சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோர் இங்கு வருகை தந்திருக்கிறார்கள். இவர்களெல்லாம் சூரியின் நல்ல மனதிற்காகத்தான் வந்திருக்கிறார்கள்.

இவர்கள் எல்லோருக்கும் சூரிக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. இந்த எண்ணம் எனக்கும் இருந்தது.

சுந்தரபாண்டியன் படத்திற்கு பிறகு அவரோடு இணைந்து பணியாற்ற வேண்டும் என்று எண்ணியிருந்தேன். அந்தத் திரைப்படத்தில் அவர் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருப்பார்.

இந்தப் படம் நன்றாக வந்திருக்கிறது. நான் படத்தை பார்த்துவிட்டேன். சூரி இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படம் அனைவருக்கும் பிடிக்கும்” என்றார்.

இயக்குநர் துரை செந்தில்குமார் பேசுகையில்,

 ” இயக்குநர் பாலு மகேந்திராவிடம் பணியாற்றும்போது இயக்குநர் வெற்றிமாறன் எனக்கு சீனியர். நான் கடைசி உதவியாளர். அன்று முதல் இன்று வரை என்னை ஒரு சகோதரராகவே பாவித்து , அனைத்து வித ஆதரவுகளையும் வழங்கி, என் நிறை குறைகளை சுட்டிக்காட்டி என்னுடன் தொடர்ந்து பயணிப்பவர். அவருக்கு முதலில் நான் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரைத் தொடர்ந்து கலை இயக்குநர் துரைராஜ் அவர் மூலமாகத்தான் இந்தப் படத்தினை இயக்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்திற்காக 73 நாட்கள் படப்பிடிப்பை நடத்தினோம். அனைத்து நாட்களிலும் என்னுடன் இருந்து படப்பிடிப்புக்கு உதவிய துரைராஜுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.  

தயாரிப்பாளர் குமார்- தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றி அனுபவம் பெற்ற பிறகு படத்திற்கு தயாரிப்பாளராகியிருக்கிறார்.‌ அவரிடம் கதையை சொல்லி முடித்த பிறகு, 55 நாட்கள் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நிறைவு செய்துவிடலாம் என சொன்னேன். அதற்காக ஒரு பட்ஜெட்டை அவரிடம் சொன்னேன்.‌ படத்தில் நடிக்க வேண்டிய நடிகர்கள் குறித்து ஒரு பட்டியலை அவர் என்னிடம் சொன்னார். அதைக் கேட்கும் போது 55 நாட்கள் பட்ஜெட் என்ற விசயத்தை நினைவு படுத்தினேன். அப்போது அவர் படத்தை பிரமாண்டமாக உருவாக்குவோம் என்றார்.  படத்திற்கு இசை யார்? என்று கேட்டபோது, யுவன் சங்கர் ராஜா என்று சொன்னார். நான் மீண்டும் அவரிடம் 55 நாட்கள் + பட்ஜெட் என்று நினைவுபடுத்தினேன். மீண்டும் அவர் படைப்பை பிரம்மாண்டமாக உருவாக்குவோம் என்றார்.  படத்தை விளம்பரப் படுத்துவதற்காக தனியாக படப்பிடிப்பு நடத்துவோம் என்றார். அப்போது, ‘சார் ! பெரிய நட்சத்திர நடிகர்கள் நடிக்கும் படத்திற்கு தானே அதை செய்வார்கள்’ என்று சொன்னபோது, நம்முடைய படமும் பிரம்மாண்டமான படம் தான் என்றார்.‌ இப்படி படம் முழுவதும் நான் சொன்ன பட்ஜெட்டை விட அவர் ஒரு பட்ஜெட்டை சொன்னார். குறிப்பாக இடைவேளை காட்சியில் நடிப்பதற்காக ஆயிரம் நபர் தேவை. குறைந்தபட்சம் எழுநூறு நபராவது வேண்டும் என்றேன். அவர் ஆயிரம் நபர்களை அழைத்து வந்து நடிக்க வைத்தார்.  அதேபோல் படத்தில் இரண்டாம் பகுதியில் ஒரு ஐட்டம் சாங் வைக்கலாம் என்று திட்டமிட்டு, அதற்காக ஒரு பாடலையும் உருவாக்கினோம். ஆனால் அதனை படமாக்கவில்லை. ஒருமுறை படப்பிடிப்பு தளத்திற்கு தயாரிப்பு நிர்வாகி வந்த போது அவரிடம் இது குறித்து விவரித்தேன். அப்போது அவர் அந்த ஐட்டம் சாங் பாடலுக்கு மூன்று நடிகைகளை முதன்மையாக நடனமாட வைத்து பிரம்மாண்டமாக படமாக்கலாம் என தயாரிப்பாளர் சொல்கிறார் என்ற விவரத்தை என்னிடம் சொன்னார். இப்படி படம் நெடுகிலும் தயாரிப்பாளர் படத்தின் பட்ஜெட்டை உயர்த்திக் கொண்டே சென்றார். அவருடைய சூட்சமம் எனக்கு பிடித்திருந்தது.  படத்தின் பணிகள் தொடங்கும் போது இயக்குநரான என்னிடம் ஒரு பட்ஜெட்டை சொல்லிவிட்டு ஆனால் அவர் மனதில் அதைவிட பெரிய அளவில் திட்டமிட்டிருக்கிறார். அதை நோக்கி என்னையும், பட குழுவினரையும் சிறிது சிறிதாக அழைத்துச் சென்றார்.  இப்போது கூட இப்படத்தில் இசை வெளியீட்டு விழாவை ஆன்லைனில் நடத்துகிறோமா..! எனக் கேட்ட போது இல்லை சத்யம் தியேட்டரில் பிரம்மாண்டமாக நடத்துகிறோம் என்றார்.‌ இதை தொடர்ந்து படத்தின் வெளியீடு இருக்கிறது. அதையும் பிரம்மாண்டமாகவே செய்வார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.‌

