2011 ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மெளனகுரு’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.அப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான சாந்தகுமார் கவனத்துக்கு ஆளானார்.

2019 ஆம் ஆண்டு சாந்தகுமாரின் இரண்டாவது படமான ஆர்யா நடித்த ‘மகாமுனி’ வெளியானது.இப்படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்போது, இயக்குநர் சாந்தகுமாரின் மூன்றாவது படம் தயாராகியிருக்கிறது.

ரசவாதி – தி அல்கெமிஸ்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்தப்படத்தில், அர்ஜுன் தான் நாயகனாகவும், தன்யா ரவிச்சந்திரன் நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள்.இவர்களோடு மலையாள நடிகர் சுஜித் சங்கர்,ஜி.எம்.சுந்தர்,ரேஷ்மா வெங்கடேஷ், சுஜாதா, ரிஷிகாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

எஸ்.எஸ்.தமன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சரவணன் இளவரசு மற்றும் சிவகுமார் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். வி.ஜே.சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்ய, சிவராஜ் கலை இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். யுகபாரதி பாடல்கள் எழுத, தபஸ் நாயக் ஒலிக்கலவையை மேற்கொண்டுள்ளார். ஆக்‌ஷன் பிரகாஷ் சண்டைக்காட்சிகளை வடிவமைக்க், சதீஷ் கிருஷ்ணன் நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

இப்படம் மே 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சக்தி பிலிம் பேக்டரி சார்பில் பி.சக்திவேலன் தமிழ்நாடு முழுவதும் படத்தை வெளியிடுகிறார்.

இந்நிலையில் இயக்குநர் சாந்தகுமார் படம் பற்றிப் பகிர்ந்து கொண்டதாவது….

அல்கெமிஸ்ட் என்ற பெயரில் நாவல் இருக்கிறது. ஆனால், இந்தப் படத்தின் கதைக்கும் அந்த நாவலுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சினிமாவில் இதுவரை அல்கெமிஸ்ட் என்ற தலைப்பு பயன்படுத்தவில்லை அதனால் அதைப் பயன்படுத்தியிருக்கிறேன்.

மெளனகுரு படம் முடித்துவிட்டு மகாமுனி படத்தின் திரைக்கதை எழுதுவதற்காக கொடைக்கானலில் ஒருவாரம் தங்கலாம் என்று சென்றேன். ஆனால், அங்கு ஐந்து மாதம் தங்கியிருந்தேன். அங்கு நான் தங்கியிருந்த நாட்கள், எனது கொடைக்கானல் அனுபவம் மூலம் எழுதப்பட்ட கதை தான் இது. படத்தில் ஐந்து முக்கியமான கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள். அந்தக் கதாபாத்திரங்களின் பயணத்தை உணர்வுப்பூர்வமாகச் சொல்லியிருக்கிறேன்.

கொடைக்கானலில் 30 வயதில் ஒரு சித்த மருத்துவர் அமைதியான வாழ்க்கை நடத்தி வருகிறார். ஆனால், அவரது கடந்த கால விஷயம் ஒன்று அவரது ஆன்மாவை துளைத்துக் கொண்டிருக்கிறது. அந்தச் சமயத்தில் தனது ஐடி வேலையை விட்டுவிட்டு அமைதியான வாழ்க்கைக்காக இந்த மலைப் பகுதியில் வந்திறங்கும் புதிய பெண் ஒருத்தியைச் சந்திக்கிறார். கடந்த கால கஷ்டங்கள் அவருக்குத் தீரும்போது, அங்கிருக்கும் உள்ளூர் இன்ஸ்பெக்டரால் ஏற்படும் பிரச்சினைகளை சந்திக்கிறார் அதன்பின் என்னவெல்லாம் நடக்கின்றன? என்பதுதான் படம்.

ரசவாதி படத்தில் ஆக்‌ஷன், திரில்லர், காதல் என அனைத்தும் இருக்கின்றன. என் படங்களில் ரொமான்ஸ் காட்சிகள் அதிகம் இருக்காது, வைக்கக் கூடாது என்பதில்லை, கதை அதைக் கேட்கவில்லை. ஆனால், இந்தக் கதையில் அதிகமான ரொமான்ஸ் காட்சிகள் இருக்கின்றன. கதைக்கு அது தேவைப்படுகிறது. நாயகன் அர்ஜுன் தாஸ் சித்த மருத்துவராக நடித்திருக்கிறார். இரண்டு விதமான தோற்றத்தில் நாயகனைக் காட்ட வேண்டும், அதற்கு அர்ஜுன் தாஸ் சரியாக இருப்பார் என்று தோன்றியதால் தான் அவரை நாயகனாகத் தேர்ந்தெடுத்தேன். அவர் இதற்கு முன்பு இதுபோன்ற அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், அதன் சாயல் இந்த படத்தில் இருக்காது, படம் பார்க்கும் போது உங்களுக்குத் தெரியும்.

மலையாள நடிகர் சுஜித் சங்கர் முக்கியமான வேடத்தில் நடித்திருக்கிறார்.அவர் இதுவரை இவ்வளவு பெரிய வேடத்தில் நடித்ததில்லை.அவருடைய நடிப்பு நிச்சயம் வியப்பைத் தரும். படப்பிடிப்புத் தளத்தில் அவரது நடிப்பைப் பார்த்துக் கை தட்டினார்கள் திரையிலும் அது பிரதிபலிக்கும்.

இந்தப்படத்தில் இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் உருவெடுத்ததற்குக் காரணம் சுதந்திரம் தான். சுதந்திரமாக இயங்கலாம் என்று முடிவு செய்து தான் தயாரிப்பில் இறங்கினேன். நான் எழுத்துப் பணியை முடித்துவிட்டுப் படப்பிடிப்புக்குச் செல்வதால், எவ்வளவு நாட்களில் படத்தை முடிப்பேன் என்பது எனக்கு முன்பே தெரிந்துவிடும். அதனால் தயாரிப்பாளராக எனக்கு எந்தச் சிரமும் இல்லை. 50 நாட்களில் ரசவாதி படத்தை முடித்துவிட்டேன். தயாரிப்பாளராகத் தொடர்வேனா என்றால் அது எனக்குத் தெரியாது, ஆனால் நான் எழுதுவதையும், இயக்குவதையும் தான் விரும்புகிறேன். அதைத் தொடர்ந்து செய்துகொண்டிருப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.