படத்திற்காக சண்டைக் காட்சிகளை படமாக்கும் போது நாயகனின் கதாபாத்திரத்தை தவற விட்டு விடுவோம்.‌ அவர்கள் காட்சிகளில் வேறு மாதிரியாக நடித்திருப்பார்கள். சண்டை காட்சிகளின் போது வேறு மாதிரியாக நடிப்பார்கள்.‌ அதுபோல் இல்லாமல் இந்த படத்தில் சொக்கன் கதாபாத்திரம் எப்படியோ… அவனுக்கேற்ற வகையில் சண்டை காட்சிகளை வடிவமைத்திருக்கிறோம். அந்த கதாபாத்திரத்தின் நீட்சியாகவே அனைத்து சண்டை காட்சிகளையும் உருவாக்கி இருக்கிறோம். இதற்காக சண்டை பயிற்சி இயக்குநர் மகேஷ் மேத்யூக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

வெற்றிமாறன் சார் படத்தின் பணிகள் தொடங்கும்போதே சண்டைக் காட்சிகளை நன்றாக படமாக்குங்கள் என அறிவுறுத்தினார். படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து அவர் படம் பார்க்கும் போது சொன்ன ஒரே விசயம் படத்தில் சண்டை காட்சிகளை நன்றாக எடுத்திருக்கிறாய், என பாராட்டினார்.

நான் இதுவரை ஐந்து திரைப்படங்களை இயக்கி இருக்கிறேன் யாருடனும் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டதில்லை. இந்த படத்திற்கு பிறகு ஒளிப்பதிவாளர் ஆர்தர் வில்சனுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்புகிறேன்.‌ இதற்கான காரணத்தை வரும் மேடைகளில் விரிவாக சொல்கிறேன்.

இந்தத் திரைப்படத்தில் வடிவுக்கரசியையும் சேர்த்து ஐந்து நாயகிகள். அனைவரும் இந்த திரைப்படத்தில் அழுத்தமான வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஏனெனில் கதை அப்படித்தான் அமைந்திருக்கிறது.

சமுத்திரகனிக்கு தொலைபேசி மூலமாக கதை சொன்னேன். கதையைக் கேட்டதும் நடிக்கிறேன் என ஒப்புக்கொண்டார். அப்போதே எனக்குள் அவரிடம் உள்ள எனர்ஜி கிடைத்து விட்டது. அவர் தண்ணீர் போன்றவர். எந்த கதாபாத்திரத்தைக் கொடுத்தாலும் அதில் இயக்குநர் என்ன எதிர்பார்க்கிறார் என்பதை துல்லியமாக உணர்ந்து நடிப்பவர்.

இந்த படத்தின் பணிகள் தொடங்கும் போது முதல் பாசிட்டிவிட்டி உன்னி முகுந்தன் தான்.  படத்தின் கதையை எழுதி முடித்த பிறகு இந்த கதாபாத்திரத்திற்கு உன்னி முகுந்தனிடம் கேட்கலாம் என தயாரிப்பாளர் ஆலோசனை சொன்னார். அப்போது  ‘மாளிகாபுரம்’ எனும் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றிருந்தது.  அவர் பல கதைகளை கேட்டு எதிலும் நடிக்காமல் நல்ல கதைக்காக காத்துக் கொண்டிருந்தார்.  அந்தத் தருணத்தில் நாங்கள் அவரை சந்தித்தோம். இந்த கதையை கேட்டு முடித்தவுடன் நடிக்க ஒப்புக்கொண்டார்.‌ அவரும் தனுஷின் ‘சீடன்’ படத்திற்கு பிறகு பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் நடிக்கிறார். அவருக்குள்ளும் தமிழில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. படப்பிடிப்பு தளத்தில் அவர் வேட்டைக்கு செல்லும் புலியின் தாகத்துடன் இருந்தார்.‌

இந்தப் படத்தின் கதைக்கு இரு தூண்கள். அதில் ஒருவர் சசிகுமார். அவர் ஏற்று நடித்திருக்கும் ஆதி எனும் கதாபாத்திரம் தான் இப்படத்தின் மையப் புள்ளி.  இந்த கதாபாத்திரத்தில் அவர் நடிப்பாரா? மாட்டாரா? என்ற தயக்கம் எங்களிடமிருந்தது. ஆனால் சூரியின் நட்புக்காக ஒப்புக்கொண்டார். படப்பிடிப்பு தளத்தில் உன்னி முகுந்தன் புலி என்றால்.. சசிகுமாரை வேட்டைக்குச் செல்லும் சிங்கம் என்று சொல்லலாம்.

சிங்கத்திற்கும்,  புலிக்கும் இடையே சிக்காமல் தப்ப வேண்டிய வேட்டைக்காரர் சூரி.‌ படத்தை தொடங்கும் போது வெற்றிமாறன் சூரிக்காக நான் ஒரு அளவுகோலை உருவாக்கி இருக்கிறேன். அதனை நீயும் மீறி விடாதே, சூரியையும் மீற விடாதே என எச்சரித்தார். அதனால் படப்பிடிப்பு தளம் முழுவதும் சூரி முழுமையான அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்தார். மேலும் சூரியின் நிலைமை எனக்கு நன்றாக புரிந்தது. கையில் ஒரு கண்ணாடி கூண்டுடன் அதில் தங்க மீனை வைத்துக்கொண்டு வேகமாக ஓட வேண்டும் என்ற நிலையில் அவர் இருந்தார்.  அதனால் படத்தை பார்த்து பார்த்து நேர்த்தியாக செதுக்கி இருக்கிறோம்.

நானும் ஒரு இன்ட்ரோவெட். யுவன் சங்கர் ராஜாவும் ஒரு இன்ட்ரோவெட். அதனால் அதிகம் பேசிக் கொள்ளவில்லை. இருந்தாலும் படத்தில் அவருடைய உழைப்பு பெரிதாக பேசப்படும்.

சில படங்களில் எல்லா கதாபாத்திரங்களின் கோணத்திலிருந்தும் கதை அமையும் என எதிர்பார்ப்போம். அதற்கான வாய்ப்பு கிடைக்காது. ஆனால் இந்தத் திரைப்படத்தில் எல்லா கதாபாத்திரங்களின் கோணங்களில் இருந்தும் கதை பயணிக்கும். அது போன்று கதை அமைந்திருக்கிறது.  கதாபாத்திரங்களில் ஒவ்வொருவருடைய
கோணங்களிலிருந்தும் இந்த கதையை பார்க்கலாம். இதனை அந்த வகையில் நேர்த்தியாக உருவாக்கி இருக்கிறோம் என நினைக்கிறேன். மூன்றாண்டு இடைவெளிகளில் நான் கற்றுக்கொண்ட சில நல்ல விசயங்களையும் இதில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். இதற்காக உழைத்த அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ” என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசுகையில், ”

இயக்குநர் துரை செந்தில்குமார் – நடிகர் சூரி இணைந்து பணியாற்றும்போது ‘கருடன்’ படம் நன்றாக வரும் என்ற நம்பிக்கை இருந்தது.  

‘அது ஒரு கனாக்காலம்’ படத்தின் படப்பிடிப்பின் போது இயக்குநர் பாலு மகேந்திராவிற்கு உடல் நலமில்லை. சிக்கலான காலகட்டத்தில் பாலு மகேந்திராவுடன் 60 நாள், அவருடனே தங்கி அவருடைய உடல் நலத்தை பராமரித்து மீட்டெடுத்தார். அவரிடம் அப்போது இது எப்படி உன்னால் முடிந்தது? என ஆச்சரியத்துடன் கேட்டேன். ‘நம் வீட்டில் நம் தந்தைக்கு இப்படி ஏற்பட்டால்.. என்ன செய்வோமோ.! அதைத்தான் நான் இங்கு செய்தேன்’ என்றார்.‌ இதுதான் செந்தில்.  படப்பிடிப்பு தளத்தில் எந்தவித சிக்கலையும் உருவாக்காமல் இயல்பாகவும் அன்பாகவும் பழகக்கூடியவர்.

விடுதலை படத்திற்கு முன்னர் இரண்டு அல்லது மூன்று முறை தான் சூரியை சந்தித்து பேசி இருக்கிறேன். விடுதலை படத்தின் பணிகள் தொடங்கும் போது தான் அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது.  அதன் பிறகு என்னிடம் தயாரிப்பாளர் குமாரை அறிமுகப்படுத்தி ‘கருடன்’ என்று ஒரு படத்தை தயாரிக்க திட்டமிட்டிருக்கிறார்.‌ செந்தில் தான் இயக்கவிருக்கிறார் என என்னிடம் சொன்ன போது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

செந்தில் என்னை சந்தித்து இப்படி ஒரு கதாபாத்திரம்… இப்படி ஒரு நடிகர்… என இந்தப் படத்தைப் பற்றி நிறைய விசயங்களை சொல்லிக் கொண்டே இருப்பார். அப்போது கதை விவாதத்தின் போது ஆலோசனை சொல்வது போல் இதனை இப்படி செய்து கொள்ளலாம்.. அதனை அப்படி செய்து கொள்ளலாம்.. என்று நான் சொன்னேன்.‌

அதன் பிறகு ஆதி கதாபாத்திரத்திற்கு சசிகுமாரை நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறோம் என்று சொன்னபோது, முதலில் வியந்தேன்.‌ அவர் ஒப்புக் கொள்வாரா..! என்ற தயக்கமும் இருந்தது. ஆனால் அவர் நடிக்க ஒப்புக்கொண்டார் என்ற தகவல் கிடைத்தவுடன் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது.  அப்போதும் அவர் சூரிக்காகத்தான் இந்த கதையை நடிக்க ஒப்பு கொண்டிருக்கிறார் என்று சொன்னார்கள். அப்படி சொல்வதற்கும், அதை  செய்வதற்கும் ஒரு மனசு வேண்டும். இதற்காக நான் சசிக்குமாரை மனதார பாராட்டுகிறேன்.  

படம் பார்த்துவிட்டேன். படத்தில் சசிகுமாருக்கு அழுத்தமான வேடம். அது அவருக்காகவே உருவாக்கப்பட்ட சிறப்பான கதாபாத்திரமாக அமைந்திருக்கிறது. அவர் மட்டுமல்ல அனைவரும் இந்த படத்தில் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.  இந்தப் படத்தில் சமுத்திரக்கனி ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரத்தின் மூலம் கதைக்கு ஒரு நம்பகத்தன்மை கிடைத்திருக்கிறது.  இந்த மாயாஜாலத்தை ஏற்படுத்திய சமுத்திரக்கனிக்கும் என்னுடைய பாராட்டுக்கள். படத்தில் இடம் பெறும் சண்டைக் காட்சிகளும் சிறப்பாக இருக்கிறது.  இந்த திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துக்கள். படத்தின் தயாரிப்பாளர்.. இயக்குநர் செந்தில் விவரித்ததை போல் சிறந்த தயாரிப்பாளரா.. என தெரியவில்லை ஆனால் படைப்பின் மீது அக்கறை கொண்ட தயாரிப்பாளர் என்று மட்டும் தெரிய வருகிறது. அவருக்கும் இந்த படத்தின் மூலம் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்.” என்றார்.

நடிகை வடிவுக்கரசி பேசுகையில், ” இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தமைக்காக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இதை தவற விட்டிருந்தால்… என்னுடைய செல்ல பிள்ளைகளை மேடையில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்காது. சூரி போன்ற திறமையான நடிகரை கண்டறிந்து வழங்கியதற்காக இயக்குநர் வெற்றி மாறனுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்படத்தில் தாமதமாகத்தான் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. நாளை படப்பிடிப்பு என்றால் அதற்கு முதல் நாள் இரவு தான் நான் நடிப்பதற்காக தேர்வு செய்யப்பட்டேன். பிரபஞ்சம் கொடுக்கும் அதிர்ஷ்டத்தை வேண்டாம் என்று சொல்லக்கூடாது என்பதற்காக சென்னையிலிருந்து காரில் கிளம்பி இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்குச் சென்றேன்.

ஆலயத்தில் படபிடிப்பு நடைபெற்ற போது முதலில் இயக்குநரை சந்தித்து,  இந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைப்பதற்காக என்னை தேர்வு செய்தமைக்கு நன்றி என்றேன். இந்தத் திரைப்படத்தில் உன்னி முகுந்தனின் அப்பத்தாவாக நடித்திருக்கிறேன். அவருக்கு நண்பர் சூரி. இவர்கள் இருவருக்கும் நண்பர் சசிகுமார்.

படப்பிடிப்பு தளத்திற்கு சென்ற பிறகுதான் இந்தத் திரைப்படத்தில் சசிகுமார், சமுத்திரக்கனி போன்றவர்கள் நடிக்கிறார்கள் என்பதை அறிந்து ஆச்சரியமடைந்தேன்.  

இந்த திரைப்படத்தில் ஆர்தர் வில்சன் ஒளிப்பதிவாளர் என்றவுடன் எனக்கு நிம்மதி பிறந்தது. ஏனெனில் அவர் ஒப்பனை செய்து கொள்ள விட மாட்டார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்தபோது கிடைத்த ஓய்வு நேரத்தில் தான் சூரி நடித்த ‘விடுதலை’ திரைப்படத்தை தொலைக்காட்சியில் பார்த்தேன். அவருடைய நடிப்பைக் கண்டு வியந்து போனேன். சில நாட்கள் கழித்து படப்பிடிப்பு தளத்தில் சூரியை சந்தித்தவுடன் அவரை கட்டிப்பிடித்து பாராட்டினேன்.‌

படப்பிடிப்பின் போது சூரி நடித்துக் கொண்டிருப்பார். அப்போது இயக்குநர், ‘சூரி தெரிய வேண்டாம். சொக்கன் தான் தெரிய வேண்டும்’ என்பார்.  அந்த அளவிற்கு இயக்குநர்.. நேர்த்தியாக கலைஞர்களிடமிருந்து வேலை வாங்கினார்.

சமீப காலங்களில் நான் மிகவும் மகிழ்ச்சியுடன் பணியாற்றிய திரைப்படம் இது. இதே சந்தோஷத்துடன் விரைவில் சிவகார்த்திகேயன் உடனும் ஒரு படத்தில் நடிப்பேன் என எதிர்பார்க்கிறேன்.

‘இடம் பொருள் ஏவல்’ எனும் படத்தில் பதினைந்து நாட்கள் ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி உடன் நடித்திருக்கிறேன். அவர் மிகவும் இனிமையானவர்.‌

ஒரு திரைப்படத்தில் அனைவரும் உற்சாகத்துடனும், மகிழ்ச்சியாகவும் பணியாற்றும்போது எங்களை அறியாமல் எங்களுடைய ஆசிகள் இந்த படத்திற்கு உண்டு. இவை ரசிகர்களிடமும் பரவி படம் வெற்றி அடையும். இதனை மேலும் வெற்றி பெற ரசிகர்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்து இது திரைப்படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.

‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி பேசுகையில், ”

இந்த நிகழ்வில் வடிவுக்கரசி அவர்களின் பேச்சு பிரமாதமாக இருந்தது. அவருடைய பேச்சில் ஒரு இயக்குநர் படப்பிடிப்பு தளத்தை எவ்வளவு உற்சாகமாக .. சௌகரியமாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை உறுதிப்படுத்தியது.

வெற்றிமாறன் செந்தில்குமாரை பற்றி சொல்லும் போது சக மனிதர்களை நேசிக்கும் மிக இனிமையான மனிதர்.‌ நல்லவர் வல்லவர் எனக் குறிப்பிட்டார். இதனால் விரைவில் செந்தில்குமாருடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன்.  

யாராவது ஒருவர் வெற்றி பெற்று விட்டால் அவரது தொடக்க காலகட்டத்தில் தான் முன்னேறுவதற்கு ஊக்கமளிப்பார்கள். அதன் பிறகு மறந்து விடுவார்கள். ஆனால் சூரி நடிகராக அறிமுகமாகி இந்த அளவிற்கு உயர்ந்திருப்பது பெரிய சாதனை தான்.

காமெடியனாக இருக்கும்போது ஒரு காட்சியை கொடுத்தால்.. அதை அவருடைய கோணத்தில் உள்வாங்கி எப்படி திரையில் தோன்றி சிரிக்க வைப்பது என யோசித்து.. அந்தக் காட்சியின் ஏற்ற இறக்கங்களை கணித்து அதன் பிறகு இயக்குநருடன் பேசி நடிப்பது என்பது ஒவ்வொருவரும் பயன்படுத்தும் ஒரு உத்தி. நானும், சூரியும் ஒரு சில படங்களில் மட்டும் தான் இணைந்து நடித்திருக்கிறோம்.

ஒரு படத்தில் காமெடிக்காக மட்டுமே யோசித்து நடித்த நடிகர்..‌ அதில் பெற்ற பயிற்சியை மனதில் வைத்துக் கொண்டு, குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு கதையின் நாயகனாக நடிக்க வேண்டும் என விரும்புகிறார்..இதற்காக சூரியை பாராட்டுகிறேன். விடுதலை படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் தயாரிப்பில் ஒரு படம் நடித்திருக்கிறார். தொடர்ந்து அவர் பல உயரங்களை தொடுவார். இதற்கு இந்த படத்தின் முன்னோட்டத்தில் இடம் பிடித்த இயற்கையும் கடவுளும் அவருக்கு துணையாக இருக்கும் என்ற வசனங்களே சான்று. அவருடைய அடுத்தடுத்த படங்களும் அதற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.  சூரியைப் பார்த்து மிகவும் நான் ரசிக்கிறேன். நம் மண்ணுக்கேற்ற முகம். கருப்பான அழகன்.‌ மேலும் மேலும் வளர வேண்டும் என வாழ்த்துகிறேன்.‌ ” என்றார்.

சிவகார்த்திகேயன் பேசுகையில்,

” படத்தின் முன்னோட்டம், பாடல் காட்சிகள் அனைத்தும் சிறப்பாக இருந்தது. இப்படத்தின் இயக்குநர் துரை செந்தில் குமாருடன் ‘எதிர்நீச்சல்’ மற்றும் ‘காக்கிச்சட்டை’ ஆகிய படத்தில் இணைந்து பணியாற்றி இருக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் ஒரு புன்னகையுடன் தான் வேலை செய்வார். யாரையாவது திட்ட வேண்டும் என்றாலும் கூட சிரித்துக் கொண்டே தான் திட்டுவார். அவரின் இயக்கத்தில் தயாராகி இருக்கும் கருடன் திரைப்படம் வெற்றி படமாக அமைய வேண்டும் என வாழ்த்துகிறேன்.

அவர் என்னை சந்தித்து முதல் முதலாக கதையை சொன்ன போது.. நான் உதவி இயக்குநராக பணியாற்றியதால் … என்னிடமிருந்த சில கதைகளை அவரிடம் சொல்லி இருக்கிறேன்.  வேறு யாரிடமும் கதையை சொல்லவில்லை. ஏனெனில் அவருடன் பேசும்போது ஒரு சௌகரியமான சூழலை ஏற்படுத்தி தருவார்.  வடிவுக்கரசி அம்மா குறிப்பிட்டது போல் எப்போதும் எல்லோரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதில் செந்தில் குமார் கவனமாக இருப்பார். அந்த விசயத்தில் அவரை யாராலும் வெல்ல முடியாது.

படத்தின் தயாரிப்பாளர் குமார் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் படப்பிடிப்பின் போது தயாரிப்பு நிர்வாகியாக பணியாற்றியவர். அப்போதே அவர் படப்பிடிப்பு பணிகள் எதிலும் தாமதம் ஏற்படக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பார். சிக்கனமாக செலவு செய்வார். தயாரிப்பாளர் வேறு ஒருவர் என்ற போதே அவர் சிக்கனமாக செலவு செய்தார் என்றால்..  இப்போது அவரே தயாரிப்பாளர் என்பதால், இந்த படத்திலும் நல்ல முறையில் தயாரித்திருப்பார்.. இந்த படம் வெற்றி அடைந்து மேலும் அவர் படங்களை தயாரிக்க வேண்டும். அதிலும் குறிப்பாக சூரியை வைத்து அவர் மேலும் பல படங்களை தயாரிக்க வேண்டும்.

சூரி – உண்மையிலேயே எனக்கு அண்ணன் தான். அவரை எப்போதும் ஆத்மார்த்தமாக அண்ணன் என்றுதான் அழைப்பேன். அவரும் என்னை எப்போதும் ஆத்மார்த்தமாக தம்பி என்று தான் அழைப்பார். இது சினிமாவை கடந்த நட்பு.

சூரியை முதன்முதலாக கதையின் நாயகனாக நீங்கள் நடிக்கலாம் என்று சொல்லி, அதற்காக அவரிடம் கதையும் சொன்னது நான்தான். ‘சீம ராஜா’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது கிடைத்த இடைவெளியில் நீங்கள் ஏன் கதையின் நாயகனாக நடிக்க கூடாது? என கேட்டேன்.  அப்போது அதற்கு சிரித்துக் கொண்டே மறுப்பு தெரிவித்தார்.

அதன் பிறகு ஒரு நாள் என்னை சந்தித்து ‘தம்பி! வெற்றிமாறன் இயக்கத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறேன்’ என்றார். உடனே வாழ்த்துக்கள் தெரிவித்தேன். வெற்றிமாறன் படத்தில் நடித்தால்… உங்களது திரையுலக பயணத்திலேயே பெரிய திருப்புமுனை ஏற்பட்டுவிடும். பேசாமல் நடித்து விடுங்கள் என்று சொன்னேன். அப்போது படத்தின் கதை என்ன என்று எனக்குத் தெரியாது.  ஆனால் சூரியின் நடிப்பு திறமை பற்றி எனக்கு நன்றாக தெரியும்.  ஏனெனில் அவருடன் நிறைய படங்களில் நடித்திருக்கிறேன். அவருடன் நிறைய நேரம் செலவழித்து இருக்கிறேன்.

காமெடியாக நடிக்கும் ஒருவரால் நிச்சயமாக உணர்வுபூர்வமாக நடிக்க முடியும். இதனால் காமெடியாக நடிக்கும் நடிகர்களை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். இதற்கு சிறந்த உதாரணம் சூரி அண்ணன்.

வெற்றிமாறன் அண்ணன் சூரிக்கு ‘விடுதலை’ படத்தின் மூலம் புதிய அடையாளத்தை கொடுத்திருக்கிறார்.  நாங்கள் தயாரித்திருக்கும் கொட்டுகாளி படத்தில், சிறிதளவு கூட குறையாமல் அதற்கு ஒரு படி மேலே தான் சூரியை பயன்படுத்தி இருக்கிறோம் என நான் நம்புகிறேன்.  

இந்த கருடன் திரைப்படத்தில் சூரி ஆக்சன் காட்சிகளில் அதிரடியாக நடித்திருக்கிறார். அவர் ஆக்சன் காட்சிகளில் நடிப்பது புதிதல்ல. ஏனெனில் எப்போதும் அவர் உடற்பயிற்சி உடற்பயிற்சி என அந்த மனநிலையில் தான் இருப்பார்.  அதனால் ஆக்ஷன் காட்சிகளில் நடிப்பதற்கு அவர் எப்போதோ தன்னை தயார் படுத்திக் கொண்டு விட்டார். இப்போது அவரை தேடி அதற்கான கதைகள் வந்து கொண்டிருக்கிறது.  இப்போது நடிகர் சூரி ‘இனி ஹீரோவாகத்தான் நடிப்பேன்’ என்பதில் தெளிவாக இருக்கிறார். நிறைய நேரம் இன்ஸ்டாகிராமில் தனக்கான கதாநாயகியைத் தேடிக் கொண்டிருக்கிறார்.  

நானும் சூரியைப் போல் சமுத்திரக்கனி மற்றும் சசிகுமார் உடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.  அதற்கான வாய்ப்பு விரைவில் சாத்தியமாகும் என நம்புகிறேன்.  

‘கருடன்’ திரைப்படம் மே 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் ரசிக்கும் வகையிலான ரூரல் என்டர்டெய்ன்மென்ட் திரைப்படமாக இது இருக்கும் ” என்றார்.

நடிகர் சூரி பேசுகையில்,

”இந்த தம்பிக்காக வாழ்த்த வருகை தந்திருக்கும் அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும், அனைத்து அண்ணன்களுக்கும், தம்பிகளுக்கும் நன்றி. இதுபோன்றதொரு மேடை மீண்டும் அமையுமா? என தெரியாது எனக்கு அமைந்திருக்கிறது. இதுவே பதட்டமாக இருக்கிறது. இந்த மேடை இந்த படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதையாக கருதுகிறேன்.

விடுதலைக்கு முன் – விடுதலைக்கு பின் என இந்த சூரியின் வாழ்க்கையை மாற்றி அமைத்த இயக்குநர் வெற்றிமாறனுக்கு இந்த நேரத்திலும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் கதையின் நாயகனாக எனக்கும் ஒரு பங்கு இருக்கிறது என்று உரிமையுடன் நிற்கிறேன் என்றால்… பெருமிதத்துடன் இந்த மேடையில் நிற்கிறேன் என்றால்.. அதற்குக் காரணம் வெற்றி அண்ணன் தான். விடுதலை படத்தில் நடித்த போது கிடைத்த அனுபவங்களால் தான் இந்த கருடன் படமே உருவானது.‌ அதுதான் உண்மை.  

இந்தியாவின் எங்கு சென்று டீ குடித்தாலும் அங்கு கிடைக்கும் பேப்பரில் சேது மாமாவின் முகம் இருக்கிறது.‌ ரூபாய் நோட்டில் எத்தனை மொழி இருக்கிறதோ.. அத்தனை மொழிகளிலும் சேது மாமா நடித்திருக்கிறார். இவர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்.

கதையெல்லாம் எழுதி முடித்த பிறகு இந்த வேடத்திற்கு சசிகுமார் தான் பொருத்தமாக இருப்பார் என இயக்குநர் சொன்னவுடன் அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி. ஆனால் அவரிடம் இதை எப்படி கேட்பது என்று தான் தயக்கம் இருந்தது.‌ அப்போது நான் தான் அவரிடம் கேட்டுப் பார்க்கலாம் என்று சொன்னேன். ‘பழக்க வழக்கத்திற்காக மதுரைக்காரன் கொலை கூட செய்வான்’ என்று விளையாட்டாக சொன்னேன்.  உடனே அந்த பொறுப்பை என்னிடமே கொடுத்து விட்டார்கள். அதன் பிறகு இயக்குநர் சரவணனிடம் பேசினோம்.  அவர்தான் சசிகுமாரிடம் பேசினார்.‌ அதன் பிறகு என்னிடம் ‘உனக்காக சசிகுமார் நடிக்க தயார்’ என்ற விவரத்தை சொன்னார். அதன் பிறகு சசிகுமார் இயக்குநரிடம் கதை கேட்டார்.  கேட்டதும் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். இதற்காக சசிகுமார் அண்ணனுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தம்பி சிவகார்த்திகேயன் சினிமாவை கடந்து என்னுடைய சிறந்த நண்பர் என்னுடைய குடும்பத்தினர் அனைவருக்கும் சிவகார்த்திகேயனை பிடிக்கும். விடுதலைப் படத்தில் கதையின் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்தவுடன் முதலில் என்னுடைய மனைவியிடமும் அதன் பிறகு தம்பி சிவகார்த்திகேயன் இடம் தான் பகிர்ந்து கொண்டேன். கேட்டவுடன் தம்பி மிகவும் சந்தோசமடைந்தார்.‌  இந்த வாய்ப்பு என்பது அனைவருக்கும் கிடைக்காது. உங்களுக்கு கிடைத்திருக்கிறது. இந்த படத்தில் நடித்த பிறகு உங்களுடைய தோற்றமே மாறிவிடும் என்று நம்பிக்கை கொடுத்தார். அத்துடன் நிற்காமல் ‘கொட்டு காளி’ படத்தைக் கொடுத்து நீங்கள் கதையின் நாயகனாகவே தொடருங்கள் என்று சொல்லி இருக்கிறார். அந்தப் படம் இன்று உலக நாடுகள் முழுவதும் சுற்றிக்கொண்டு இருக்கிறது.

கொட்டுக்காளி படத்தைப் பற்றி இயக்குநர் வெற்றிமாறன் அண்ணனிடம் சொன்னேன். அவர்தான் வினோத் அற்புதமான இயக்குநர். இந்தியாவில் தலை சிறந்த இயக்குநராக வருவார். அவரை தவற விட்டு விடாதே என்றார்.

விடுதலை படத்திற்குப் பிறகு வேறு இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்தால் அவர்கள் எப்படி இயக்குவார்கள் என்பது எனக்கு நிச்சயமாக தெரியாது. என்னை அவர்கள் கதாநாயகனை தான் பார்ப்பார்கள்.  தனுஷ் சார் ஒரு படத்தில் ‘என்னையெல்லாம் பார்த்த உடனே பிடிக்காது. பார்க்கத்தான்  பார்க்கத்தான் பிடிக்கும்’ என்று சொல்லி இருப்பார். ஆனால் என்னை ‘பார்க்க பார்க்க பார்க்க பார்க்க தான் பிடிக்கும்’ ஆனால் நான்கு படத்தை இயக்கிய இயக்குநர் துரை செந்தில்குமார், வெற்றிமாறன் கேட்டுக்கொண்டதற்காக படப்பிடிப்பு தளத்தில் வருகை தந்து பணியாற்றினார்.   படப்பிடிப்பின் போது அவருடைய நேர்த்தியான உழைப்பு எனக்கு பிடித்திருந்தது. அதனால் அவரது இயக்கத்தில் நடிக்க சம்மதித்தேன்.‌ அதேபோல் படப்பிடிப்பு தளத்திலும் என்னை சௌகரியமாக பணியாற்ற அனுமதி அளித்தார் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் ” என்றார். 


https://www.youtube.com/watch?v=B2yC1jpAYvQ
 

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.